புதன், 23 ஏப்ரல், 2014

தேமுதிக The End ! கருத்து கணிப்புகளின் 'திடமான' ஆரூடம்!!

சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வகையில் ஆறுதலாக இருக்கிறது.. ஆனால் தேமுதிகவுக்கு மட்டும் எல்லா கருத்து கணிப்புகளுமே "சங்கு ஊதி" அதன் கதை முடியப் போவதை கட்டியம் கூறிக் கொண்டிருக்கின்றன. லோக்சபா தேர்தலுக்கான களப்பணிகள் தொடங்கிய நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளின் பார்வையுமே தேமுதிக பக்கமே இருந்தது. இதனால் தேமுதிகவும் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையில் காட்டிய பந்தாவுக்கு அளவே இல்லை.. தமிழகம் என்ன இந்தியாவே அதிர்ந்து போகும் வகையில் எல்லா கட்சிகளுக்கும் போக்கு காட்டியது. உச்சமாக திமுக, பாஜக, காங்கிரஸ் என மூன்று கட்சிகளுடனும் சம நேரத்தில் சீட்டு, நோட்டு என சகலவித பேரங்களையும் சளைக்காமல் நடத்தி சண்டியர்தனம் செய்து கொண்டிருந்தது தேமுதிக. லோக்சபா தேர்தலில் தேமுதிகவை விட்டால் நாதியே இல்லை என்ற பிம்பத்தை ஊடகங்கள் கட்டமைக்க அந்த கட்சியும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

இதன் விளைவாகத்தான் எல்லா கட்சிகளின் பார்வையும் தேமுதிகவின் கண்ணசைவுக்காக காத்திருந்தன. உளுந்தூர்பேட்டையில் சொல்கிறேன். உசிலம்பட்டியில் சொல்கிறேன் என்று தேமுதிகவும் சவடால்விட்டுக்கொண்டே ஆகக் கூடுமானவரையிலான அதிகபட்ச பேரம் எங்கி கிடைக்கும் என்று அலையோ அலையென அலைந்து கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் ஏதோ சாமி சன்னிதியில் குலுக்குச் சீட்டு போட்டு பார்த்து எடுப்பது போல ஒரு முடிவாக பாஜக அணியில் இணைவதாக அறிவித்தது தேமுதிக. அத்துடன் பெரியண்ணன் பாணியில் எங்களுக்கே இத்தனை சீட்டு, எங்களுத்தான் இந்த தொகுதி என்றெல்லாம் அடாவடி செய்து கொண்டு தடலாடி அரசியலை செய்ததை தமிழகமே பார்த்து நகைத்தது
எல்லாமும் முடிந்து போய் தேர்தல் களத்துக்கு வந்தாயிற்று.. வழக்கம் போல தேர்தல் முடிவுகள் எப்படியெல்லாம் இருக்கும் என்று கணிப்புகள் எல்லாம் வந்து கொண்டே இருந்தன. இந்த கருத்து கணிப்புகளில் ஆறுதலளிக்கும் வகையில் பாஜகவுக்கு கூட ஒன்றிரண்டு இடம் கிடைக்கும்.. மதிமுகவுக்கு கூட இடம் கிடைக்கும்.. பாமகவுக்கும் இடம் கிடைக்கும்.. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஜெயிக்கும்.. புதிய நீதிக் கட்சி ஜெயிக்கும் என்றெல்லாம் சொல்லுகின்றன
அட ஒரு கருத்து கணிப்பு... ஒரே ஒரு கருத்து கணிப்பாவது தேமுதிகவுக்கு ஒரே ஒரு ஒத்த தொகுதி கிடைக்கும் என்று சொல்லவே இல்லை.. நிச்சயமாக தேமுதிக அது போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் 3வது இடமோ அல்லது 4வது இடமோ என்கிற அடிப்படையில்தான் அத்தனை கருத்து கணிப்புகளுமே சொல்லுகின்றன.
ஜூனியர் விகடனின் கருத்து கணிப்பின்படி பாமகவுக்கு அரக்கோணம், தருமபுரி, ஆரணி; பாஜகவுக்கு வேலூர், பொள்ளாச்சி, கோவை, கன்னியாகுமரி, மதிமுகவுக்கு ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி கிடைக்கும் என்கிறது.
பாரதிய ஜனதா அணிக்கு மிகவும் சாதகமான கருத்து கணிப்பாக பார்க்கப்படும் இந்த பட்டியலில் கூட ஒற்றை இடம் கூட தேமுதிகவுக்கு இல்லை.
அந்த கட்சியின் மத்திய அமைச்சர் என்ற கோதாவில் வலம் வரும், ஒவ்வொரு பிரசாரத்திலுமே நான் மத்திய அமைச்சராவேன் என்று பேசிவரும் சுதிஷூம்கூட ஜெயிக்கவே வாய்ப்பில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஆப்பு பலம்போல!!
பாஜக அணிக்கு எதிரான திமுக அணிக்கு மிகவும் சாதகமாக கருத்து கணிப்பாகத்தான் நக்கீரன் முடிவுகளை அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இருந்தாலும் நக்கீரன் கூட கன்னியாகுமரியில் பாஜகவும் தருமபுரியில் பாமகவும் ஜெயிக்கலாம் என்கிறது. இந்த ஆறுதல் வரிசையில் கூட தேமுதிகவுக்கு இடமே இல்லை.. மதிமுகவுக்கும்தான் ஒரு சீட்டும் இல்லை என்று நக்கீரன் சொன்னாலும் ஜுவி 3 இடம் என்று சொல்வது அக்கட்சிக்கு ஆறுதலுக்குரியது.
ஒற்றை தொகுதியைக் கூட பிடிக்க முடியவில்லை விஜய்காந்த். அட்லீஸ்ட் 2வது இடத்துக்கான கணிசமான வாய்ப்பிருக்கிறது என்று கூட சொல்லும் இடத்தைத் தொடக் கூட முடியாத தேமுதிக இத்தேர்தலில் என்ன நிலையை சந்திக்க போகிறது? அனேகம் அது போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் பொட்டி கட்டத்தான் போகிறது என்கின்றன தேர்தல் கருத்து கணிப்புகள்.. அதாவது வாஷ் அவுட்.. அதாவது கதை முடியப் போகிறது.. ஆமாங்க "முட்டை" வாங்கத்தான் போகிறது!!
இப்படித்தான் சில காலம் பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி விட்டு கூட்டணி தாவி அட்டூழியம் செய்து அதன் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்குப் போனது வரலாறு.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: