இந்த ஆண்டின் நேர்காணல்'... இப்படித்தான் 'டைம்ஸ் நெள'
சேனல் ராகுல் காந்தியுடனான நேர்காணல் பற்றி விளம்பரப்படுத்தியது. ஆனால்,
ராகுல் காந்தி திங்கள்கிழமை இரவு அளித்த முழுநீள தொலைக்காட்சிப் பேட்டியோ,
அவரது ஆதரவாளர்களை ஏமாற்றத்திலும், அவரது விமர்சகர்களை ஆரவாரத்திலும்
ஆழ்த்தும் நிலைக்குத் தள்ளியது.
இந்தப் பேட்டிக் களத்தில், காங்கிரசின் நட்சத்திர பரப்புரையாளர் ராகுல்
காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிக்கக் கிடைத்த
வாய்ப்பில் இருந்து நழுவினார்.
'இந்து தேசியவாதம்' என்ற மோடியின் நிலைப்பாடு குறித்து கருத்து ஏதும்
தெரிவிக்கவில்லை. மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின்
கொள்கைகள் இவைதான் என எதையும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, தன்னை
மூன்றாவது நபராக அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் பேசினார் ராகுல்
காந்தி.
இந்திய அரசியல் கட்டமைப்புகளில் ஏதோ தவறு இருப்பதாகவும், இந்தக்
குறைபாடுகளால் அன்றாடம் மக்கள் அவதியுறுவதாகவும் தெரிவித்தார்.
அப்படிப்பட்ட அமைப்புகளை, தாம் வெறுப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும்
ஒரு காங்கிரஸ்காரராக சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸ் நிகழ்த்திய
சாதனைகள் என பசுமைப் புரட்சி முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரையில்
பட்டியலிட மறக்கவில்லை.
ராகுல் காந்தி நேர்காணலில் மிகவும் வலுவிழந்த பகுதி என்றால், அது மோடி
பற்றிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்த பகுதியே ஆகும். மோடி தொடர்பான
கேள்விகளில் இருந்து தப்பிக்கவே ராகுல் மிகுந்த ஆர்வம் காட்டினார். குஜராத்
முதல்வர் நரேந்திர மோடி, 2002 குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்தாமல், அதை மேலும் தூண்டிவிட்டார் என்று கூறிய ராகுல், "இது மாதிரியான
சம்பங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால்
இப்போதைய தேவை என்னவென்றால், நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளித்தலே" என
விவாதத்தின் போக்கையே மாற்றினார்.
இதேபோல் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து அவரிடம்
கேள்வி எழுப்பபட்டது, கலவரத்துக்கு மன்னிப்பு கேட்பீர்களா என்ற கேள்வியும்
முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளிக்காத ராகுல், சீக்கியர்களுக்கு எதிரான
கலவரத்திற்கும், குஜராத் கலவரத்திற்கும் வித்தியாசம் இருப்பதாகக் கூறினார்.
சீக்கியர்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்தது,
ஆனால் குஜராத் கலவரத்தை தூண்டியதே பாஜகதான் என்றார்.
மோடி மீதான அச்சத்தால் அவருடன் சரிசமமாக ஒப்பிடப்படுவதை தவிர்க்கிறீர்களா
என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனக்கு எந்தவித அச்சமும் இல்லை, தேர்தல்
தோல்வி பயம் இல்லை; ஆனால் அரசியலில் தன் தந்தை அனுபவித்த துயரங்களையும்,
அவரது மரணத்தையும் எப்போதும் மறந்ததில்லை என்றார்.
காங்கிரஸ் மீது வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எப்போதும்
மெளனம் சாதிப்பது ஏன் என்றதற்கு, "இது தொடர்பாக என் கருத்துகள் அனைத்தையும்
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்து விட்டேன்" என்றார். இது,
பிரதமரிடம் தாம் தெரிவித்துவிட்டதாகவும், பிரதமர்தான் நடவடிக்கை
எடுக்கவில்லை என்கிற குறைகூறும் தொணியில் பேசினார்.
இப்படி எல்லா கேள்விகளுக்கும் தொடர்பு இல்லாமல், தெளிவான பதில் அளிக்காமல்
பேசிய ராகுல் காந்தி குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் குவிந்தன.
ராகுல் சிறுபிள்ளை போல் பேசுவதாக கேலி செய்யப்பட்டார். பிரதமர் பதவியை
ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, வியப்பூட்டும் வகையில் "நான் இப்போது இங்கே
ஏன் அமர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே பெரிய கேள்வி" என்றார்.
ராகுல் காந்தி முதல் முறையாக பேட்டியளித்துள்ளார் என டைம்ஸ் நெள சேனல்
தெரிவித்திருந்தாலும், கடந்த ஜனவரி 14 ஆம் தேதி அவர் தைனிக் பாஸ்கர் இந்தி
பத்திரிகைக்கு பேட்டியளியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில்: பாரதி ஆனந்த்:tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக