தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அனல் பறக்கும் கோடை கால வெயிலில் தலைவர்களின் பிரசாரத்திலும் அனல் தெறித்தது. இதுவரை தமிழகம் இதுவரை கண்டிராத வித்தியாசமான தேர்தல் பிரசாரமாக இருந்தது.
அதற்கு காரணம், தமிழக தேர்தல் வரலாற்றில் 5-க்கும் மேற்பட்ட அணிகள் களம் காணுவது இந்தத் தேர்தல் மட்டுமே என்பதால்தான்!
தமிழகத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
முக்கிய அரசியல் கட்சிகள் கடந்த ஜனவரி மாதம் முதலே தேர்தல் கூட்டணியை அமைக்க பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. ஆனால், வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நாளான ஏப்ரல் முதல் வாரம் வரை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.
வழக்கமாக தேர்தல் கூட்டணியை முன்னதாகவே அமைத்து பிரசாரத்தையும் முன்கூட்டியே தொடங்கும் ஜெயலலிதா, இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிகளை கடைசி நேரம் வரை காத்திருக்க வைத்து, கழற்றிவிட்டார்.
40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த ஜெயலலிதா, பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்போது தனது கட்சி வேட்பாளர்கள் வாபஸ் வாங்கிக்கொள்வார்கள் என்றார். ஆனால், போயஸ் கார்டன் கதவு அடைக்கப்பட்டதால் கூட்டணியே ஏற்படாமல் போனது.
இதையடுத்து முன்கூட்டணியே மார்ச் 3ம் தேதி பிரசாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா, தேசியத் தலைவர்களைப்போல ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரசாரம் செய்தார்.
ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் கேட்டுக்கொண்டபடி அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒரே நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். மேலும் ஜெயலலிதாவின் பிரசாரப் பொதுக்கூட்ட மேடை வடக்கு நோக்கியே அமைக்கப்பட்டன. வடக்கு திசைக்காக இடம் கிடைக்காமல் கட்சியினர் பல இடங்களில் திண்டாடினர்.
பிரசாரம் தொடங்கிய நாள் முதல் கூட்டத்துக்கு ஆட்களைத் திரட்டுவதற்காக ஆண்களுக்கு ரூ.200, குவார்ட்டர், பிரியாணி, பெண்களுக்கு சேலை, ரூ.200, பிரியாணி, முளைப்பாரிக்கு 500 என அ.தி.மு.க.வினர் தண்ணீராக பணத்தைச் செலவழித்தனர். பணம் கிடைக்கும் என்பதற்காக பொதுமக்களும் பறவைகள் கூட பறக்க அஞ்சும் கோடையின் உச்சி வெயிலில் மக்கள் அமர்ந்திருந்து தங்கள் வேலை முடிந்ததும் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்றனர்.
என்னதான் பறந்து பறந்து பிரசாரம் செய்தாலும் கடைசியில் கீழே இறங்கித்தான் ஆக வேண்டும் என்பது போல, ஜெயலலிதா, பிரசாரத்தை முடிக்கும் போது சென்னை நகருக்குள் வேனில் சென்று பிரசாரம் செய்தார்.
அத்துடன், ஒரு நாள் முன்கூட்டியே (திங்கட்கிழமை) பிரசாரத்தை முடித்துக்கொண்டார். ஒரே மேடையில் 40 வேட்பாளர்களுடன், இடைத் தேர்தல் நடக்கும் ஆலந்தூர் சட்டசபை தொகுதி வேட்பாளரையும் சேர்த்து 41 பேரையும் ஏற்றி அறிமுகம் செய்து வைத்தார்.
ஒரு மாநிலக் கட்சியாக இருந்துகொண்டு நான் தான் அடுத்த பிரதமர் என ஜெயலலிதாவும், அவரது கட்சி நிர்வாகிகளும் கூறி பிரசாரத்தில் ஈடுபட்டதால், வட இந்தியத் தலைவர்களையும் மிஞ்சிவிட்டார் என்பதைக் காண முடிந்தது. தமிழக மக்களிடமும் ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்ற கோஷம் அ.தி.மு.க.வினரால் முன்னெடுக்கப்பட்டு பிரசாரம் நடந்தது.
ஆளுங்கட்சி எப்போது விதிகளை மீறுவதைப்போல, பிரசாரத்தில் கொடிகள், தோரணங்கள் கட்டுவது முதல் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் செல்வது, அரசு எந்திரங்களை, அரசு ஊழியர்களை தவறாகப் பயன்படுத்துவது போன்றவற்றிலும் முன்பு ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வுக்கு நமது அரசு சளைத்தது இல்லை என்பதையும் நிரூபித்துக்காட்டினார் ஜெயலலிதா.
இவற்றுக்கெல்லாத்தையும் விட, தேர்தல் ஆணையம் பண விநியோகத்தைத் தடுக்க கூடுதலாக அதிகாரிகளை நியமித்தாலும் அது தனது கட்சியை ஒன்றும் செய்துவிடாது என்பதற்குக் கட்டியம் கூறுவதுபோல, பண விநியோகத்தையும் ஜெயலலிதா தனது தொண்டர்களை வைத்து கச்சிதமாக முடித்துவிட்டார்.
இப்படி யாருமே செய்யாத வகையில் இந்தத் தேர்தலில் ஜெயலலிதா செய்தது மற்ற தலைவர்களைக் காட்டிலும் அவரை அனைத்திலும் வித்தியாசப்படுத்தியது.
தேர்தல் முடிவிலும் அந்த வித்தியாசத்தை ஜெயலலிதா நிருபிப்பாரா?
அம்மா கூறியது, 40-க்கு-40.
அம்மா எதிர்பார்ப்பது, 40-க்கு-35.
அம்மா அமைச்சர்களிடம் கூறியிருப்பது: “40-க்கு-30 கிடைக்காவிட்டால், தொலைந்தீர்கள்”
கிடைக்கப் போவதை தெரிந்துகொள்ள, மே 16-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக