நடிகை
ஸ்ரீபிரியாவின் இயக்கத்தில் அதாவது, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பெண்
இயக்குனரிடம் இருந்து வந்திருக்கிற படம் மாலினி 22 பாளையங்கோட்டை. ப்ளே-பாயாக
திரிந்து கொண்டிருக்கும் ஆண்களுக்கு சுர்ருன்னு உரைக்கிற மாதிரி ஒரு படம்
என்றும் சொல்லலாம். மலையாளத்தில் வெளிவந்த ‘22 ஃபீமேல் கோட்டயம்’என்ற படத்தின் ரீமேக் தான் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’பெண்களுக்கு
எதிராக நடந்த தொடர்ந்து நடந்துவருகிற அடக்குமுறைகளையும், பாலியல்
வன்முறைகளையும் பற்றி பேசுவது மட்டுமல்லாமல். படம் பார்க்கிற எல்லா
ஆண்களும் ஏன் எல்லா பெண்களும் கூட ஒரு நொடி அதிர்ந்துபோகிற க்ளைமாக்ஸ்!
எல்லா ஆண்களும் அயோக்கியர்கள் அல்ல. காசுக்காகவும் சுகத்துக்காகவும் சில
காமுகன்கள் நடத்துகிற காமவேட்டைக்கு சில அப்பாவி பெண் பலியாவதையும்,
இதனால் ஒடுங்கி வீழ்ந்துவிடாமல், திமிரிக்கொண்டு திருப்பி அடிக்கிற ஒரு சாமர்த்தியமான மாலினியின் கதை.
ஒரு தனியார் மருத்துவமனியில் செவிலியர் பணி செய்து வருகிறார் மாலினி. இவரின் சொந்த ஊர் பாளையங்கோட்டை. தன் தோழிகளோடு சென்னையில் தங்கி பணி செய்து வரும் மாலினிக்கு வருண் காதல் வலை வீசுகிறார். அந்த வலையில் விழுகிறாள் மாலினி. இருவரும் பப் - பார்ட்டி - குடி என காதல் மயக்கத்தில் வலம் வருகிறார்கள்.
தான்
தங்கியிருக்கும் வீடு இன்னொருவருக்கு தேவைப்படுவதால், தங்குவதற்கு இடம்
தேடி வருகிறார் மாலினி. தன்னோடு தங்கிக்கொள்ள காதலன் இடம் கொடுக்கிறார். அப்போது மாலினி தனிமையில் இருக்கும் போது, காதலனின் நண்பரான இன்னொரு காமுகன் வந்து மாலினியை சூறையாடுகிறான். விஷயம் தெரிந்த காதலன் மாலினியை மருத்துவனையில் பார்த்துவிட்டு, காமுகனை கொல்லப்போவதாக துடிக்கிறான்.
மாலினி
உடல் நலம் தேரி காதலன் வீட்டில் தனிமையில் இருக்கிற வேளையில் மீண்டும் அதே
காமுகனின் வேட்டை அரங்கேறுகிறது. இந்தக் காம வேட்டையில் காதலனுக்கும்
தொடர்பு உள்ளது என்று நமக்கே புரிந்துவிட்ட நிலையில், அந்த அப்பாவி மாலினி
தன் காதலனை இன்னும் நம்புகிறாள். காதலனும் உத்தமன் போல நடிக்கிறான். உண்மை தெரிந்துவிடும் நிலையில், போதைப்பொருள் கடத்தியதாக சொல்லி மாலினி கைதுசெய்யப்படுகிறாள்.
அவளுக்கு
சிறையில் சில நண்பர்கள் கிடைக்கிறார்கள். இயக்கம் சார்ந்த சில போராளிகளின்
மூலம் அந்த காமுகர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பதை தெரிந்துகொள்கிறாள்.
இவர்களைப் போன்ற நம்பிக்கை துரோகம் செய்யும் அயோக்கியர்களுக்கு மரண தண்டனை
போதாது என்று நினைக்கும் மாலினி, அவர்களை எப்படி தண்டிக்கிறார் என்பதே பதற வைக்கும் க்ளைமாக்ஸ்!
இயல்பாகவே
ஸ்ரீபிரியா துணிச்சலான பெண்மணி என்று பேசப்படுபவர், அது போல
வாழ்ந்துகொண்டிருப்பவர். தான் இயக்குவதற்கான கதையை மிகச்சரியாக தேர்ந்தெடுத்து இருக்கிறார். ஒட்டுமொத்த ஆண்களுக்கும் எதிரான படமாக இது இல்லாமல், தன் தாய்க்கோ, தங்கைக்கோ, மனைவிக்கோ, மகளுக்கோ ஒரு கொடுமை
நடந்தால் ஒரு ஆண் வேடிக்கைப்பார்க்க முடியுமா என்ன? எனவே சமூகத்தில்
ஊடுருவி வரும் நச்சுப்பாம்புகளை சாகடிப்பட வேண்டி அவசியத்தை மாலினி 22 பாளையம்கோட்டை அழுத்தமாக பதி
மலையாளப் படத்துடன் ஒப்பிடாமல் இதைத் தமிழ்படமாகவே பார்ப்போமானால், படத்தின் முதல் பாதியின் திரைக்கதையில் வேகம் இருந்திருக்கலாம். காதல்
காட்சிகளாக வரும் பல இடங்கள் சோர்வையே தருகின்றன. தொடக்கத்தில் வரும் சில
காட்சிகளில் கண்காட்சிக்கு சென்ற உணர்வே ஏற்படுகிறது. சிரிக்க வைக்க மலையாளம் பேசும் கோவை சரளாவின் வசனங்கள் எரிச்சல்! அந்த காட்சிகளில் எதார்த்தம் மிஸ்ஸிங்! அங்கங்கே கொஞ்சம் கமர்ஷியல் கலர் பொடி தூவி இருப்பது அவ்வளவாக எடுபடவில்லை. படத்தின் இரண்டாவது பாதி சுறுசுறுப்பாக நகர்கிறது.
க்ளைமாக்ஸ்
காட்சியில் வரும் வசனங்களுக்காக ஸ்ரீபிரியாவுக்கு ஒரு சபாஷ் போடலாம்.
கண்ணீர் துளியே என விஜய் ஜேசுதாஸின் குரலில் ஒலிக்கும் பாடல்,
எங்கோ கேட்டது போல இருந்தாலும், இதயத்தை ஈரமாக்குகிறது. நித்யா மேனன்
சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் அச்சு
அசல் ஸ்ரீபிரியாவின் பாடி லேங்குவேஜ்! வில்லனாக வரும் நரேஷ்
அசத்திவிட்டார். க்ளைமாக்ஸ் காட்சியில் புதுமுகம் க்ரிஷின் நடிப்பும்
மனதில் நிற்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக