செவ்வாய், 15 செப்டம்பர், 2015

பா.ஜ.க – ரன்வீர் சேனா கொலைகாரர்களின் ஒப்புதல் வாக்குமூலம் !

Murli-Manohar-Joshi_1நான் அவர்கள் மேல் ஆத்திரமாக இருந்தேன். எதற்காக நூறு ரூபாய் மதிப்புள்ள துப்பாக்கித் தோட்டாக்களை இவர்கள் மேல் நான் வீணாக்க வேண்டும்? என்னிடமிருந்த அரிவாளைப் பயன்படுத்துவதே மேல். அந்த ஐந்து பேரின் தலைகளை அரிவாளால் சீவியெறிந்தேன்” – சந்தகேஷ்வர் சிங்.
”அட.. நீங்க பழுத்த மாம்பழங்களை அடிக்க மா மரத்தின் மேல் கம்பை வீசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. பழங்களும் விழும், சில காய்களும் கூட விழலாம். பழத்தை விட்டு காயை விழ வைத்ததற்காக உங்களை தண்டிக்கவா முடியும்? அதே மாதிரி தான்.. எங்க ஆளுங்களை இளைஞர்களைக் கொல்லத் தான் அனுப்பினோம்… அவங்க அந்த வேலையைப் பார்க்கும் போது சில குழந்தைகளும் கூட செத்திருக்கலாம். இதுக்கெல்லாம் தண்டிக்கவா முடியும்? அப்படியே தண்டிக்கனும் என்றாலும், அதுக்காக சம்பளத்தையா பிடித்தம் செய்ய முடியும்?” – ரவீந்திர சவுத்ரி
”எங்க ஆளுங்களை அனுப்பும் போது 36 இன்ஞ்ச் வயிறு இருந்தா போட்டுத் தள்ளுங்கன்னு சொல்லி தான் அனுப்பினோம். அது ஆணோ பெண்ணோ… ஒரு வேளை பெண்ணா இருந்தா அவ வயித்திலேர்ந்து எதிர்காலத்தில பிள்ள பூச்சி எதாவது பிறந்து நக்சலைட்டா ஆயிடுமில்லே?” –சைலேந்திர வாத்சாயன்.


யார் இவர்கள்? எதைப் பற்றிப் பேசுகிறார்கள்?
கடந்த ஆகஸ்டு 17-ம் தேதி தில்லி பத்திரிகையாளர் மன்றத்தில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் அனிருத் பஹால். தெஹல்கா பத்திரிகையைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும், தற்போது கோப்ரா போஸ்ட் என்கிற இணைய பத்திரிகையை நடத்தி வருபவருமான அனிருத் பஹால், ஸ்டிங் ஆபரேஷன்களின் தந்தை என்று அறியப்படுபவர்.
1994-ம் ஆண்டிலிருந்து 2000-மாவது ஆண்டு வரை பீகார் மாநிலத்தில் நிலபிரபுக்களின் தனியார் குண்டர் படையான ரன்வீர் சேனா நிகழ்த்திய ஆறு மோசமான படுகொலைச் சம்பவங்களில் நீதி மன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷன் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் அனிருத் பஹால்.
பீகார் மாநிலத்தின் சார்த்துரா(1995), பதனி டோலா(1996), லக்‌ஷ்மன்பூர் பதே (1997), இக்வாரி (1997), சங்கர் பிகா (1999), மியான்பூர் (2000) ஆகிய ஆறு இடங்களில் நடந்த கொடூரமான தாக்குதல்களில் சுமார் 144 தலித்துகள் ரன்வீர் சேனாவால் படுகொலை செய்யப்பட்டனர். ரன்வீர் சேனா தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை சுமார் 300க்கும் மேற்பட்ட தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முரளி மனோகர் ஜோஷி
ரன்வீர் சேனா நிகழ்த்திய படுகொலைகளில் ஆறு சம்பவங்களே மேலே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் படுகொலைகள் தொடர்பான சில வழக்குகளில் கீழமை நீதிமன்றம் குற்றவாளிகளைத் தண்டித்தாலும், உயர்நீதிமன்றத்தில் நடந்த மேல் முறையீடுகளின் போது குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே, “போதிய சாட்சிகள்” இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை சந்தித்து ’ரன்வீர் சேனா குறித்து திரைப்படம் இயக்கவுள்ளதாகவும், அதற்கான தகவல்கள் தேவை’ என்கிற முகாந்திரத்தில் அணுகும் கோப்ரா போஸ்ட் நிருபர்கள், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தமது ‘சாதனைகள்’ குறித்து பீற்றிக் கொள்வதை இரகசிய கேமராக்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்திய ராணுவத்தால் ’கழித்துக் கட்டப்பட்ட’ நவீன ஆயுதங்கள் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்களின் மூலம் தமக்கு கிடைத்ததென்று இந்த ஸ்டிங் ஆபரேஷனின் போது இரகசிய கேமராவின் முன் தெரிவித்துள்ளனர் ரன்வீர் சேனாவின் குண்டர்கள். மேலும் தங்கள் மேலான வழக்கு விசாரணைகள் நீர்த்துப் போவதற்கு பாரதிய ஜனதாவின் முரளி மனோகர் ஜோஷி உதவினார் என்றும், இந்தி மாநிலங்களைச் சேர்ந்த வேறு சில கட்சிகளும் தங்களுக்கு உதவினர் என்றும் தெரிவித்துள்ளனர்.
ரன்வீர் சேனா: சுருக்கமான வரலாறு
மேற்கு வங்க மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இமயத்தின் அடிவாரத்தில் அமைந்த டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி பகுதியில் அமைந்த நக்சல்பாரி கிராமத்தில் 1967-ம் ஆண்டு வசந்தத்தின் இடி முழக்கம் ஒலித்தது மார்க்சிய லெனினிய இயக்கம். பல நூற்றாண்டுகளாக நிலபிரபுக்களின் ஆதிக்கத்தின் கீழ் அழுந்தி வந்த ஏழை விவசாயிகள் கம்யூனிஸ்டு புரட்சியாளர்களின் தலைமையில் அணி திரண்டு அதிகாரத்தையும் நிலத்தையும் பறித்தெடுத்தனர். நக்சல்பாரி எழுச்சி என்று பின்னர் அழைக்கப்பட்ட இந்நிகழ்வுகள் இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மா.லெ கட்சியை அடையாளம் காட்டியது.
நக்சல்பாரி எழுச்சி அதிர்வு இந்தியாவெங்கும் அறுபதுகளின் இறுதியில் எதிரொலித்தது. பீகார் அப்போது எரியக் காத்திருந்த வறண்ட வனமாக இருந்தது. காலம் காலமாக ஜமீந்தார்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த ஏழை விவசாயக் கூலிகள் தமக்கான தருணத்தை எதிர்பார்த்துக் கிடந்தனர். நக்சல்பாரி எழுச்சியைத் தொடர்ந்து பற்றிப் படர்ந்து வரும் கிளர்ச்சியை ஒடுக்குவதோடு கூடவே தணிக்கும் நடவடிக்கைகளிலும் இந்திய ஆளும் வர்க்கம் உடனடியாக இறங்கியது.
பெயரளவிலான நிலச் சீர்திருத்தத்தை முன்வைத்தது ஆளும் வர்க்கம். இந்த நிலச் சீர்திருத்தம் பழைய ஜமீந்தார்கள் மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்த பீகாரில் பிற ஆதிக்க சாதியினரான குர்மி, ராஜ்புத், பூமிஹார், யாதவ் போன்றோரிடம் நிலத்தையும் அதிகாரத்தையும் குவித்தது. மக்களைக் கசக்கிப் பிழிந்த ஜமீந்தாரி முறை ஏட்டளவில் அகற்றப்பட்டிருந்தாலும், எதார்த்தத்தில் இப்புதிய ஆதிக்க சக்திகளில் அதே நிலப்பிரபுக்கள் வேறு பெயர்களில் தொடர்ந்தனர். ஜமீந்தார்களின் கீழே நூற்றாண்டுகளுக்கும் மேலாக நசுங்கிக் கிடந்த தலித் கூலி விவசாயிகள் இப்போது ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களின் கையில் சிக்கினர்.
முறையான கூலி கிடையாது, ஒப்புக் கொள்ளப்பட்ட வேலை நேரம் கிடையாது, இன்ன வேலை என்கிற வரையறை கிடையாது, உரிமை கிடையாது – உழைப்பதற்கான கைகளையும் கால்களையும் தவிற வேறு உடமைகளும் கிடையாது என்பது தான் தலித் மக்களின் அன்றைய நிலை. மேற்கு வங்கத்தில் எழுந்த நக்சல்பாரி இடி முழக்கம் இந்தியாவெங்கும் பரவிய போது பீகாரில் உரிமைகள் அற்ற கூலித் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அது மாறியதில் வியப்பில்லை.
தங்களின் நியாயமான உரிமைகளுக்காக மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் (MCC), இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா.லெ – விடுதலை) போன்ற நக்சல்பாரி கட்சிகளின் தலைமையில் திரண்டனர் கூலி விவசாயிகளான தலித் மக்கள். காலங்காலமாக தங்கள் கால்களில் மண்டியிட்டுக் கிடந்த மக்களின் எழுச்சியைக் கண்டு உள்ளம் குமுறினர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பணக்கார விவசாயிகள். இம்மக்களின் எழுச்சியை குண்டாந்தடிகளாலும், துப்பாக்கி முனையிலும் ஒடுக்கி விட முடியும் என்று கணக்குப் போட்டனர்.
துவக்கத்தில் ஜமீன்தார்கள் மற்றும் குறுநில மன்னர்கள் பராமரித்து வந்த ’லத்தியால்’ என்ற ஆயுதந் தாங்கிய குண்டர் படையைக் கொண்டு மக்களை ஒடுக்கினர். எனினும், நக்சல்பாரி கொரில்லாக்களின் பதில் தாக்குதலுக்கு முன்னால் ஜமீந்தார்களின் பழைய வகைப்பட்ட குண்டர் படை சிதறுண்டு போனது. இந்நிலையில் ஒவ்வொரு சாதியின் நிலவுடமைத் தலைமையும் தமக்கேயான குண்டர் படைகளை அமைக்கத் துவங்கினர். சன்லைட் சேனா, சவர்ண விடுதலைப் படை, பிரம்மரிஷி சேனா, குவேர் சேனா, கங்கா சேனா என்று பீகார் மாநிலம் நெடுக ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆயுதம் தாங்கிய குண்டர் படைகள் அமைக்கப்பட்டன.
ஒரு மையமான கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய நக்சல்பாரிகளின் மக்கள் படையைத் தனித் தனியாக எதிர் கொண்ட இவர்களை சீக்கிரமே ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தனர் புரட்சியாளர்கள். எண்பதுகளில் ஏழை தலித் கூலி விவசாயிகளின் உரிமைக் குரல் ஒரு தீர்மானகரமான நிலையை அடைகிறது. நக்சல்பாரிகளின் தலைமையில் அணிதிரண்டு நின்ற மக்களின் நியாயமான கோரிக்கைகளில் பல நிறைவேற்றப்பட்டது. கூலி நிர்ணயம் போன்ற கோரிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியாது என்று அஞ்சிய ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள், அவற்றை தங்களது தேர்தல் வாக்குறுதிகளாக்கிக் கொண்டன.
உழைக்கும் தலித் மக்களின் தன்னம்பிக்கையான நிலை தொடர்வது தமது இருப்பையே அசைத்துப் போட்டு விடும் என்று ஆதிக்க சாதிகள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த தொன்னூறுகளில் தான் ரன்வீர் சேனா உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே ஆதிக்க சாதி நிலச்சுவாந்தார்களின் சார்பாக இயங்கி வந்த தனியார் ஆயுத கும்பல்கள் சிலவற்றை பிரம்மேஷ்வர் சிங் என்பவர் ஒன்றிணைத்து அதை ரன்வீர் சேணாவாக 1994-ம் ஆண்டு அறிவிக்கிறார்.
ரன்வீர் சேனா : நிலப்பிரபுக்களின் ஆதிக்க சாதிவெறிப் படை மட்டும் தானா?
ரன்வீர்-சேனா-பிரம்மேஷ்வர்-சிங்
பிரம்மேஷ்வர் சிங்
ரன்வீர் சேனா தனது தோற்றத்திலேயே இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டிருந்தது. முதலில், ஏழை கூலி விவசாயிகளான தலித் மக்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது, அடுத்து இம்மக்களின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடி வந்த நக்சல்பாரி புரட்சியாளர்களை ஒழித்துக் கட்டுவது. தனது முதலாவது நோக்கத்தை அடைவதற்காக அடுத்து வந்த ஆறாண்டுகளில் ஆடிய இரத்த தாண்டவம் இந்தியாவின் போலி ஜனநாயக கோவணத்தை முற்றாக உருவியெறிந்தது.
1996-ம் ஆண்டு ஜூலை 11-ம் நாள் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதனி டோலாவில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய மக்களின் மேல் ரன்வீர் சேனா குண்டர் படை தாக்குதல் நடத்தி சுமார் 23 பேரை கொன்று போட்டது. இறந்தவர்கள் அனைவரும் தலித்துகள். பதனி டோலாவில் தலித்துகளைக் கொன்று விட்டுத் தப்பும் வழியில் சோனே நதியில் படகோட்டிகளாக இருந்த மீனவர்கள் ஐந்து பேரின் தலைகளை வெட்டி வீழ்த்திச் சென்றனர் அக்காட்டுமிராண்டிகள்.
பதனி டோலா தக்குதலைத் தொடர்ந்து, உடனடியாக சுமார் 33 மூன்று பேரின் பெயர்களோடு முதல் தகவல் அறிக்கையை மாநில போலீசு பதிவு செய்கிறது. பின்னர் மார்ச் 24, 2000-ம் ஆண்டில் மேலும் 65 பேரின் பெயர்களையும் வழக்கில் சேர்க்கிறது. 2010-ம் ஆண்டு ஆரா மாவட்ட கீழமை நீதிமன்றம் மூவருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்குகிறது. பின்னர் இவ்வழக்கு குற்றவாளிகளால் மேல் முறையீடு செய்யப்பட்டு 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பாட்னா உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ‘போதிய சாட்சியங்கள்’ இல்லை என்று விடுவிக்கிறது. பதனி டோலா தாக்குதலை வழிநட்த்தி முன்னின்று செயல்படுத்திய சந்தகேஷ்வர் சிங்கை தனது ஸ்டிங் ஆபரேஷனின் ஒரு பகுதியாக சந்தித்துள்ளது கோப்ரா போஸ்ட் பத்திரிகை.
எந்தக் குற்றவுணர்ச்சியும் இன்றி கேட்பவர் இரத்தம் உறைந்து போகும் வண்ணம் தனது தலைமையில் செய்யப்பட்ட படுகொலைகளைப் பற்றி சந்தகேஷ்வர் விவரித்துள்ளான். சாட்சியங்களும் ஆதாரங்களும் தேசத்தின் ’மனசாட்சிக்கு’ முன் ஒரு பொருட்டே இல்லை என்று நீட்டி முழக்கும் நீதி மன்றங்களைக் கொண்டதொரு நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சொல்லிக் கொள்ளப்படும் தேசத்தின் மனசாட்சி எனப்படுவது யாதெனில், தாகம் தணிக்க பலி கேட்கும் இரத்தக் காட்டேரி தானென்பதை சந்தகேஷ்வர் வாழ்ந்து நிரூபிக்கிறார்.
இந்த வழக்கில் சாட்சிகள் உண்டு, ஆதாரங்கள் உண்டு, ஏன் ஒப்புதல் வாக்குமூலமே இப்போது இருக்கிறது – அப்பாவிகள் யாகூப் மேமனனையும் அப்சல் குருவையும் கொன்று போட்ட அந்த ‘தேசப்பற்று மிக்க அவசரம்’ எங்கே? ரன்வீர்சேனா கொலகாரனின் வாக்குமூலம் வெளியாகி நாட்கள் பல கடந்து விட்டது; எங்கோ பீகாரின் மூலையில் சர்வ சுதந்திரமாகத் திரியும் இந்தக் குற்றவாளிகளை யார் தண்டிக்கப் போகிறார்கள்?
ரன்வீர் சேனா - ஆதிக்க சாதியின் கொலைப் படை
ரன்வீர் சேனா – ஆதிக்க சாதியின் கொலைப் படை
சந்தகேஷ்வர் மட்டுமின்றி, லக்‌ஷ்மன்பூர் பதே படுகொலைகளின் மூளையான சித்தநாத், இக்வாரி படுகொலைகளின் சூத்திரதாரி அரவிந்த் குமார் சிங், மியான்பூர் படுகொலைகளை முன்னின்று நடத்திய ப்ரமோத் சிங், லக்‌ஷ்மன்பூர் பதே படுகொலைகளில் சம்பந்தப்பட்ட இன்னொரு கொலையாளியான போலா சிங், ரவீந்திர சவுத்ரி ஆகியோரையும் கோப்ரா போஸ்டின் நிருபர் சந்தித்துள்ளார். ஒவ்வொருவரும் வெவ்வேறு வார்த்தைகளில் தாம் முன்னின்று நடத்திய படுகொலைகளை பெருமிதத்தோடு விவரித்துள்ளனர்.
ஒவ்வொரு முறை தலித்துகள் கொல்லப்படும் போதும் முதலில் ஒரு சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கும் உள்ளூர் போலீசு, சில ஆண்டுகள் கழித்து வேறு பலரின் பெயர்களையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளது. குற்றம் இழைத்தவர்களோடு குற்றம் இழைக்காதவர்களையும் சேர்த்து நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கை நீர்த்துப் போகச் செய்துள்ளது. ஆதிக்கசாதிக் கொலைவெறியர்களுக்கு இவ்வாறாக மறைமுக உதவி செய்தது தவிர, சம்பவம் நடக்கும் போது தாக்கப்படும் தலித் மக்களிடம் இருந்து தகவல் கிடைத்தால் பாராமுமகாய் இருந்து நேரடியாகவும் உதவியுள்ளது.
ஐபத்பூர் என்ற இடத்தில் நடந்த படுகொலைகளில் முஷார் என்கிற தலித் சாதி மக்கள் எழுவரை ஒன்பது பேர் கொண்ட ரன்வீர் சேனா கூட்டம் பட்டப் பகலில் பலரும் பார்த்திருக்க கொன்று போட்டது. இந்த சம்பவத்தை முன்னின்று நடத்திய சித்தநாத் பேசுகையில், கொலைகள் அனைத்தும் கான்பத் பகுதி காவல் நிலையத்திற்கு வெகு அருகாமையிலேயே நடந்தது என்று தெரிவித்துள்ளார்.
ஏன் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு சித்தநாத் அளித்த பதில் இதயம் கொண்ட எவரையும் அசைத்துப் பார்த்து விடும் :
”இந்தியாவில, நம்ம மதத்தை பொருத்த வரைக்கும் நீங்க வயசானவைனைக் கொன்னா பாவம் சின்ன வயசுக்காரனைக் கொன்னா பாவமில்லைன்னு சொல்றதில்ல. நம்ம சட்டங்களும் கூட சின்னப் பையனைக் கொன்னா 20 வருச்ம் ஜெயில்னோ, கிழவனைக் கொன்னா ரெண்டு வருசம் ஜெயில்னோ, குழந்தையைக் கொன்னா 50 வருசம் ஜெயில்னோ சொல்றதில்ல”
இந்த விளக்கத்திற்கு கூடுதலாக இறந்தவர்கள் ஒவ்வொருவரும் தலித்துகள். ஆதிக்க சாதி வெறியர்களைப் பொறுத்தவரை இம்மக்கள் தங்கள் கைகளால் கொல்லப்படுவதற்காக இறைவனால் படைக்கப்பட்டவர்கள். உயிரோடு இருந்தால் தமக்கு அடங்கி நடக்க வேண்டும். கூலி கேட்க கூடாது. உரிமை கேட்க கூடாது. மானமும் சுயமரியாதையும் தலித்துகளுக்கு இருக்க கூடாது. பார்ப்பன சனாதன மதம் ஆதிக்க சாதியினருக்கு உத்திரவாதம் செய்து கொடுத்துள்ள இந்த பிறப்புரிமைகள் கேள்விக்குட்படுத்தப்படும் போது கொன்று போடுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதே இவர்களை இயக்கும் நீதி.
பதனி-டோலாஇந்தி பேசப்படும் மாநிலங்களில் போலீசு, அரசு அதிகாரிகள், நீதித் துறை என்று அரசின் ஒவ்வொரு அங்கத்திலும் ஆதிக்க சாதித் திமிர் விரவிக் கிடக்கின்றது. தங்களுக்கு பிறப்புரிமையாக இந்து மதம் அளித்தவொன்றைக் கேள்விக்குட்படுத்தியவர்கள் என்பதாலேயே தலித்துகளைக் கொன்ற ரன்வீர் சேனா குண்டர் படையிடம் அணுக்கமாக நடந்து கொண்டுள்ளனர்.
1994-ம் ஆண்டு தொடங்கி 2000-மாவது ஆண்டு வரை ரன்வீர் சேனா பீகாரின் குறுக்கும் நெடுக்குமாக நிகழ்த்திக் காட்டிய இரத்த வெறியாட்டத்திற்கு கட்சிகளைக் கடந்து ஆதிக்க சாதித் தலைவர்கள் உதவினர். இராணுவத்திற்கென்றே முத்திரையிடப்பட்ட இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள் (LMG) ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் போன்ற கொலைக் கருவிகள் மிக எளிதாக எப்படிக் கிடைத்தது?
சித்தநாத் தன்னிடம் நடந்த போலீசு விசாரணையின் போது ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தது என்று கேட்கப்பட்டதாகவும், அதற்கு முன்னாள் பிரதமர் சந்திரசேகரே உதவி செய்தார் என்று தான் விசாரணை அதிகாரியிடம் குறிப்பிட்டதையும் நினைவு கூர்ந்துள்ளார். தலித்துகளைக் கொன்று தீர்ப்பது தேசத்தின் நலனுக்கானது என்பதால் பிரதமராக இருந்த ஒருவரே தங்களுக்கு உதவியுள்ளார் என்றும் தான் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். இந்த சந்திரசேகர்தான் யோக்கியர் துக்ளக் சோவின் மனங்கவர்ந்த நேர்மையாளர்.
இந்தி மாநிலங்களின் பிற ஆதிக்க சாதிக் கட்சிகளையும் விட பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர்களும் உள்ளூர் வட்டாரத் தலைவர்களும் ரன்வீர் சேனாவோடு நேரடியாக கைகோர்த்துள்ளனர். ரன்வீர் சேனாவின் படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அமீர் தாஸ் தலைமையிலான கமிட்டி நிதிஷ்குமார் பதவியேற்றவுடன் விசாரணை முடியும் முன்பே கலைக்கப்பட்டுள்ளது. நீதியரசர் அமீர் தாஸிடம் விசாரணையின் போது அவர் எதிர் கொண்ட அரசியல் தலையீடுகள் தொடர்பாக கோப்ராபோஸ்ட் பத்திரிகை கேள்வியெழுப்பியுள்ளது.
முரளி மனோகர் ஜோஷி, சுஷீல் குமார் மோடி, சி.பி தாக்கூர், ஷிவானந்த் திவாரி போன்றோர் விசாரணைகளின் போது தலையிட்டனர் என்பதை உறுதி செய்கிறார் நீதியரசர் அமீர் தாஸ். மேலும், படுகொலைகளைப் பற்றி விசாரித்து வந்த நேர்மையான போலீசு அதிகாரி ஒருவர், முரளி மனோகர் ஜோஷி தன்னை தொடர்பு கொண்டு தான் சொல்வது போல் கேட்க வேண்டுமென்றும், அல்லது தாங்கள் பதவிக்கு வந்த பின் உண்டு இல்லை என்று செய்து விடுவோம் என்றும் மிரட்டியதாக தனது தலைமையிலான விசாரணைக் கமிஷனில் வாக்குமூலமாகவே பதிவு செய்ததைக் குறிப்பிட்டுள்ளார் அமீர் தாஸ்.
தென்னிந்தியாவைப் போல் ஓரளவுக்கு கூட பார்ப்பனிய எதிர்ப்பு சீர்திருத்தப் பாரம்பரியம் இல்லாத இந்தி மாநிலங்களில் தான் பார்ப்பனிய சாதி வெறி அதன் முழு பரிமாணத்தில் தன்னை வெளிக் காட்டிக் கொள்கிறது. தலித்துகள் என்பதால் அவர்கள் ஆதிக்க சாதியினர் வாழும் சுற்றுப்புறத்தில் உள்ள மரம் மட்டை செடி கொடி போன்ற அஃறிணைகளைப் போல் நடத்தலாம் என்கிற பார்ப்பனிய கண்ணோட்டம் ரன்வீர் சேனா நிகழ்த்திய படுகொலைகளுக்கான மனத் தயாரிப்பை அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். எனினும், அம்மக்கள் தாம் வாழ்ந்த சூழலின் மேல் எந்தக் கட்டுப்பாடோ உரிமையோ அற்று இருந்தார்கள் என்பதே அந்த ஒடுக்குமுறைக்கான மையமான காரணமாக விளங்கியது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஆதாரமான இந்த சொத்துடைமை பற்றிய கேள்விக்கு விடையளித்ததாலேயே மா.லெ இயக்கங்கள் இன்று வரை அம்மாநிலங்களில் உயிர்ப்போடு செயல்பட்டு வருகின்றன.
நக்சல்பாரி புரட்சியாளர்களின் பதிலடிகள் மற்றும் தமக்குள்ளேயே இருந்த அதிகாரப் போட்டி மற்றும் குழுச் சண்டைகளின் விளைவாக இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து ரன்வீர் சேனாவின் செல்வாக்கு மங்கத் துவங்கியது. 1994-ல் பூமிஹார் சாதியின் சார்பாக உருவாக்கப்பட்ட ரன்வீர் சேனாவுக்கு இணையாக மற்ற சாதிகளைச் சேர்ந்த ஆயுதமேந்திய குண்டர் படைகளும் செயல்பட்டு வந்தன. ஒரு கட்டத்தில் தாக்கூர், குர்மி, யாதவ் என்று ஒவ்வொரு ஆதிக்க சாதியைச் சேர்ந்த குண்டர் படைகளும் ரன்வீர் சேனாவோடு நாய்ச்சண்டையில் ஈடுபட்டன.
ஒருகாலத்தில் ஒன்றாக இருந்து தலித் மக்களை கொன்று குவித்தவர்களிடையே ஆதிக்க சாதிகளிலேயே அதிக ஆதிக்க உரிமை கொண்ட ஆண்ட பரம்பரை யார் என்ற கேள்வி எழுந்ததைத் தொடர்ந்து பரஸ்பர கழுத்தறுப்புச் சண்டைகள் உக்கிரமடைந்தன. ஒருவேளை தொழில்நுட்ப சாத்தியங்களால் அன்புமணியின் 2016 கனவுலத்திற்குள் நுழைந்தால் நமக்கும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணும் வாய்ப்பு கிடைக்கலாம். இந்த நாய்ச்சண்டைகளின் விளைவாக 2003-ம் ஆண்டு பீகாரின் கசாப்புக்காரன் என்று இழிபுகழ் பெற்ற ரன்வீர் சேனாவின் தலைவன் ப்ரமேஷ்வர் சிங் கைது செய்யப்பட்டான்.
ரன்வீர் சேனா மூலம் தலித்துக்களைக் கொல்வதில் ஜோஷியும், சாதாரண 'இந்துக்களின்' மூலம் முசுலீம்களை கொல்வதில் மோடியும் சரியான கூட்டாளிகள்
ரன்வீர் சேனா மூலம் தலித்துக்களைக் கொல்வதில் ஜோஷியும், சாதாரண ‘இந்துக்களின்’ மூலம் முசுலீம்களை கொல்வதில் மோடியும் சரியான கூட்டாளிகள்
சுமார் ஒன்பதாண்டுகள் சிறையில் கழித்த பிரமேஷ்வர் சிங்கின் மேலான வழக்குகள் ஒவ்வொன்றும் “போதிய சாட்சிகள்” இல்லை என்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. 2012 ஏப்ரல் மாதம் பிணையில் வெளிவந்த பிரம்மேஷ்வர், அதே ஆண்டு மே மாதம் சொந்தமாக அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தான். எனினும், “மாற்றம் முன்னேற்றம்” பாணியிலான கனவுகள் ஏதும் ஏற்பட வாய்ப்புக் கொடுக்காமல் அடையாளம் தெரியாத ஆறு தோழர்களால் அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிரம்மேஷ்வரன் பிரம்மனிடமே அனுப்பி வைக்கப்பட்டான்.
தற்போது கோப்ரா போஸ்டின் ஸ்டிங் ஆபரேஷன் மூலமாக வெளியாகியிருக்கும் குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள் நமக்கு தெளிவாக சில விஷயங்களை உணர்த்துகின்றன.
இந்நாட்டின் சட்டம், நீதி மற்றும் அரசின் ஒவ்வொரு துறையும் தமக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வழுவியுள்ளது மட்டுமின்றி எதிர்நிலை சக்திகளாக மாறி மக்களைக் கொல்லும் கருவிகளாகியுள்ளன. இந்தக் குற்றவாளிகளை நீதி மன்றங்களில் தண்டிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கைகளும் முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டன என்பதோடு, இவர்கள் விடுவிக்கப்பட்டு ஆதிக்க சாதித் திமிரில் இருந்து ஒரு மயிரளவுக்கும் கூட குறையாமல் இருந்து வருகிறார்கள் என்ற உண்மை அதைத் தான் நிரூபிக்கின்றது.
ஆர்.எஸ்.எஸ் அறிவாளிகள் அரவிந்த நீலகண்டன் போன்ற ஜந்துக்கள் அம்பேத்கர், தலித் பாசம் என்று நடிப்பதையும் அதற்கு இந்து ஞானமரபு ,மதம் வேறு, மதவெறி வேறு போன்ற ‘தத்துவ விளக்கங்களை’ எழுதும் உத்தம எழுத்தாளர்களையும் இங்கே சேர்த்துப் பாருங்கள். இவர்களின் மனங்கவர்ந்த முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்கள் அங்கே தலித்துக்களின் இரத்தம் குடிக்கும் விலங்குகளாக வெளிப்படையாக இருக்கின்றனர்.
இந்நிலையில் இவர்களை சட்டம் நீதி மற்றும் அரசினால் எந்த வகையிலும் தண்டிக்க முடியாது என்ற காரணத்தால் பிரம்மேஷ்வர் சிங் என்ற தனி நபருக்கு அடையாளம் தெரியாத ஆறு தோழர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை ஒரு எதிர்நிலைக் கட்டமைவாக இந்தச் சமூகம் மொத்தத்தின் மீதும் அமுக்குப் பேய் போல் அழுத்திக் கொண்டிருக்கும் சாதி என்கிற நிறுவனத்திற்கும் வழங்க வேண்டும் – அது சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரின் கூட்டுறவால் மட்டுமே சாத்தியம்.
–    தமிழரசன். vinavu.com

கருத்துகள் இல்லை: