செவ்வாய், 28 ஜனவரி, 2014

ஊடகங்கள் மீது 'ஆம் ஆத்மி' பாய்ச்சல் ! அப்போ இனித்தது, இப்போ கசக்குது

டில்லியில், ஆட்சியை பிடித்து, புது வரலாறு படைத்த, 'ஆம் ஆத்மி' கட்சிக்கு ஊடகங்கள் ஆதரவு இருந்ததாக கூறப்பட்டது; ஆனால், பதவியில் ஏறிய கொஞ்ச நாட்களிலேயே, ஊடகங்கள் மீது, ஆம் ஆத்மி குறை சொல்ல துவங்கிவிட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, டில்லி போலீஸ் அதிகாரிகள் சிலரை, பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, டில்லி முதல்வர், அரிவிந்த் கெஜ்ரிவால், பார்லிமென்ட் வளாகம் அருகே, தர்ணா போராட்டம் நடத்தினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கெஜ்ரிவாலின் கோரிக்கை நிறைவேறவில்லை. அதே நேரத்தில், அவருக்கு எதிராக விமர்சனம் கிளம்பியது. போதாக்குறைக்கு, அவர் அமைச்சரவை சகா, சோம்நாத் பார்தி, பத்திரிகைகள் மீது தெரிவித்த கருத்துக்கள், ஊடக உலகில், கடும் எதிர்ப்பை சம்பாதித்தது.


மன்னிப்பு கேட்டார்: இதையடுத்து, அவர் மன்னிப்பு கேட்டு கொண்டார். ஆம் ஆத்மியின் போராட்டத்திற்கு, ஊடகங்கள் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது, அக் கட்சி தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

எஸ்.எம்.எஸ்., தகவல்: 'ஆம் ஆத்மிக்கு சாதகமாக இல்லாத பத்திரிகைகைகள், 'டிவி' சேனல்களை புறக்கணிக்க வேண்டும்' என, அக்கட்சி தொண்டர்களிடமிருந்து, கட்சி தலைவர்களுக்கு, மொபைல் போனில் குறுந்தகவல்கள் சென்ற வண்ணம் உள்ளதாம். கடந்த சனிக்கிழமை, அரவிந்த் கெஜ்ரிவாலே ஒரு கட்டத்தில், ஊடகங்கள் மீது, தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.'ஆம் ஆத்மிக்கு எதிராக மலிவான பிரசாரத்தை, சில ஊடகங்கள் செய்கின்றன. இவை, தேசிய கட்சிகளான, பா,.ஜ., மற்றும் காங்கிரசுக்கு சாதகமாக செயல்படுகின்றன. இந்த ஊடகங்கள், உண்மை நிலையை வெளிப்படுத்துவது இல்லை' என, அவர் குறிப்பிட்டு இருந்தார். டில்லி அமைச்சர் சோம்நாத் பார்தி, டில்லியில் திடீர் சோதனை நடத்தி, ஆப்ரிக்க பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாயின. இதில், ஒரு இந்தி மொழி செய்தி, 'டிவி' சோம்நாத் பாரதியை குறிவைத்து செய்திகளை வெளியிட்டதாக, ஆம் ஆத்மி தொண்டர்கள் கூறுகின்றனர்.

அரசியல் பின்னணி: 'அந்த, 'டிவி' சேனலின் அரசியல் பின்னணியை தோலுரித்து காட்ட வேண்டும்; அந்த சேனலுக்கு, மின் வினியோகம் செய்யும் நிறுவனங்களை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்' என, கோரிக்கை வைத்துள்ளனர். அவை இனிமேல், கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு, ஊடகங்களை அழைக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட, அந்த, 'டிவி' சேனலை புறக்கணிக்க வேண்டும். ஆத் ஆத்மிக்கு எதிராக, நியாயமற்ற முறையிலும், மலிவான செய்திகளை வெளியிடும், பத்திரிகைகள், 'டிவி' நிருபர்கள் மீது, பிரஸ் கவுன்சிலில் புகார் செய்ய வேண்டும் அல்லது கோர்ட்டில் அவமதிப்பு தொடர வேண்டும். இவ்வாறு, பலரும் ஆலோசனை வழங்கியுள்ளனர். சோம்நாத் பார்தி - ஊடகங்கள் இடையே கிளம்பிய சர்ச்சையை தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில், எஸ்.எம்.எஸ்., மூலம் கருத்து கேட்கப்பட்டதற்கு, இவ்வாறு, பலரும் தங்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -
dinamalar.com
Click Here

கருத்துகள் இல்லை: