வியாழன், 17 ஜனவரி, 2013

dreamliner டிரீம்லைனர் போயிங் விமானங்கள் முடக்கம்

புதுடெல்லி:அமெரிக்க விமான போக்குவரத்து துறை ஆணையத்தின் எச்சரிக்கையை அடுத்து, ஏர் இந்தியா இயக்கி வரும் 6 டிரீம்லைனர் போயிங் விமானங்கள் முடக்கப்பட்டுள்ளன. விமானத்தில் உள்ள பேட்டரியில் கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றிக் கொள்வதால், உலகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட டிரீம் லைனர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் போயிங் விமான தயாரிப்பு நிறுவனம், டிரீம்லைனர் என பெயரிடப்பட்ட 787 விமானத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. எரிபொருள் செலவை கட்டுப்படுத்த குறைந்த எடையில், முழுக்க முழுக்க எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்களுக்கு உலகின் பல நாடுகள் வரவேற்பு அளித்தன. இந்தியாவின் ஏர் இந்தியா நிறுவனமும் 6 விமானங்களை வாங்கி பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், டிரீம்லைனர் விமானத்தில் உள்ள லித்தியம் பேட்டரியில் அடிக்கடி கோளாறு ஏற்படுவது தெரிய வந்தது.


அதற்கேற்ப கடந்த வாரம் பேட்டரியில் தீப்பிடித்ததால் போஸ்டன் நகரில் டிரீம்லைனர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதேபோல் நேற்று ஜப்பான் வானில் பறந்து கொண்டிருந்த 787 போயிங் விமானத்தின் பேட்டரியிலும் தீப்பிடித்தது. அதனால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு ஆய்வுக்காக டிரீம்லைனர் விமானங்கள் அனைத்தையும் இயக்காமல் தரையில் நிறுத்தி வைக்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அமெரிக்க விமான போக்குவரத்து ஆணைய (எப்ஏஏ) அதிகாரிகள் இன்று அதிகாலை 4 மணிக்கு அவசர தகவல் அனுப்பினர்.

இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவன தலைவர் ரோகித் நந்தன் கூறுகையில், Ôஎப்ஏஏ அறிவுரைப்படி தற்காலிகமாக நமது 6 விமானங்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் சென்னை, பெங்களூரில் 2 டிரீம்லைனர் விமானங்கள் உள்ளன. மற்ற 4 விமானங்கள் வெளிநாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டுள்ளன. அவை வந்தவுடன் ஏர்போர்ட்டில் அவை நிறுத்த வைக்கப்படும். இந்த விமானங்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், வேறு விமானங்களில் செல்ல ஏற்பாடு செய்யப்படும்Õ என்றார்.

இதுகுறித்து போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜிம் மெக்னெர்னி கூறுகையில், Ôடிரீம்லைனர் விமானங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. எனினும், பேட்டரியில் பிரச்னை குறித்து தெரிய வந்ததால் முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்க கேட்டு கொண்டுள்ளோம். இந்த சிரமத்துக்கு பயணிகள் மன்னிக்க வேண்டுகிறோம். பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் முடித்து விரைவில் போக்குவரத்துக்கு இயக்குவது குறித்து அறிவிப்பு வெளியிடுவோம்Õ என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் இந்த மாத இறுதியில் 787 போயிங் விமானம் ஒன்றும் அடுத்த மாதம் ஒன்று என ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 2 டிரீம்லைனர்விமானங்கள் சப்ளை செய்ய ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: