புதன், 16 செப்டம்பர், 2015

தமிழக அரசு பஸ்சுக்குள் இருக்கை உடைந்து ஓட்டை வழியாக கீழே விழுந்த பெண்

கேரள மாநிலம் புனலூர் காயம்குளம் கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சாந்தி (வயது 30). சாந்தியின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகும். சமீபத்தில் சாந்தி தனது கணவருடன்
ராஜபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அதன்பிறகு அவர் தனது கணவருடன் கேரளா புறப்பட்டார். இதற்காக தமிழக விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்தார். அந்த பஸ் நேற்று பகல் புனலூரில் உள்ள கேரள அரசு போக்குவரத்துக்கழக டெப்போ அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீர் என்று சாந்தியின் இருக்கையின் கீழ் பகுதி உடைந்தது. அதில் ஏற்பட்ட ஓட்டை வழியாக சாந்தி தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் அலறினார். இதனால் டிரைவர் உடனடியாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். மேலும் சாந்தி பஸ்சின் ஓட்டை வழியாக சாலையில் தவறி விழுந்ததை பார்த்த அந்த பகுதி ஆட்டோ டிரைவர்களும், பொதுமக்களும் அங்கு ஓடிசென்று அவரை காப்பாற்றினார்கள்.


அந்த பஸ் மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக சாந்தி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். உடனடியாக அவர் புனலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து பற்றி புனலூர் போலீசார் சாந்தியிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் விபத்துக்குள்ளான பஸ்சை அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பழுந்தடைந்த பஸ்சை முறையாக ஆய்வு செய்யாமல் தகுதி சான்று வழங்கியதாக தென்காசி வட்டார போக்கு வரத்து அதிகாரி மீது புனலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: