புதன், 23 ஏப்ரல், 2014

குஷ்பு: வீட்டை விட்டு வெளியே நிம்மதியாக போக முடியவில்லை!

டி.பி.சத்திரம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது, வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று நடிகை குஷ்பு பேசினார். மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நடிகை குஷ்பு டி.பி.சத்திரம் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர்,  ‘’தயாநிதி மாறன் சாதனையால் இன்று எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது. தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியா முழுவதும் இந்த புரட்சியை ஏற்படுத்தியவர். பல சாதனைகளை செய்ததால்தான் 2 தடவை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது மூன்றாவது தடவையாக சாதனைகள் செய்ய உங்கள் முன் நிற்கின்றார். அ.தி.மு.க. பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் மின்சார தடை அதிகமாக உள்ளது. பல இடங்களில் 10 மணி நேரம், 12 மணி நேரம் கிராமப்புறங்களில் 16 மணி நேரம் வரை மின் தடை இருக்கிறது. ஆட்சிக்கு வரும்போது மின் தடையை நீக்குவோம் என்று சொன்னார்கள். எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது வாழ்க்கையே இருண்டு கிடக்கிறது. தண்ணீர் பிரச்சினை கடுமையாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் இலவச குடிநீர் தருவதாக தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள்.


ஆனால் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.10–க்கு விற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள். தாழ்த்தப்பட் டவர்களுக்கு இலவச குடியிருப்பு கட்டி கொடுத்தவர் கலைஞர். உங்களுக்காக சிந்திக்கின்ற ஒரே தலைவர் கலைஞர். உங்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள். தி.மு.க. ஆட்சியில் மக்கள் பயம் இல்லாமல் இருந்தார்கள். இப்போது வீட்டை விட்டு வெளியே நிம்மதியாக போக முடியவில்லை.
இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். எதுவுமே செய்யாத உங்களுக்கு எதற்கு ஆட்சி கொடுத்த வாக்குறுதிகளே எதை நிறைவேற்றினீர்கள். மின்சாரம், தண்ணீர் தாராளமாய் கிடைக்கும் என்று சொன்னீர்கள் செய்தீர்களா, பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டீர்கள்’’என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: