வியாழன், 8 அக்டோபர், 2015

அன்புமணி மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு! உபியில் தனியார் மருத்துவ....

மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் உள்ள இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் சலுகை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008-9 ஆண்டு காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேட்டில் அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியாவின் மத்தியப் புலனாய்வுத் துறை பதிவுசெய்த இரு வழக்குகளில் சிபிஐ நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் இந்திய குற்றவியல் சட்டத்தின்படியும், கிரிமினல் சதி, ஏமாற்றுதல், மோசடி ஆகியவை நடந்ததற்கான முதற்கட்ட ஆதாரம் இருப்பதால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகளைப் பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் 2004க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது உத்தரப்பிரதேசத்தில் பரேலியில் உள்ள ரோஹில்கந்த் மருத்துவக் கல்லூரிக்கும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் இன்டக்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராயச்சி மையத்திற்கும் சாதகமாக செயல்பட்டதாக இரண்டு வழக்குகளை சிபிஐ பதிவுசெய்திருக்கிறது.
ரோஹில்கந்த் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியைப் புதுப்பிப்பதற்கும் இன்டக்ஸ் மருத்துவக் கல்லூரியில் போதுமான வசதிகள் இல்லாத நிலையிலும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதிலும் சலுகை காட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தற்போது அன்புமணி ராமதாஸ் மீது வழக்குகளைப் பதிவுசெய்ய நீதிமன்றம் அனுமதியளித்திருக்கும் நிலையில், இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த இரண்டு வழக்குகளிலுமே குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள், பிணையில் உள்ளனர்.
2016ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸை பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருக்கும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளியாகியிருக்கிறது. bbc.tamil.com

கருத்துகள் இல்லை: