வெள்ளி, 18 செப்டம்பர், 2015

10 ஆயிரம் பழைய பஸ்கள்! ஆயுட்காலம் முடிந்து ஓடும்...பாதுகாப்பு கேள்விக்குறி? பயணிகள் அச்சம்!

தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு பஸ்கள் ஆயுட்காலம் முடிந்து, ஓடுவதற்கு லாயக்கற்ற நிலை யிலும், தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இவற்றில், 4,000 பஸ்களின் நிலைமை படுமோசம்; இதன் காரணமாகவே, அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த, தமிழக அரசு பஸ், தென்காசியில் இருந்து கேரள மாநிலம், கொட்டாரக்கரைக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்றது. இதில், ராஜபாளையத்தைச் சேர்ந்த, சுவாதி, 30, என்ற பெண் பயணம் செய்தார். புனலுார் என்ற இடம் வந்ததும், பஸ்சின் பின்புற படிக்கட்டு வழியாக இறங்க, இருக்கையில் இருந்து எழுந்து, ஒரு காலடி வைத்ததும், அடித்தளம் உடைந்து, 'பொத்'தென, சாலையின் நடுவே விழுந்து, படுகாயம் அடைந்தார். இச்சம்பவம், தமிழக அரசு போக்குவரத்துத் துறை நடத்தும் பஸ்களின் நிலையை வெட்டவெளிச்சமாக்கி விட்டது. அடித்தளம் அமைக்கப்படும் முறை:இரும்பு பைப் மீது, மரக்கட்டைகள் பதிக்கப்பட்டு, அதன் மீது அலுமினிய தகடு அடிக்கப்பட்டு, பஸ்சின் அடித்தளம் உருவாகிறது. 
இந்த லட்சணத்தில் பராமரித்தால் ஒரு நாள் ஓட்டுனரே ஓட்டை வழியாக விழுந்து விடுவார்
அதில் ஓட்டை விழுந்தது என்றால், இந்த பஸ்சை இயக்க, வட்டார போக்குவரத்து அதிகாரியான, ஆர்.டி.ஓ., எப்படி அனுமதித்தார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து, போக்குவரத்து கழக துணை மேலாளர், உதவிப்பொறியாளர், நடத்துனர், ஓட்டுனர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.

அத்துடன், இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பஸ் பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு பஸ்களின் நிலைமை குறித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல்களே கிடைத்தன.

தமிழகத்தில், எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. இந்த கழகங்களிடம், 22 ஆயிரத்து, 474 பஸ்கள் உள்ளன. இவற்றில், 20 ஆயிரத்து, 684 பஸ்கள் இயக்கத்தில் உள்ளன.பஸ் பராமரிப்பில், 100 பஸ்களுக்கு, 80 தொழில்நுட்ப பணியாளர்கள் தேவை. ஆனால், 45 - 50 பேர் மட்டுமே உள்ளனர். உதிரி பாகங்களும் தரமாக இல்லை; தேவையான உதிரி பாகங்களும் பணிமனையில் இருப்பதில்லை. இதனால், பஸ் பராமரிப்பு பணி மிக மோசம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

* மதிக்கப்படாத 'லாக் ஷீட்' போக்குவரத்து கழக ஊழியர்கள் சிலர் கூறியதாவது:

பஸ்சில் உள்ள குறைபாடு குறித்து, 'லாக் ஷீட்' என்ற குறிப்பேட்டில், தினமும் டிரைவர்கள் எழுதி வைப்பர். இந்த குறைபாடுகளை கவனித்து சரிசெய்ய, 25 பஸ்களுக்கு, இரண்டு தொழில்நுட்ப பணியாளர்கள் தேவை. ஆனால், 65 பஸ்களுக்கு, இரண்டு பணியாளர்கள் உள்ளனர்.

இவர்கள் இருவரும், தினமும், 65 பஸ்களில் ஏறி இறங்குவதற்குள், அவர்களது பணி நேரம் முடிந்து விடுகிறது. இதனால், குறைபாடு நீக்கப்படாமல், பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நாளுக்கு நாள் அந்த குறைபாடு பெரிதாகி, பெரியளவில் பிரச்னை ஏற்படுகிறது. பல பஸ்களில் கதவு கழன்று விழுவது; டயர் உருண்டு ஓடுவது; பஸ் அடித்தளத்தில் ஓட்டை விழுவது என, அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்கின்றன.

* போலியான தோற்றம்

ஆண்டுக்கு ஒருமுறை, ஒவ்வொரு பஸ்சிற்கும், எப்.சி., எனப்படும் தகுதி சான்றிதழ் பெற வேண்டும். இதற்காக, பஸ்சை தயார் செய்ய, எட்டு போக்குவரத்து கழகங்களிலும் தனிப்பிரிவு உள்ளது.

எப்.சி.,க்காக புதிய வண்ணம் பூசி, புதிய பஸ் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனரே தவிர, பஸ்சில் உள்ள குறைபாட்டை முழுமையாக நீக்குவதில்லை. சிலர், தனியாரிடம் இந்த பணியை கொடுத்து விடுகின்றனர். இவற்றை, நிர்வாக அதிகாரிகள் மேற்பார்வை செய்வது இல்லை.

இதனால், பஸ் இருக்கை, அடித்தளம், கைப்பிடி, பக்கவாட்டு கண்ணாடி போன்றவற்றில் ஏற்படும் குறைபாடுகள் நீக்கப்படுவதில்லை. மாறாக, பஸ் உட்புறத்தில் வண்ணத்தை பூசி, தகுதியான பஸ் என்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.எப்.சி., பெறுவதிலும், முறையான பணி நடப்பதில்லை. 10 - 50 பஸ்களை வரிசையாக நிறுத்தி, மொத்தமாக தகுதி சான்றிதழ் வாங்கி விடுகின்றனர்.

பஸ் இன்ஜின் எண், அடிச்சட்டம் எனப்படும் சேசிஸ் எண் ஆகியவற்றை பெறும், ஆர்.டி.ஓ.,க்கள், இன்ஜின், முன் ஆக்சில், பின் ஆக்சில், கிரவுன் உள்ளிட்டவற்றை மட்டும் பார்வையிடுகின்றனர். எண்ணெய் ஒழுகாமல் இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்து, அந்த பஸ்சிற்கு தகுதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


படுமோசமான 4,000 பஸ்கள்


தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் பொருளாளர் நடராஜன் கூறியதாவது:ஒரு பஸ்சின் ஆயுட்காலம், ஆறு ஆண்டுகள் அல்லது ஏழு லட்சம் கி.மீ., வரை இயக்கம் என, எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதன்படி பார்த்தால், 10 ஆயிரம் பஸ்கள் ஆயுட்காலம் முடிந்தவை.

முறையான பராமரிப்பு இருந்தால், இந்த பஸ்களை கூடுதலாக, இரண்டு ஆண்டுகளுக்கு இயக்க முடியும். ஆனால், பராமரிப்பு படுமோசமாக உள்ளது. குறிப்பாக, 4,000 பஸ்கள் சாலையில் ஓடவே லாயக்கற்றவை என்ற நிலையில் உள்ளன.

இந்த பஸ்களால் விபத்து அபாயம் உள்ளது. இந்த பஸ்களை உடனடியாக இயக்கத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லையில் நடந்த விபத்து சம்பவத்திற்கு பின், அங்கு மட்டும் பஸ்களில் ஆய்வு செய்கின்றனர். மற்ற கழகங்களில், மோசமான நிலையில் உள்ள பஸ்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து கழகங்கள்/ இயக்கத்தில் உள்ள பஸ்கள்/ ஆயுட்காலம் முடிந்த பஸ்கள் சென்னை மாநகர் / 3,794 / 1,900

அரசு விரைவு / 1,099 / 500

விழுப்புரம் / 3,655 / 1,500

கும்பகோணம் / 3,851 / 2,000

மதுரை/ 2,588 / 1,300

நெல்லை / 1,974 / 1,100

கோவை / 3,283 / 1,000

சேலம் / 2,230 / 700

மொத்தம்/22,474/ 10,000

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: