வியாழன், 24 ஏப்ரல், 2014

பணம் + ஜெயலலிதா + பிரவீன்குமார் ? மட்டுமே ஒரு வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்குமா?மே 16-ம் தேதி தெரிந்துகொள்ளலாம்.”

தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் சற்றும் மனம் தளராமல், நேற்றும் (புதன்கிழமை) வாக்காளர்களுக்குப் ‘நேர்மையாக’ பணம் கொடுத்தனர். ‘நேர்மையாக’ என குறிப்பிடுவதன் காரணம், பணத்தை வாங்க மறுத்த மற்றும் வெளியே சென்றிருந்த வாக்காளர்களின் வீடுகளுக்குள் பணத்தை வீசிச் சென்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
வேண்டாம் எனும்போதே பணத்தை வீசிச் செல்கிறார்கள் என்றால், அம்மா பிரதமரானால், நாட்டில் பாலாறும் தேனாறும் மட்டுமல்ல, கரன்சியாறும் ஓடுமே என புல்லரித்தனர், இதைப் பார்த்த பொதுமக்கள்.
நேற்றைய சாதனையாளராக, ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. வேட்பாளரிடமிருந்து அதிகபட்சமாக ரூ.32 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டபோதிலும் அவர்கள் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளைப் பிடித்தால் 545 தொகுதிகள் கொண்ட இந்தியாவின் பிரதமராகிவிடலாம் என்பது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் துல்லியமான கணிப்பு. ஒருவேளை பிரதமர் பதவியைப் பிடிக்க முடியாவிட்டால்கூட, மெஜாரிட்டி பெற்ற கட்சிக்கு ஆட்சியமைக்க ஆட்கள் தேவைப்பட்டால், தனது ஆதரவுடன் அமையும் மத்திய அரசில் தான் நினைத்த காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்பது அவரது கணக்கும்கூட.
அம்மாவுக்கு அவசரகதியில் செய்யப்பட வேண்டிய காரியம் என்ன? மீனவர் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை, காவிரி எல்லாமே அவசரம்தான். இருந்தாலும் அவற்றைவிட சற்றே அவசரம் வாய்ந்த மற்றொரு காரியமும் உள்ளது.
ஜெயலலிதாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருப்பது, பெங்களூருவில் நடக்கும் வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்குதான்.
இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் இறுதி வாதம் தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதனால், புதிதாக அமையும் கூட்டணி அரசு மூலம் காரியத்தைச் சாதிக்க வேண்டிய அவசியம் அம்மாவுக்கு உள்ளது.
இதன் காரணமாகவே, தமிழகத்தில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என தொடக்கத்தில் இருந்தே கங்கணம் கட்டியுள்ளார்.
கூட்டணி பலம் இல்லாமல் சொந்த கட்சியின் பலத்தை நம்பிய ஜெயலலிதா, தேர்தல் முடிந்த பின் பாரதிய ஜனதா கூட்டணிக்குச் சென்றுவிடுவார் என முக்கிய முஸ்லிம் அமைப்பான தவ்ஹீத் ஜமாத் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டு தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியது.
அதே நேரத்தில், கருத்துக்கணிப்புகளும், உளவு அமைப்புகளின் கணிப்புகளும் அ.தி.மு.க.வின் 40-க்கு-40 கணக்கை டேமேஜ் செய்வதாக இருந்தது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியின் கடைசி நேர பண விநியோகத்தைப் போலவே, இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கச்சிதமாக அரங்கேற்றியுள்ளது.
ஆனால் போதாத காலம், 5 முனைப் போட்டி என்பதால் அ.தி.மு.க.வினரின் பண விநியோகம் எளிதில் வெளியே தெரிந்துவிட்டது. இதனால், தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் பண விநியோகத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சொந்த ஜாமீனில் காவல் நிலையங்களிலேயே விடுவிக்கப்பட்டதால், உடனடியாகவே தங்கள் பணியை அடுத்த அரை மணி நேரத்திலேயே தொடர்ந்தனர்.
இதனால், அ.தி.மு.க.வினரின் பண விநியோகப் பணிகள் போலீசின் நடவடிக்கையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரனிடமிருந்து ரூ.32 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். முக்கிய புள்ளி ஒருவரிடமிருந்து வேட்பாளருக்கு பணம் கை மாறியபோது அதிகாரிகள் பிடித்துவிட்டனர். இந்தப் பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்க செல்லவேண்டிய பணம்.
இருப்பினும் துரிதமாக மாற்று ஏற்பாடு செய்துவிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரன், தொகுதியில் பண விநியோகத்தை சிறப்பாக செய்து முடித்தார். ஒருவேளை அவர் ஜெயித்தால், இந்த துரித நடவடிக்கை, பொன்னேடுகளில் பதிக்கப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை.
“தமிழகத்தில் பணம் மட்டுமே ஒரு வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்குமா?” என்பதை தேர்தல் முடிவு வெளியாகும் மே 16-ம் தேதி தெரிந்துகொள்ளலாம்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: