செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தமிழ் திரைப்பட உலகின் முதல் புரட்சிக்காரர்

தமிழ் சினிமா முன்னோடிகள் - புரட்சி இயக்குனர் - கே.சுப்பிரமணியம்-தொடர் 9 இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஸ்டுடியோ உரிமையாளர் ஆகிய பன்முக ஆளுமை கொண்ட இயக்குநர் கே.சுப்பிரமணியம் தமிழ் திரைப்பட உலகின் முதல் புரட்சிக்காரர் மொத்தம் 14 படங்களில் மட்டுமே நடித்து தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் எம்.கே. தியாகராஜ பாகவதர். அவரை நாடக மேடையில் இருந்து தேடிக் கண்டுபிடித்து தனது திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் கே.சுப்பிரமணியம். புரட்சி இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் முதல் படம் ''பவளக்கொடி" அந்நாளில் புகழ்பெற்றிருந்தது, காரைக்குடி ஏ.நாராயணனின் ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் படத்தயாரிப்பு நிறுவனம். பம்பாய் ஹோக் ஹாப்பூர் நகரங்களில் தயாரிக்கப்பட்டு, சென்னை விநியோகத்திற்கு அனுப்பப்பட்ட படத்தயாரிப்புகளோடு ஒருகட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற இயலவில்லை.
அதனால், அந்த நிறுவனம் நொடிய ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் உருவான 'அசோசியேட்டட் ஃபிலிம்ஸ்" என்ற படத்தயாரிப்பு ஸ்தாபனமும் நஷ்டத்தில் செயலற்று போய்விட்டது. இதைக் கேள்வியுற்ற நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராவ்பகதூர் கே.பி.வெங்கடராம அய்யர் என்பவர், தன் பொறுப்பில் அதை எடுத்து நடத்தினார். இந்த நிறுவனத்தில் பணியாற்ற கும்பகோணம் பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவரை நியமித்தார் வெங்கட்ராம அய்யர்.

அந்த இளைஞரும் ஒரு வழக்கறிஞர்தான். இருந்தாலும், அவருக்கு சினிமா மீது ஒருவித ஈர்ப்பு. இதனால் வழக்கறிஞர் தொழிலை கைவிட்டு சினிமாவில் இயங்க விரும்பினார். பாபநாசம் கிருஷ்ணசாமி சுப்பிரமணியம் என்று அழைக்கப்பட்ட அவர்தான் பின்னாளில் தமிழ் சினிமாவின் முதல் புரட்சிகர இயக்குநர் என்ற புகழுக்குரிய டைரக்டர் கே.சுப்பிரமணியம். பாபநாசம் என்ற ஊரில் சி.எஸ்.கிருஷ்ணசாமி- வெங்கலட்சுமி என்ற தம்பதிக்கு 1904ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ந் தேதி (20.4.1904) மகனாக பிறந்தவர் சுப்ரமணியம்.
டைரக்டர் கே.சுப்பிரமணியம்

பின்னாளில் முதலாளி கே.பி.வெங்கடராம அய்யரின் பேத்தி மீனாட்சியை மணந்து அக்கம்பெனியின் முக்கிய பொறுப்பாளராக மாறினார். கே. சுப்பிரமணியம்தான் புகழ்பெற்ற இயக்குநர் ராஜா சாண்டோவை பாம்பேயிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து அசோசியேட்டட் ஃபிலிம்ஸில் வேலையில் சேர்த்தவர். ராஜா சாண்டோ இக்கம்பெனிக்கான 'அநாதைப்பெண்' 'பேயும் பெண்ணும்' 'உஷா சுந்தரி' ஆகிய மௌனப் படங்களை சென்னையில் தயாரித்தவர்.

இந்தப் படத்தயாரிப்பின்போது ராஜா சாண்டோவிடம் உதவி டைரக்டராக கே.சுப்பிரமணியம் பணியாற்றி சினிமா தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தார். அவருடன் இணைந்து பேயும் பெண்ணும் (1930), அநாதைப்பெண் (1930), இராஜேஸ்வரி (1931), உஷாசுந்தரி (1931) ஆகிய ஊமைப் படங்களில் பணியாற்றினார்.

1934-ல் 'பவளக்கொடி' என்ற நாடகம் காரைக்குடி வட்டாரத்தில் வெற்றிகரமாக நடந்துவந்தது. எஸ்.எம்.லட்சுமண செட்டியார் என்கிற லேனா செட்டியார் மற்றும் அழகப்ப செட்டியார் இருவரும் கூட்டுசேர்ந்து நடத்திய இந்த  நாடகத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரும் எஸ்.டி.சுப்புலட்சுமியும் இணைந்து நடித்தனர். இருவரின் உணர்ச்சிகரமான நடிப்பால் இந்த நாடகம் தொடர்ந்து பல மாதங்கள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது. படம் தயாரிக்கும் எண்ணத்தில் இருந்த கே.சுப்பிரமணியம், லேனா செட்டியாருடன் சேர்ந்து ஒருநாள் அந்த நாடகத்தை காரைக்குடிக்கு சென்று பார்த்தார். அன்றே பவளக்கொடி நாடகத்தைப் படமாகத் தயாரிக்கும் உறுதியான முடிவுக்கு வந்தார்.
பவளக்கொடி நாடகத்தை பேசும் படமாக எடுக்கும் சுப்பிரமணியத்தின் திட்டத்திற்கு லேனா செட்டியாரும் அழகப்பச் செட்டியாரும் நிதியுதவி செய்ய முன்வந்தனர். பவளக்கொடி படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி அல்லியாகவும் எம்.கே.டி.பாகவதர் அர்ஜுனனாகவும், மணி பாகவதர் என்பவர் கிருஷ்ணராகவும் நடித்தனர். சென்னை அடையாறு மீனாட்சி சினிடோனில் படப்பிடிப்பு நடைபெற்றது. (இதுதான் "சத்யா ஸ்டுடியோ" வாகி இன்று ஜானகி எம்.ஜி.ஆர் கல்லுாரியாக இயங்கிவருகிறது).

சுப்ரமணியம் டைரக்ட் செய்து தயாரித்த "பவளக்கொடி" பல வாரங்கள் தென்னக திரையரங்களில் ஓடி வெற்றிகண்டது. அமோக வசூல் கண்டதில் பொருளாதார ஏற்றம் கண்டார் சுப்பிரமணியம். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ம்ஸ்டாரை எம்.கே.டி.தியாகராஜ பாகவதரை அறிமுகப்படுத்திய நிரந்தர பெருமைக்குரியவரானார் கே.சுபிரமணியம்.

முதல் படத்தில் கிடைத்த வெற்றியில் உந்தப்பட்டு "சாரங்கதாரா" என்ற திரைப்படத்தை கல்கத்தாவில் தயாரித்தார். இதில் எஸ்.டி.சுப்பு லட்சுமி, எம்.கே.டி. பாகவதர் ஜோடியை ஒப்பந்தம் செய்தார். இந்தப் படமும் வெற்றி. பவளக்கொடி படப்பிடிப்பின்போது எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் காதல் வயப்பட்ட கே.சுப்பிரமணியம், படம் முடிந்த தருவாயில் அவரை தன் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார். 
காதலும் திருமணமும்

முதல் இரண்டு படங்களில் கிடைத்த வருவாயைக் கொண்டு எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் இணைந்து 1935 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை துவங்கினார்.  இந்த கம்பெனி 19 நாட்களில் தயாரித்து வெளியிட்ட வெற்றிப் படம்தான் "நவின சதாரம்" அதற்கடுத்து அவர் தயாரித்தவை "பாலயோகினி" "பக்த குசேலா" "மிஸ்டர் அம்மாஞ்சி" "கௌசல்யா கல்யாணம்" முதலியவை.

1937 ஆம் ஆண்டு சென்னை வெள்ளாள தேனாம்பேட்டை பகுதியிலிருந்த "ஸ்பிரிங் கார்டன்" (Spring Garden) என்ற இடத்தில் "மோஷன் ஃபிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கன்பைன்ஸ்" என்ற பெயரில் தனது சொந்த படப்பிடிப்பு நிலையத்தைத் தொடங்கினார் கே. சுப்ரமணியம். இந்த ஸ்டுடியோவில் வங்காளத்தைச் சேர்ந்த சிறந்த கேமரா கலைஞரான சைலன்போஸ் பணியமர்த்தப்பட்டார்

உயர்ந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட படங்களை உருவாக்கும் எண்ணத்தில், வட நாட்டில் இருந்து சைலன்போஸ், கமால்கோஷ் போன்ற சிறந்த ஒளிப்பதிவாளர்களையும் ஒலிப்பதிவு கலையில் தேர்ச்சியுற்ற சி.எஸ்.நிகாம், "சரண் பஹதூர் போன்ற நிபுணர்களை தன் ஸ்டுடியோவில் பணியமர்த்தினார் கே.சுப்பிரமணியம்.

சேவாசதனம்

பிரபலமாக விளங்கிய கர்நாடக சங்கீத பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி சினிமா பிரவேசம் செய்த முதல் படம் "சேவா சதனம். 1938-ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் கே.சுப்பிரமணியம். கொடுமைப்படுத்தும் கணவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்காமல் வெளியேறி தன்னம்பிக்கையோடு வாழ முயற்சிக்கும் பெண்ணின் கதைதான் சேவா சதனம். இதில் மனைவி சுமதியாக எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்தார். படம் வெற்றிகரமாக ஓடியது.

இந்தப் படத்திற்கு "ஆனந்த விகடன் 8.5.1938 தேதியிட்ட இதழில் வெளியான விமர்சனத்திலிருந்து சில பகுதிகள்:

"சுப்பிரமணியத்தின் டைரக்‌ஷனில் சில விஷயங்களை எதிர்பார்த்துத்தான் ஆக வேண்டும். அவரது படங்களில் சமூக கொடுமைகளின் பிரதிபலிப்பு விசேஷமாக இருக்கும்...“இந்த டாக்கியைப் பற்றி இரண்டே வார்த்தைகளில் முடிவாகச் சொல்லிவிட வேண்டுமானால் 'போய்ப் பாருங்கள்" என்று சொல்வேன்".
விபத்து- நஷ்டம் -ஏலம்

இவர் தொடங்கிய "மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்" என்ற சினிமா ஸ்டுடியோவில் கோவை அய்யாமுத்து எழுதிய "இன்பசாகரன்" என்ற கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இன்பசாகரன் படத்தை கே.சுப்பிரமணியம் டைரக்ட் செய்தார். இந்த படத்தில்தான் எம்.ஜி.ஆரின் துணைவியாரும் முன்னாள் முதல்வருமான வி.என்.ஜானகி அறிமுகமானார்.

ஜானகிக்கு அப்பொழுது வயது 13. இந்தப் படத் தயாரிப்பின்போது துர்சகுனமாக ஒரு சம்பவம் நடந்தது. படம் முழுவதுமாகத் தயாரிக்கப் பெற்று வெளிவரும் நாளும் விளம்பரப்படுத்திவிட்ட சூழலில் எதிர்பாராதவிதமாக 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 21ந் தேதி அந்த ஸ்டுடியோ முற்றிலுமாகத் தீப்பற்றி எரிந்தது. அதில் 'இன்ப சாகரன்' படத்தின் நெகடிவ்களும் எரிந்து போயின. பெரும் நட்டத்திற்கு ஆளானார் சுப்ரமணியம். ஆனாலும் மனம் சஞ்சலம் அடையவில்லை சுப்பிரமணியம்.

கடனால் ஸ்டுடியோ ஏலத்திற்கு வந்தது. அதை ஏலத்தில் எடுத்தவர் அமரர் எஸ்.எஸ்.வாசன். ஏலத்தில் எடுக்கப்பட்ட அந்த இடத்தை புனர் நிர்மாணம் செய்து புது ஸ்டுடியோவை அவ்விடத்தில் அமைத்த எஸ்.எஸ்.வாசன். 'மூவிலேண்ட் ஜெமினி ஸ்டுடியோ' என்று தன் ஸ்டுடியோவிற்கு பெயர் சூட்டி ராஜா சர்.முத்தையா செட்டியாரைக் கொண்டு துவக்க விழா நடத்தினார்.

தியாகபூமி (1939)

தியாகபூமி என்ற சமூக கதை கல்கி அவர்களால் ஆனந்த விகடனில் இருபது வாரம் தொடராக வெளிவந்தது. வாசகர்களின் அமோக  ஆதரவைப்பெற்ற இந்த நாவலை தொடராக வெளிவரும்போதே சுப்பிரமணியம் திரைப் படமாகவும் தயாரித்துக் கொண்டிருந்தார். தியாகபூமியில் 'சாவித்திரி' வேஷத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். சம்பு சாஸ்திரியாக பாபநாசம் சிவன் நடித்தார்.
படத்தில் ஓர் காட்சி, "சாவித்திரியிடம் சாஸ்திரி “இந்திய பூமி, தியாக பூமி. இங்கு மனைவிமார்கள் கணவர்களோடு வாழ்வதுதான் பண்பு" என்று எடுத்துக் கூறி கணவனோடு இணையச் சொல்கிறார். ஆனால் அதற்கு சாவித்திரி, "மனைவி சீதையாக இருக்க வேண்டுமானால், கணவன் ராமனாக இருக்க வேண்டும் என்று சொல்லி மறுத்து விடுகிறாள்.

நீதிமன்றத்தில் தன் கணவன் பிந்தரனோடு தன்னால் வாழமுடியாது என்று கூறும் சாவித்திரி, “வேண்டுமானால் ஆண்கள் மனைவிமார்களுக்கு அளிப்பதுபோல் தான் தன் கணவனுக்கு ஜீவனாம்சம் அளிப்பதாகவும் கூறுகிறாள். அக்காலத்தில் புரட்சிகர சிந்தனை கொண்டதாக பரபரப்பு ஏற்படுத்தியது இந்தப்படம்.

பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், படம் ஓடிக்கொண்டிருந்த நாட்களில் காங்கிரஸ் பிரசாரப் படம் என்று நினைத்து அரசு தடை செய்ய தீர்மானித்தது. இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்-இயக்குனர் கே.சுப்ரமணியம் படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையாக தடை உத்தரவு வரும் முன், அனுமதி இலவசம் என்று அறிவித்து தொடர்ந்து பல காட்சிகள் நடத்தினார்.
படத்தில் நாயகி, கடைசி காட்சியில் காங்கிரஸ் கொடியுடன் ஊர்வலம் சென்று பாடிக்கொண்டு செல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்ததுதான் இதற்கு காரணம். பாரதியார் பாடலை டி.கே.பட்டம்மாள் பாடியார். எதிர்பார்த்தபடி படம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டது. (சுதந்திரத்திற்கு பின் தடை நீக்கப்பட்டது)

எஸ்.டி.சுப்புலெட்சுமி இந்த படத்தின் மூலம் நடிப்பின் உச்சத்தை தொட்டார். சுப்பிரமணியம் புகழ் இப்படத்தின் மூலம் பன்மடங்கு பெருகியது.

படம் வெற்றிபெற்றபின் “டைரக்டர் சுப்ரமணியத்துக்கே முழுதும் சேர வேண்டிய இந்த பெருமையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு இஷ்டமில்லை” என்று தன் மேதைமையை வெளியிப்படுத்தியிருந்தார் எழுத்தாளர் கல்கி.

"மானசம்ரக்ஷணம்" (மானம் காத்தல்)

1945 ஆம் ஆண்டு யுத்த ஆதரவு படம் ஒன்றை கே.சுப்பிரமணியம் எடுத்து வெளியிட்டார். படத்தின் பெயர் "மானசம்ரக்ஷணம்" சுமார் 11000 அடிகளில் எடுக்கப்பட்ட பிரசாரப் படம் இது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் எடுத்த நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம், வெளிவந்த சில நாட்களில் தடைவிதிக்கப்பட்டது. பின்னர் தடை நீக்கிக் கொள்ளப்பட்டது. படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.

சென்னை கெயிட்டி தியேட்டரில் இப்படத்தின் இடைவேளைக் காட்சியின் போது படத்தின் நடித்த காளி என் ரத்தினம், எஸ்.டி.சுப்புலட்சுமி ஆகியோ சினிமா மேடையில் தோன்றி ரசிகர்களுக்கு காட்சியளித்தது அந்நாளில் பிரபலம். இப்படம் கே.சுப்பிரமணியத்திற்கு புகழ்சேர்த்த படங்களில் ஒன்று.
தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த டி.ஆர்.ராஜகுமாரியை திரையுலகில் அறிமுகம் செய்ததும் கே.சுப்பிரமணியம்தான். சுப்பிரமணியத்தின் "கச்ச தேவயானி" படத்தில் நடித்தபின் டி.ஆர்.ராஜகுமாரியின் "கவர்ச்சி புகழ்" தமிழகம் முழுவதும் பரவியது. 

"பிரேம் சாகர்" என்ற இந்திப் படத்தை தமிழ்நாட்டில் தயாரித்த முதல் தென்னிந்தியரும் இவரே. 1960 ஆம் ஆண்டு "மோரக்" (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் கீழ் "பாண்டித்தேவன்" படத்தை தயாரித்தார்.

பால யோகினி படத்தில் சாதிக்கொடுமைகளை சாடியது, சேவாசதனம் திரைப்படத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்த அவசியத்தை முன்வைத்தது, "பக்தசேதாவில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தது போன்ற அந்நாளில் பேசத் தயங்கிய பல கருத்துக்களை சினிமாவில் முன்வைத்ததால் கே.சுப்ரமணியம், புரட்சி இயக்குனர் என்ற பெயர் பெற்றார்.

ஹாலிவுட், ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு தொழில் முறையாக சென்று வந்தார். ரஷ்ய அரசால் சிறப்பு விருந்தினராக ரஷ்யாவுக்கு அழைக்கப்பட்ட தென்னிந்திய கலைஞர்கள் குழுவில் கலைவாணர் என்.எஸ்.கே.வுடன் ரஷ்யா சென்று வந்தவர் டைரக்டர் கே.சுப்ரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கிய படங்கள்

    நவீன சாரங்கதாரா (1936)
    பாலயோகினி (1937)
    சேவாசதனம் (1938)
    தியாகபூமி (1939)
    இன்பசாகரன் (1939)[4]
    பக்த தேசா (1940)
    மானசம்ரட்சணம் (1945)
    மிஸ்டர் அம்மாஞ்சி (கௌசல்யா பிரணயம்)
    கச்சதேவயானி
    அனந்தசயனம்
    விகடயோகி
    விசித்திரவனிதா
    கோகுலதாசி
    கீதகாந்தி
    பாண்டித் தேவன்

மறைவு
திரையுலகில் பல சாதனைகளை புரிந்த இயக்குனர் கே.சுப்ரமணியம் 1971 ஆம் ஏப்ரல் மாதம் 7ம் நாள் சென்னையில் மரணமடைந்தார். சுப்பிரமணியத்தின் சடலத்தை தாங்கிய பல்லக்கை எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சுமந்தனர். ஊர்வலம் அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்குப் பின்புறம் உள்ள மயானத்தை அடைந்தது. அங்கே சுப்ரமணியம் உடல் மீது ரோஜா மாலை வைத்து எம்.ஜி.ஆர். அஞ்சலி செலுத்தினார். நடிகர் சந்திரபாபு ஜெபம் செய்தார். அவரது இறுதிச்சடங்குகளை மத்திய அரசின் செய்திப் படப் பிரிவினர் படம் எடுத்தனர். தமிழ்ப் பட உலகில் ஒரு சகாப்தம் முடிந்தது.

1952 ஆம் ஆண்டு "அமெரிக்க சினி டைரக்டர்கள் கில்டு" உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த தகுதி மெடலை இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியது. தென்னிந்திய ஃபிலிம்சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பில் நான்குமுறை தலைவராக பணியாற்றியுள்ளார். பாபநாசம் சிவனை "பக்த குசேலாவில்" நடிகராக அறிமுகப்படுத்தினார்.
அனந்தசயனம் என்ற (1942) படத்தில் சுப்பிரமணியம் கிருஷ்ணன் வேஷத்தில் நடித்தார். 1942 ல் நிருத்யோதயா என்ற நடனப்பள்ளியை ஆரம்பித்தனர். புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் இவரது மகள். மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் 19 நாட்களில் "நவின சதாரம்" என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார்.

தன் திரைவாழ்க்கையில் கே.சுப்பிரமணியம் தயாரித்த படங்கள் மொத்தம் 22.. இதில் அவர் இயக்கியது 20 படங்கள்.   2005- ல் கே.சுப்ரணியத்தை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. திரையுலகில் கே. சுப்ரமணியத்தின் இடத்தை இட்டுநிரப்ப யாராலும் இயலாது.

- பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்      .vikatan.com

கருத்துகள் இல்லை: