ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

தமிழகத்துக்கு தண்ணீர் தர கேரளம் தயார்: உம்மன் சாண்டி ! எப்டீ ? கத அங்கனையோ சாரே ?

தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரைத் தர கேரளம் எப்போதும் தயாராக உள்ளது என்று, கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.பிரபுவை ஆதரித்து நகரில் பிரசாரம் செய்த அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
தேசிய அளவில் வலிமையான அரசு, மதச்சார்பற்ற இந்தியா என்ற கோஷத்தை காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளது. இந்திய மக்கள் கண்டிப்பாக இதை ஒப்புக் கொள்வார்கள். கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி இதை நிரூபித்துள்ளது.
பாஜக கூட்டணி மக்களைப் பிரிப்பதன் மூலம் சில சாதகமான அம்சங்களைப் பெற முயற்சிக்கிறது.
ஆனால் அது வெற்றி பெறாது. இந்திய மக்கள் மதச்சார்பற்ற தன்மைக்கு சார்பாகவே நிற்பார்கள்.
தேசிய புலனாய்வு முகமை எடுத்த புள்ளிவிவரப்படி குற்றச் செயல்களில் கேரளம் முதலிடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கேரளத்தில் அதிகப் புகார்கள் காவல் நிலையங்களில் பதிவாகின்றன. போலீஸார் இதன்மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றனர்.
பல்வேறு துறைகளில் குஜராத்தை விட கேரளம் முதன்மை மாநிலமாக உள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியா, பாஜகவா என்ற கேள்வி எழும்போது கண்டிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள். இரு கட்சிகளுக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக நடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், புகார் எழுந்தவுடன் மத்திய அமைச்சர்கள் பலரை காங்கிரஸ் கட்சி சிறையில் அடைத்துள்ளது.
மோடி அலை எங்கும் வீசவில்லை. கேரளத்தில் 15-க்கு மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.
முல்லைப் பெரியாறு: கேரளத்துக்கும் பக்கத்து மாநிலங்களுக்கும் இடையில் உறவு நன்றாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட கேரளம் தயாராக உள்ளது. அணை பலமிழந்து உள்ளது என்றுதான் கேரளம் கூறுகிறது. கேரளத்தின் 5 மாவட்ட மக்களுக்கு பாதுகாப்புத் தர வேண்டியுள்ளது. தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரைத் தர கேரளம் எப்போதும் தயாராக உள்ளது என்றும் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
கோவை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.பிரபு உடனிருந்தார். பிரபுவை ஆதரித்து கணபதி, உக்கடம் உள்ளிட்ட 5 இடங்களில் உம்மன் சாண்டி பிரசாரம் செய்தார்.

கருத்துகள் இல்லை: