செவ்வாய், 22 ஏப்ரல், 2014

அதிமுக பிரச்சாரத்துக்கு சென்ற அரசு பஸ் டிரைவர்கள்- மக்கள் தவிப்பு !

சென்னை: அதிமுக செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்துக்கு மாநகர போக்குவரத்துக் கழக அதிமுக தொழிற்சங்க ஊழியர்கள் அனைவரும் சென்றதால் சென்னை முழுவதும் பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 3657 பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சென்னை முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கப்பா அந்த பிர வீண் குமாரு? 
சென்னையில் பிரச்சாரம்: அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா நேற்று முன்தினம் முதல் சென்னையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு ஊழியர்கள் அனைவரும் அழைத்துவரப்பட்டுள்ளனர். கட்டாயம் வரவேண்டும்: முதல்வரின் பிரசாரத்துக்கு அதிகளவில் கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காகவும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வைக்கவும் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள அதிமுக தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும் முதல்வர் பிரசாரத்துக்கு கட்டாயம் வரவேண்டும் என்று கட்சி தலைமை அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக ஊழியர்களுக்கு அனுமதி: இதனால் பெரும்பாலான மாநகர பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கடந்த 19 ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகள் முடக்கம்: பெரும்பாலான டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இல்லாததால் மாநகர பஸ்களை இயக்க முடியாமல் அந்தந்த பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நிர்வாகமும் மறுப்பில்லாமல் அனுமதி அளித்துள்ளது. மற்றவர்களுக்கு "நோ லீவ்": ஆனால், எதிர்க்கட்சி தொழிற்சங்க உறுப்பினர்கள் விடுப்பு கேட்டால் அவர்களுக்கு நிர்வாகம் விடுமுறை அளிப்பதில்லை. விடுமுறை எடுத்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊழியர் பற்றாக்குறை: ஏற்கனவே சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஊழியர் பற்றாக்குறை உள்ள நிலையில் ஆளுங்கட்சியினரின் தேர்தல் பிரசாரத்துக்காக போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் பஸ்களை இயக்க முடியாமல் போக்குவரத்து நிர்வாகம் திணறி வருகிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: