சனி, 1 பிப்ரவரி, 2014

அழகிரியின் பிறந்த நாள், 50 ஆயிரம் பேர் வரை திரண்டதால், கட்சித் தலைமை அதிர்ச்சி

தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, தென்மண்டல அமைப்புச் செயலர், அழகிரியின் பிறந்த நாள் விழாவுக்கு, 50 ஆயிரம் பேர் வரை திரண்டதால், கட்சித் தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால், அழகிரியை சமாதானப்படுத்துவதற்கான, ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் துவங்கிஉள்ளன. முதல் ஆளாக, கருணாநிதியின் மகள் செல்வி, அழகிரியுடன் பேசியுள்ளார்.

ஆதரவாளர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்து, கட்சித் தலைவரும், தந்தையுமான, கருணாநிதியுடன் ஆவேச வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதனால், தானும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்டான, அழகிரி, நேற்று முன்தினம், மதுரையில், தன், 63வது பிறந்த நாளை கொண்டாடினார்.வழக்கமாக கொண்டாடப்படும் பிறந்த நாளை விட, இந்த பிறந்த நாளை, வேண்டுமென்றே, அவரின் ஆதரவாளர்கள் விமரிசையாக கொண்டாடினர். பிறந்த நாள் விழாவுக்கு, மூன்று எம்.பி.,க்கள் உட்பட, 50 ஆயிரம் பேர் வரை திரண்டனர்.மேலும், பிறந்த நாள் கொண்டாடிய அழகிரிக்கு, எதிர்பாராத சிலர் தரப்பிலிருந்தும், வாழ்த்துக்கள் வந்ததால், படுகுஷியானார்.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று விட்டு, அழகிரி வீடு திரும்பிய போது, அவரை, சகோதரி செல்வி, மொபைலில் தொடர்பு கொண்டு பேசினார்.

தூண்டுதலால்:
முதலில், பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், பின், அழகிரியை சமாதானப்படுத்துவது
iv> போல் பேசியுள்ளார். இதுதொடர்பாக, அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க., தலைவர், கருணாநிதி, அழகிரி மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கவில்லை. சிலரின் தூண்டுதலால் தான் எடுத்துள்ளார். இல்லையெனில், லோக்சபா தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், அவர் இப்படி செய்ய மாட்டார்.இருந்தாலும், அழகிரி மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும், எடுத்த நடவடிக்கைகளுக்காக, இப்போது வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.மேலும், அழகிரியின் பிறந்த நாளுக்கு, பெரிய அளவில், ஆதரவாளர்கள் திரள்வர் என்றும், அவர் எதிர்பார்க்கவில்லை.தற்போது, அழகிரியை சமாதானப்படுத்தும் மூடில், கருணாநிதி இருக்கிறார். அதனால் தான், மகள் செல்வி யை, பிறந்த நாளன்று, அவரிடம் பேசும்படி கூறியுள்ளார். செல்வியும், தந்தையின் கட்டளைப்படி, பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வது போல, போன்செய்து, சமாதானம் பேசியுள்ளார்.

அப்போது, அழகிரியிடம், அவர் கூறியதாவது:
ஸ்டாலினும், நீயும் அண்ணன் - தம்பிகள். ஸ்டாலின் கட்சிக்காக நிறைய உழைக்கிறான்; அவனுக்காக நீ தான் விட்டு கொடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும், மிரட்டல், உருட்டல் மூலமாக, அரசியல் செய்ய முடியாது. குடும்பத்தில் கூட, அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். உனக்கு ஏதும் பிரச்னை என்றால், எப்போதும் போல, என்னை அணுகியிருக்கலாம். அப்பாவை ஏன் நீ நேரடியாக அணுகினாய்?நம்மை வழி நடத்திச் செல்லும் அவரை, மரியாதைக் குறைவாகப் பேசுவதும், அவரிடம் வேகமாக நடந்து கொள்வதும், சரியான அணுகுமுறை இல்லை. இதையெல்லாம், நான்
சொல்லி, உனக்கு தெரிய வேண்டியதில்லை. குடும்பப் பிரச்னை தான் இது என்றாலும், கட்சிக்கும், பெரிய அளவில் பாதிப்பை இது ஏற்படுத்தும். அதனால், தேவையில்லாமல் முரண்டு பிடித்து, பிரச்னையை பெரிதாக்கி, பலருடைய எதிர்பார்ப்புக்கும் தீனியாகி விடாதே. உனக்காக, நான் அப்பாவிடம் ஏற்கனவே பேசி உள்ளேன்; மீண்டும் பேசுகிறேன்.இவ்வாறு, அழகிரியிடம் செல்வி கூறி உள்ளார். ஒருவருக்கு சொந்தமல்ல இதற்கு பதில் அளித்த அழகிரி, கூறியதாவது:நீ ஒன்றும் சமாதானம் பேச வேண்டாம். சில நிபந்தனைகளை, தலைவருக்கு நான் நேரடியாகவே வைத்திருக்கிறேன். அதற்கு, அவர் ஒப்புக் கொண்டால், எந்த பிரச்னை யும் இல்லை.அதை தவிர்த்து, யார் என்ன சமாதானம் சொன்னாலும், ஏற்க மாட்டேன்.இதற்கு முன், இருந்தது போல, இனியும், நான் ஏமாளி யாக இருக்க மாட்டேன். கட்சிக்காக நானும் உழைத்திருக்கிறேன். என்னுடைய உழைப்புக்கான மரியாதையும், அதற்கான அந்தஸ்தும் எனக்கும் வேண்டும். அதுவரை, நான் அமைதியாக இருக்க மாட்டேன்.'கட்சி, ஒருவருக்கு மட்டும் சொந்தமல்ல' என்ற எண்ணத்தோடு, யார் வருகிறார்களோ, அவர்களோடு தான், இனி நான் சமாதானம் பேசுவேன். என் ஆதரவாளர்களை காவு கொடுத்து விட்டு, நான் அரசியல் செய்யத் தேவையில்லை. இவ்வாறு, அழகிரி பதில் அளித்துள்ளார். அழகிரி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், அடுத்த கட்டமாக, கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது, பகையான பங்காளிகள் சமாதானம் ஆவார்களாக என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இவ்வாறு, அழகிரி ஆதரவாளர்கள் கூறினர். - நமது சிறப்பு நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: