சனி, 26 ஏப்ரல், 2014

தி.மு.க., காங். வேட்பாளர்கள் செலவுகளை சமாளிக்க திணறல்: ! பணம் பட்டுவாடாவில் கடும் பாகுபாடு

லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு, தேர்தல் செலவுக்கென, முதல்கட்டமாக, கட்சி சார்பில், பணம் வழங்கப்பட்டதோடு சரி; இரண்டாம் கட்டமாக, பணம் தர முடியாது என, ஸ்டாலின் கைவிரித்து விட்டதால், மாவட்ட செயலர்களும், முன்னாள் அமைச்சர்களும், வேட்பாளர்களுக்கு, கடைசி கட்ட செலவுகளை சமாளிக்க, தவித்துப் போனதாக, தகவல் வெளியாகி உள்ளது கொதிப்பு: அதேபோல், காங்., கட்சியில், தேர்தல் செலவுக்கு, வேட்பாளர்களுக்கு பணம் வழங்கியதில், பாகுபாடு காட்டப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் கொதிப்படைந்து உள்ளனர். லோக்சபா தேர்தலை ஒட்டி, தி.மு.க., சார்பில், தேர்தல் நிதி திரட்டப்பட்டது. மாவட்ட வாரியாக, திரட்டப்பட்ட நிதியான, 115 கோடி ரூபாய், திருச்சியில் நடைபெற்ற, தி.மு.க., மாநில மாநாட்டில், கட்சித் தலைமையிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன், தேர்தலில் போட்டியிட, விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் இருந்தும், கட்டணமாக, ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலானது. தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம், கட்சித் தலைமை நேர்காணல் நடத்திய போது, 'கோடிக்கணக்கான பணத்தை, தேர்தலுக்கு செலவிட தயாராக உள்ளோம்' என, வாக்குறுதி அளித்த பலருக்கு, 'சீட்' வழங்கப்பட்டது.
அப்படி, பண பலத்தின் அடிப்படையில், 'சீட்' பெற்றவர்கள், குறிப்பிட்ட அளவு தொகையை, தேர்தல் செலவுக்காக, கட்சித் தலைமையிடத்தில், 'டிபாசிட்' டும் செய்தனர். அதேநேரத்தில், கட்சிக்காக உழைத்தவர்கள், கட்சித் தலைமைக்கு வேண்டியவர்கள் என்ற அடிப்படையில், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட சிலர், தேர்தலுக்கு செலவு செய்ய, பெரிய அளவில் பணம் இல்லாமல் இருந்தனர். அதனால், அவர்களுக்கு மட்டும், முதல் கட்டமாக, கட்சி பூத் கமிட்டி செலவு மற்றும் தேர்தல் செலவுக்கு என, ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டது. மீதி தொகையை, மாவட்ட செயலர்களும், முன்னாள் அமைச்சர்களும் கொடுக்க வேண்டும் அல்லது செலவுகளை ஏற்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இரண்டாம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட செலவுக்காக, கட்சி மேலிடத்திடம் இருந்து, பணம் வரும் என, அந்த வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் நம்பி, ஆவலோடு காத்திருந்தனர்.


திணறல்:
ஆனால், 'இரண்டாம் கட்டமாக, செலவுக்கு பணம் எதுவும் தர முடியாது. வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், தேர்தல் செலவுகளை சமாளித்துக் கொள்ள வேண்டும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அப்படி கைவிரித்ததால், கடைசி நேரத்தில், பூத் கமிட்டி செலவு உட்பட, பல இறுதிக் கட்ட செலவுகளுக்கு பணம் கொடுக்க, வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் திணறியுள்ளனர். இருந்தாலும், அப்படி இப்படி என புரட்டி, பின் அவர்கள் சமாளித்து உள்ளனர். தேர்தல் நிதியாக வசூலித்து தரப்பட்ட நிதி, பல கோடி ரூபாய் இருந்தும், இரண்டாம் கட்டமாக, ஸ்டாலின் பணம் தர மறுத்ததற்கு காரணம், 2016 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே என, கூறப்படுகிறது. இந்த தேர்தலுக்கு வசூலான நிதியையும், 2016 சட்டசபை தேர்தலை ஒட்டி, வசூலிக்கும் நிதியையும் சேர்த்து, அந்த சட்டசபை தேர்தலுக்கு செலவு செய்ய, ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். அப்படி செலவு செய்தால், தி.மு.க., நிச்சயம் ஆட்சியை பிடிக்க முடியும் என்றும், அவர் நம்புகிறார். அதனால் தான், லோக்சபா தேர்தல் செலவுக்கு, இரண்டாம் கட்டமாக பணம் தராமல் கைவிரித்து விட்டார் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதேபோல், தமிழக காங்., சார்பில், தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு, தேர்தல் செலவுக்கு பணம் வழங்கியதிலும், பாகுபாடு காட்டப்பட்டு உள்ளது. அதாவது, சிட்டிங் எம்.பி.,க்களுக்கும், இளைஞர் காங்., 'கோட்டா'வில், 'சீட்' வாங்கிய வேட்பாளர்களுக்கு, குறிப்பிட்ட அளவு தொகை, தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், மற்ற காங்., வேட்பாளர்களுக்கு, சிட்டிங் எம்.பி.,க்கள் மற்றும் இளைஞர் காங்., கோட்ட வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகையில், பாதித்தொகை மட்டுமே தரப்பட்டு உள்ளது. அதனால், அவர்கள் கொதித்துப் போயுள்ளனர்.


புலம்பல்:
'சிட்டிங் எம்.பி.,க்கள் ஏற்கனவே, சம்பாதித்து வசதியாக இருப்பவர்கள். அவர்களுக்கு குறைத்து கொடுத்திருந்தாலும், பரவாயில்லை. புதிதாக போட்டியிடும் எங்களுக்கு, எப்படி குறைக்கலாம். இளைஞர் காங்., கோட்டாவில், 'சீட்' வாங்கியவர்கள் மட்டும், வானத்திலிருந்து குதித்தவர்களா, அவர்களுக்கும் அதிக பணம் தரலாம். இந்த விஷயத்தில், ஒரு கண்ணில் வெண்ணெயும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து விட்டார் ராகுல்' என, அந்த வேட்பாளர்கள் புலம்பி வருகின்றனர். சத்தியமூர்த்தி பவனில், வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கும் போது, இதுகுறித்து, காரசாரமாக கேள்வி எழுப்பவும், அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.


- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: