சனி, 29 ஜூன், 2013

பரிதிஇளம் வழுதி: தலைமை பண்புகள் அற்ற ஸ்டாலின் நடவடிக்கைகளால் வெளியேற்றம்

பரிதிஇளம் வழுதி அளித்த சிறப்பு பேட்டி: தி.மு.க., வில் துணை சபாநாயகர், அமைச்சர், துணைப் பொதுச்செயலர் போன்ற பதவிகளை அனுபவித்த நீங்கள், தி.மு.க., விலிருந்து வெளியேற என்ன காரணம்?
தி.மு.க., வில் தொண்டர்களுக்கோ, காலமெல்லாம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கோ, எந்த முக்கியத்துவமும் கிடையாது. ஒரு குடும்பத்தின் நலனுக்காக, அக்கட்சி முழுமையாக பலி கொடுக்கப்பட்டு வருகிறது. கட்சி, முழுக்க முழுக்க, கருணாநிதியின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போதைக்கு கருணாநிதி செயல்பட முடியாத ஒரு தலைவராகவும், அதிகாரமற்ற ஒரு முதியவராகவும் மட்டுமே இருக்கிறார். தி.மு.க., என்ற கட்சியோ, குடும்பமோ இப்போது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. கட்சியில், குடும்பத்தினர் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது. குடும்ப பாசம் காரணமாக, கருணாநிதி, தகுதியற்ற, தன் வாரிசுகளை கட்சி பதவிகளிலும், அதிகார பீடங்களிலும், தூக்கி வைத்ததன் விளைவாக, தி.மு.க., தொண்டர்களும், முன்னணி தலைவர்களும், மன உளச்சலில் உள்ளனர். எனக்கும், இதே அனுபவம் தான் ஏற்பட்டது. தலைமை பண்புகள் அற்ற ஸ்டாலின் நடவடிக்கைகளால், கட்சிக்காக, காலமெல்லாம் உழைத்த நான், "தன்மானம்' காக்க, "மவுனமாக' வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
* கடந்த, 2011 சட்டசபை தேர்தலில் உங்களுக்கு எதிராக வேலை செய்தவர்களை, ஸ்டாலின் ஆதரித்ததால் தான் பிரச்னை ஏற்பட்டதாக கூறுகின்றனரே?
ஆம்; கடந்த சட்டசபை தேர்தலில், நான் வெற்றி பெறக் கூடாது என, கட்சியில் சிலர், எனக்கு எதிராக வேலை செய்தனர். அவர்களைப் பற்றி, முதலில் ஸ்டாலினிடம் தான் புகார் செய்தேன். ஆனால், என் புகாரை அவர் கண்டுக் கொள்ளவில்லை. இதனால், சில நாள் கழித்து, அறிவாலயத்தில், கருணாநிதியை பார்த்த போது, அவர், "என்னய்யா... நீ... 202 ஓட்டுகளில் தோற்று விட்டாய்' என்றார். உடனே, நான், தேர்தலில் எனக்கு எதிராக வேலை செய்தவர்களை பற்றி கூறினேன். என்ன ஏது என்ற விவரத்தை கேட்டவர், "நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை?' எனக் கேட்டார். நான் உடனே, "ஸ்டாலினிடம், ஏற்கனவே புகார் கூறிவிட்டேன்' என்றேன். அதை கேட்டு கோபப்பட்ட அவர், எனக்கு எதிராக வேலை செய்தவர்களை உடனடியாக கட்சியை விட்டு நீக்கும்படி உத்தரவிட்டார்; ஆனால், மறு வாரமே ஸ்டாலின் அழுத்தத்தால், கட்சியை விட்டு நீக்கப்பட்ட அந்த நபர்கள், மறுபடியும் கட்சியில் சேர்க்கப்பட்டனர். இது பற்றி, நான் கருணாநிதியிடம் சென்று முறையிட்டதற்கு, "நான் என்ன செய்வது?' என, இயலாமையோடு கையை விரித்து விட்டார். பின், அங்கு இருப்பது சரியாக இருக்காது என, அங்கிருந்து விலக நினைத்து, அவர்கள் தந்த, துணைப் பொதுச் செயலர் பதவியை ராஜினாமா செய்தேன். பின் மவுனமாக வெளியேறி விட்டேன்.
* அ.தி.மு.க., வில் சேர என்ன காரணம்?
நான் ஏற்கனவே கூறியது போல், கருணாநிதி கட்டுப்பாட்டில் கட்சி இல்லாததால், தி.மு.க., என்பது, குடும்ப உறுப்பினர்களின் விளையாட்டு மைதானமாகி விட்டது. இதனால், மனவலிக்கு ஆளாகியவர்களில் நானும் ஒருவன். இவ்வளவு நாள் நாங்கள் எதிர்த்து வந்த, அ.தி.மு.க., வில் மட்டும், இன்று வலுவாக ஒரே தலைமை இருப்பது காண முடிகிறது. ஜெயலலிதா ஒருவரே இன்றைய இந்தியாவில், ஒரு கம்பீரமான தலைவராக இருக்கிறார். இந்த நிலைமையில் அந்த தலைமையை ஏற்றுக் கொள்வதே என் மனக் காயங்களுக்கு, மருந்தளிக்கும் என, நான் கருதியதால், ஜெயலலிதாவை சந்தித்து, என்னை, அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டேன்.
* அ.தி.மு.க., வில் உங்களுக்கு பதவி கிடைக்குமா?
கடந்த இரு ஆண்டுகளாக, மனப்புழுக்கத்தில் இருந்த நான், இன்று மனநிறைவாக இருக்கிறேன்; பதவிகளை விட, மனநிறைவு தான் முக்கியம். இவ்வளவு நாள், அ.தி.மு.க., கட்சியையும், அதன் தலைமையையும், அதன் தொண்டர்களையும் எதிர்த்து களத்தில் நின்ற என்னை, அவர்கள் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டதை, பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். புதியதாக முகாம் மாறி வந்திருக்கும் நான், அ.தி.மு.க., வில் ஒரு தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.
* முதல்வரை நேரில் சந்தித்த போது என்ன உணர்ந்தீர்கள்?
அவரை மிக கடுமையாக விமர்சித்ததில் நானும் ஒருவன். ஆனால், கருணாநிதியின் கபட வேடத்தை முழுமையாக புரிந்து கொண்ட பின், ஜெயலலிதா எவ்வளவோ உயர்வானவர் என்பதை உணர்ந்து கொண்டேன். என்னை விட, கடுமையாக அவரை விமர்சித்த பலரையும், அவர் மன்னித்து ஏற்று, அவர்களுக்கு அரசியல் ஏற்றம் தந்ததையும் பார்த்திருக்கிறேன். ஒரு சிறு குற்ற உணர்ச்சியுடன் தான், அவரை சந்திக்க சென்றேன். ஆனால், அவர் என்னிடம் காட்டிய பரிவு, என்னை நெகிழச் செய்து விட்டது. கருணாநிதிக்காக, தி.மு.க., வுக்காக பல மேடைகளில், அ.தி.மு.க., வுக்கு எதிராக பேசினேன்; இனிமேல், அதற்காக பிரயாச்சித்தம் தேடப் போகிறேன்.
* தி.மு.க., வை பற்றி ..
தி.மு.க., குடும்ப சொத்தாக மாறிவிட்டது. அதை உருவாக்கிய அண்ணாதுரையே திரும்பி வந்தாலும், அதை, கருணாநிதி குடும்பத்திலிருந்து மீட்க முடியாது. தொண்டர்களின் உழைப்பையும், உணர்வையும், தியாகங்களின் பலனையும், ஒரு குடும்பமே, இன்று அறுவடை செய்து வருகிறது.dinamalar.com

கருத்துகள் இல்லை: