பாங்காக் போயிருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் கார்ல்
ஸ்லிம், ஹோட்டலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது விபத்தா அல்லது
தற்கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஹோட்டலின் மாடியிலிருந்து அவர் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 51
வயதான கார்ல், தாய்லாந்து பிரிவு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் போர்டு
கூட்டத்திற்காக அங்கு போயிருந்தார்.
பாங்காங் ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்து டாடா மோட்டார்ஸ் எம்.டி.
மரணம்-தற்கொலையா?
அவர் எப்படி கீழே விழுந்தார் என்பது தெரியவில்லை. அதுகுறித்தும்,
மரணத்திற்கான காரணம் குறித்தும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரிய
வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்திருக்கலாமோ என்ற
சந்தேகமும் எழுந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கார்ல். இவர் 2012ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ்
நிறுவன நிர்வாக இயக்குநராக பணியில் சேர்ந்தார்.
தொய்வடைந்திருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் முக்கியப்
பொறுப்பு இவர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம்
விற்பனையிலும், வர்த்தகத்திலும், மார்க்கெட்டிலும் பின்தங்கியுள்ளது.
இதற்கு முன்பு 2வது பெரிய நிறுவனமாக இருந்த டாடா மோட்டார்ஸ் தற்போது 5வது
இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது.
அதன் பல தயாரிப்புகள் சறுக்கலைச் சந்தித்துள்ளன. குறிப்பாக பெருமளவில்
பேசப்பட்ட நானோ கார்கள் பெரும் தோல்வியையே சந்தித்துள்ளன. இதை டாடா குழுமத்
தலைவர் ரத்தன் டாடாவே சில மாதங்களுக்கு முன்பு ஒத்துக் கொண்டார். உலகின்
மிகச் சிறிய, விலை மலிவான கார் என்று கூறி விற்பனைக்கு விட்டது தவறுதான்
என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் டாடா மோட்டார்ஸை சரி செய்யும் பணியில் கார்ல் இணைந்தார்.
கார்ல் ஆற்றிய பங்கை டாடா மோட்டார்ஸ் பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளது.
கார்ல் செயல்படுத்திய பல திட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் அவர்
மரணமடைந்திருப்பது டாடாவுக்கும் பேரிழப்பாகும் என்று டாடா மோட்டார்ஸ்
கூறியுள்ளது.
இந்தியாவில் தனது பணியை பார்த்துக் கொண்டிருந்த கார்ல், தென் கொரியா,
தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய பிரிவுகளையும் தன் பொறுப்பில்
வைத்திருந்தார்.
டாடாவில் இணைவதற்கு முன்பு சீனாவில் உள்ள எஸ்ஜிஎம்டபிள்யூ மோட்டார்ஸ்
நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவராக இருந்தார் கார்ல். அதற்கு முன்பு ஜெனரல்
மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் தலைவராக இருந்தார்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக