காங்கிரஸையும் அழைத்து வந்தால் திமுக கூட்டணிக்கு தயார் என யோசனை சொல்கிறார் விஜயகாந்த். ஆனால், காங்கிரஸோடு கூட்டணி வைப்பது காங்கிரஸையும் திமுக-வையும் சேர்த்தே குழியில் தள்ளிவிடும் என திமுக தரப்பிலிருந்து காங்கிரஸ் மேலிடத்துக்கு பக்குவமாக தகவல் சொல்லி அனுப்பப் பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் குலாம்நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது மீண்டும் காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்து குலாம் நபி பேச்செடுத்தபோது, ’அதற்கு இப்போது வாய்ப்பில்லை. தேர்தலில் போட்டியிட்டு பாஜக-வைவிட கூடுதலான இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறட்டும் அப்போது நாங்கள் காங்கிரஸை ஆதரிக்கிறோம்’ என்று கருணாநிதி சொல்லி அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.

இந்தத் தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்ட திமுக மேல்மட்ட தலைவர் ஒருவர், “குலாம் நபி மாத்திரமல்ல, மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் தலைவரோடு பேசினார். ’மீண்டும் கூட்டணி அமைத்து எங்களுக்கு பத்து இடங்களில் போட்டியிட வாய்ப்பளித்தீர்களானால் காங்கிரஸ் ஐந்து இடத்திலாவது ஜெயிக்குமே’ என்று அவர் சொன்னபோது, ‘காங்கிரஸும் திமுகவும் கூட்டணி அமைத் தால் இரண்டு பேருமே தோற்றுப் போவோம்; அதற்கு ஒத்துக் கொள்கிறீர்களா?’ என்று தலைவர் கேட்டார். அத்தோடு அந்தப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது.
திமுகவிடம் நேரடியாக பேசிப் பலனில்லாமல் போனதால் இப்போது விஜயகாந்த் மூலமாக திமுகவுக்கு காங்கிரஸ் செக் வைக்கிறது. காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன பிறகுதான், தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை திமுகவினருக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் காங்கிரஸ் கூட்டு என்றால் திமுகவுக்கு எதிராக அதிருப்தி அலை அடிக்கும். கடந்த நாடாளு மன்றத் தேர்தலிலேயே இந்த அலை வீசியது. அதனால்தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் கணிசமாக தோற்று திமுக வேட்பாளர்கள் கணிசமாக ஜெயித்தார்கள். திமுக வலுவாக இருக்கும் தென் மாவட்டங்களில்தான் காங்கிரஸ் ஐந்து இடங்களை வென்றது.
யாருடன் கூட்டு வைத்தாலும் கூட்டணிக்கு தலைமை தேமுதிக தான் என்ற கருத்தையும் விஜயகாந்த் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். இவருடைய நிபந்தனை காங்கிரஸ் அல்லது பாஜக-வுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும், திமுகவுக்கு சரிப்பட்டு வராது. தெற்கு மற்றும் கொங்கு மண்டல திமுக செயலாளர்கள்தான் தேமுதிக கூட்டணி வேண்டும் என்கிறார்கள். வடக்கு மற்றும் சோழ மண்டலத்தில் தேமுதிக இல்லாமலேயே ஜெயித்துவிடலாம் என்ற தைரியம் திமுகவினருக்கு இருக்கிறது. எனவே, இப்போதுள்ள நிலையில் கூட்டணியில் தேமுதிக இல்லை என்றாலும்கூட திமுக கணிசமான இடங்களில் வெற்றிபெறும்’’ என்று சொன்னார்.
தொடர்புடையவை  Tamil.thehindu.com/