குற்றச்சாட்டுக்கள் வரையப்பட்ட காலத்திலிருந்து ஒரு ஆண்டுக்குள் அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் முடிக்கப்பட வேண்டும். வழக்குகள் தினந்தோறும் நடத்தப்பட வேண்டும். தவிர்க்க இயலாத தாமதம் ஏற்பட்டால் தாமதத்துக்கான காரணம் குறித்து சம்மந்தப்பட்ட நீதிபதி, தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்’’. இது கடந்த மார்ச் 10 அன்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோதா மற்றும் குரியன் ஜோசப் அளித்த இடைக்கால தீர்ப்பு.
தன் மீதான வழக்கை நடத்தவிடாமல், கடந்த 17 ஆண்டுகளாக நீதித்துறையில் ‘புரட்சி” செய்து வரும் ஜெயலலிதா அம்மையாருக்கு மட்டும் இந்தத் தீர்ப்பு பொருந்தாது போலும்! இப்படி உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகக் கூறவில்லை என்ற போதிலும், நீதியரசர்கள் பி.எஸ்.சவுகான், செல்லமேஸ்வர் ஆகியோர் சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு 3 வாரகாலம் இடைக்காலத் தடை விதித்து அம்மாவுக்கு ஆறுதல் அளித்துள்ளார்கள்.
17 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களுர் சொத்துகுவிப்பு வழக்கை இழுத்தடித்து வரும் அம்மா வாய்தா ராணி என்றால், அவருக்கு கேட்டபடியெல்லாம் வாய்தா வழங்கிய நீதியரசர்களை வாய்தா ராஜாக்கள் என்று அழைப்பதுதானே பொருத்தம்? ஒரு கிரிமினல் வழக்கை நடத்த விடாமல் சட்டப்படியே அதனை முடக்குவது எப்படி என அம்மா ஒரு புத்தகம் எழுதினால், அதற்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பிக்கும் தகுதி பெற்றவர்கள் இந்த நீதியரசர்கள்தான்.
1996-ல் ஜெயா, சசி மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி சோத்துக் குவித்ததாக பதியப்பட்ட வழக்கில் 1997-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செயப்பட்டு, 2001-ல் பெங்களூருக்கு மாற்றப்பட்டு, 6 மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அதன்பின் கடந்த 14 ஆண்டுகளாக அம்மா நடத்திய திருவிளையாடல்கள் ஓராயிரம். உதாரணத்திற்கு சில……….
- 2001-ல் ஏற்கனவே சாட்சியமளித்த 74 சாட்சிகளில் 63 பேரை பிறழ்சாட்சியாக மாற்றியது
- அதன்பின் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மனு
- அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு என மனு
- நீதிபதி நியமனத்தில் முறைகேடு என மனு
- குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய முன் அனுமதி இல்லையென்று மனு
- ஆவணங்கள் தரக்கோரி மனு
- மொழிபெயர்ப்பு செய்து தரக் கோரி மனு
- மொழிபெயர்ப்பு சரியில்லை-மாற்றி தரக்கோரி மனு
- புதிய வழக்கறிஞர் ஆஜராவதால் வாய்தா கோரி மனு
- புதிய வழக்கறிஞர் கோப்புகளைப் படிக்க கால அவகாசம் கோரி மனு
- 2011-ல் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக இலஞ்ச ஒழிப்பு போலீசு மூலம் வழக்கை மீண்டும் விசாரிக்க மனு
- இவை அனைத்திற்கும் உயர் நீதிமன்றம், உச்ச நீதி மன்றங்களில் மேல்முறையீட்டு மனுக்கள்
“ஏழு கடல் ஏழு மலை தாண்டி” சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியது. உடனே அம்மையாரின் அபிமான அரசு வக்கீல் பவானிசிங், உடல்நிலை சரியில்லையென்று, பொய் மருத்துவ சான்றிதழ் கொடுத்தார். அதனை நிராகரித்து விசாரணைக்கு ஆஜராகாத நாளில் ரூ.65,000/- பவானிசிங் அபராதம் செலுத்த வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பவானிசிங் மேல்முறையீடு செய்தார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா, இந்த வழக்கில் துவக்கம் முதலே பல நாடகங்கள் நடந்து வருவதாகக் கூறி பவானிசிங்கின் மேல்முறையீட்டை நிராகரித்தார். இப்படி கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் பச்சையாக விசயத்தை உடைத்த பிறகும், விசாரணைக்கு 3 வாரம் இடைக்காலத்தடை கொடுத்திருக்கிறார் உச்சநீதிமன்ற நீதியரசர் சவுகான். இதே நீதி அரசர் சவுகான்தான் சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் தீட்சிதர்களுக்கும் சுப்பிரமணியசாமிக்கும் ஆதரவாக தீர்ப்பு வழங்கியவர்.
அடுத்து நமது சென்னை உயர்நீதிமன்றம்! ஜெயா, சசி பங்குதாரர்களாக இருந்த 22 நிறுவனங்களின் சொத்துக்களுக்கு 2000-வது ஆண்டில் இணைப்பாணை (Attachment Order) விசாரணை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு, அவை முடக்கப்பட்டன. இதன்பின் சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டு வழக்கின் விசாரணையே முடிந்து தீர்ப்பு வர உள்ளது. இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசன் சொத்துக்குவிப்பு வழக்கில் முடக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பல சொத்துகள் ஜெயலலிதாவுக்கு தொடர்பானவை அல்ல என்று கூறி அவற்றை விடுவித்திருக்கிறார். பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கின் மேல் முறையீடுகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய முடியும் என்ற போதிலும் தெரிந்தே இதை மீறியிருக்கிறார் நீதிபதி அருணா ஜெகதீசன். வழக்கை மேலும் இழுத்தடிப்பதுதான் இதன் நோக்கம். இவ்வழக்கில் ஜெயாவுக்கு “எதிராக” சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பவர் அ.தி.மு.க. அரசு வழக்கறிஞர் இன்பதுரை. இப்படியொரு வழக்கு நடந்திருப்பதே தனக்குத் தெரியாது என்று சாதிக்கிறார் சொத்துகுவிப்பு வழக்கை நடத்திவரும் பவானிசிங்.
இவை மட்டுமல்ல, சென்னையில் நடந்து வரும் வருமான வரி ஏய்ப்பு வழக்கிலும் பெங்களூரு வழக்கின் கதைதான். வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவிக்க முடியாது என்றும், இந்த வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் ஜனவரி 30-ம் தேதியன்று உத்தரவு பிறப்பித்தார் உச்ச நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன். இந்த தீர்ப்புக்குப் பின்னரும் ஏப்ரல் 10 வரை விசாரணை நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகவில்லை. ஏப்ரல் 28 அன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென்று சென்னை தலைமை பெருநகர கூடுதல் மாஜிஸ்டிரேட் தட்சிணாமூர்த்தி ஏப் 10 அன்று உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை மேலும் 4 மாதம் தள்ளி வைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் மனு போட்டார் ஜெ. மனு ஏப்ரல் 11 அன்று விசாரணைக்கு வந்த போது, “இனிமேலும் விசாரணையை தள்ளி வைக்க முடியாது” என்று கூறிய நீதிபதி ராதாகிருஷ்ணன் வழக்கை ஏப்ரல் 15 க்கு ஒத்தி வைக்கிறார். ஆனால் ஏப் 15 அன்று, அதாவது நாலே நாட்களில், அவர் வழங்கும் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மாறிவிடுகிறது. வழக்கு விசாரணையை மேலும் 3 மாதம் நீட்டித்து உத்தரவிடுகிறார் நீதிபதி ராதாகிருஷ்ணன். 28-ம் தேதி “ஜெயலலிதா கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்” என உத்தரவிட்ட சென்னை நீதிபதி தட்சிணாமூர்த்திக்கு, மறுநாளே (ஏப் 16) சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் மாற்றல் உத்தரவு பிறப்பிக்கிறார். ஆனால் மறுநாளே அந்த மாற்றல் உத்தரவு அவசரம் அவசரமாக ரத்து செயப்படுகிறது.
நீதிபதிகள் நியமனம், மாற்றம் ஆகிய அனைத்துமே மிகவும் மர்மமான முறையிலும் சந்தேகத்துக்கிடமான முறையிலும் நடைபெறுகின்றன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், மூவர் விடுதலை குறித்து விரைவில் தீர்ப்பு வரவிருப்பதாக முறைகேடான அறிவிப்பொன்றை பொது அரங்கில் வெளியிடுகிறார். இது தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தேடும் முயற்சி என்று பச்சையாகத் தெரிந்தாலும் அவர் கவலைப்படவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் அனைத்துமே தலைமை நீதிபதியின் ஆசியுடன்தான் வழங்கப்படுகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஜெயலலிதா மீதான வழக்குகளை அடுத்த அரசு அமையும் வரை முடிய விடாமல் இழுப்பதும், பிறகு அமையவிருக்கும் அரசாங்கத்துடன் பேரம்பேசி, எல்லா வழக்குகளுக்கும் சமாதி கட்டுவதற்கு ஜெயலலிதாவுக்கு உதவி செய்வதும்தான், மேற்கூறிய தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நோக்கம்.
ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளில் இத்தனை அயோக்கியத்தனங்கள் 17 வருடங்களாக தொடர்ந்து அரங்கேறுவதை ஜெயலலிதாவின் சாமர்த்தியம் என்று கூறிவிட முடியுமா? நீதிபதிகளின் கூட்டுக் களவாணித்தனம் இல்லாமல் இந்த சாமர்த்தியம் வெற்றி பெற்றிருக்க முடியுமா? சாதாரண மக்கள் கிடக்கட்டும், ஊழல் குற்றம் சாட்டப்பட்ட வேறு எத்தனை அரசியல்வாதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய கருணைப்பார்வை கிடைத்திருக்கிறது? வழக்குகளை இழுத்தடிப்பதற்கு 17 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு நீதியரசர்கள் வழங்கி வரும் இந்த ஒத்துழைப்புக்கு காரணம், பணமா அல்லது (பார்ப்பனச் சாதி) பாசமா? பெண் வழக்குரைஞரின் கையைப் பிடித்து இழுத்த நீதிபதி கங்குலியின் காலித்தனத்தையே நிரூபிக்க இயலாத போது, இதையெல்லாம் சாட்சி வைத்தா நிரூபிக்க முடியும்?
வெளிப்படையாகத் தெரிகின்ற உண்மைகளுக்கு சாட்சி எதற்கு? ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்பதும் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் சிறப்பு சேவை செய்வதும், பளிச்சென்று தெரிகிறது. குற்றவியல் சட்டங்கள் முதல் தானே வகுத்துக் கொண்ட நெறிமுறைகள் வரையிலான எதையும் நீதிபதிகளே மதிப்பதில்லை என்பது பளிச்சென்று தெரிகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் எட்டு பேர் ஊழல் பேர்வழிகள் என்று குற்றம் சாட்டும் வழக்குரைஞர் பிரசாந்த் பூசனின் மனு உச்ச நீதிமன்றத்தில் தூங்குகிறது. உச்சநீதிமன்றம் தந்திரமாக மவுனம் சாதிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டுவிழாவில் கூச்சநாச்சம் இன்றி ஜெயலலிதாவுடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார் கள் நீதிபதிகள். இதுதான் நீதிமன்றத்தின் யோக்கியதை!
- வாய்தாராணி ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
- வருமானவரி ஏய்ப்பு வழக்கிலும் விசாரணைக் காலம் நீட்டிப்பு!
- நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்! நீதியை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம்! vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக