புதன், 29 ஜனவரி, 2014

மீண்டும் த.மா.கா? ராஜ்யசபா எம்.பி.: வாசனுக்கு குழிபறித்த ப.சிதம்பரம்


சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவின் ஆதரவுடன் போட்டியிடுவது என்ற ஜி.கே. வாசனின் முயற்சிக்கு மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம்தான் தடை போட்டதாக கூறப்படுகிறது. இப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை குறி வைத்திருக்கிறாராம் வாசன். அதுவும் கிடைக்காமல் போனால் தேர்தலின் போது மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கும் முனைப்பில் இருக்கிறாராம் வாசன். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் பிப்ரவரி 7-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுதான் முடிவடைந்தது. கடைசி நிமிடம் வரைக்கும் தேமுதிக ஆதரவுடன் எப்படியாவது தேர்தலில் குதித்துவிடுவது என்ற முனைப்பில் இருந்தார் ஜி.கே. வாசன்.

இதற்காக காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடமும் ஒப்புதலைப் பெற்று தேமுதிகவுடன் பேச்சு நடத்தி வந்தார் வாசன். ஆனால் திமுகவை பகைத்துக் கொண்டு ராஜ்யசபா தேர்தலில் ஜி.கே.வாசன் நிற்க கூடாது என்பதில் முனைப்பு காட்டினாராம் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
லோக்சபா தேர்தலில் எப்படியும் திமுக காங்கிரஸுடன் வந்துவிடும்..அதனால்தான் ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு இடையூறாக இருக்க கூடாது என்று காங்கிரஸ் மேலிடத்தில் ப.சிதம்பரம் வாதிட்டாராம்..
ஆனால் இது ப.சிதம்பரம் நமக்கு பறிக்கும் குழிதான் என்று உணர்ந்து கொண்ட ஜி.கே.வாசனோ, என்னை ராஜ்யசபா வேட்பாளராக அறிவியுங்கள்.. லோக்சபா தேர்தலில் தேமுதிகவை நான் கூட்டணிக்கு கொண்டு வருகிறேன் என்று மல்லுக்கட்டினாராம்.
ஆனால் கடைசியில் ப.சிதம்பரத்தின் பேச்சு தான் வென்றிருக்கிறது. நேற்று பகல் வரை காங்கிரஸ் மேலிடத்துக்கு சிக்னல் காத்திருந்து கடைசியில் எதுவும் நடைபெறாமல் போக விரக்தியடைந்து போனார் ஜி.கே.வாசன்.
இப்படி தொடர்ந்தும் தமக்கு குழிபறிப்புகள் தொடர்ந்தால் லோக்சபா தேர்தலின் போது தனிக் கட்சி தொடங்கிவிடுவதுதான் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறாராம் ஜி.கே. வாசன்.
உதயமாகிறது த.மா.கா? கடந்த ஓராண்டுகாலமாகவே ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் வாசன்தான் மறுத்து வந்தார். இப்போது ஜி.கே.வாசனும் தனிக்கட்சி ரூட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: