ஞாயிறு, 23 ஜூன், 2013

எங்கும் பிணக்குவியல்… பேய் நகரம் போல் காட்சி தரும் கேதார்நாத்: மீட்பு பணி குழுவினர் வேதனை!

கேதார்நாத் ஆலயத்தின் முன்பு சடலங்கள் குவிந்துள்ளதால் பேய் நகரம்
போல காட்சியளிப்பதாக மீட்புப் படையினர் வேதனையுடன் கூறியுள்ளனர். ஓம் நமச்சிவாயா என்று பக்தி கோஷம் எப்போதும் முழங்கும் கேதார்நாத் ஆலயத்தின் முன்பு இப்போது மயான அமைதியாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கோவில், கடைவீதிகள், விடுதிகள் போன்ற இடங்களில் பக்தர்களால் நிரம்பி வழிந்த கேதார்நாத் இப்போது சகதிகள் சூழ, சடலங்களால் நிரம்பி வழிகிறது. ஊர் முழுவதும் இடிந்து காணப்படுவதால் உணவு தேடி காகம், நாய் போன்ற ஜீவராசிகள் மட்டும் அங்கு அலைந்து வருகின்றன இப்போது மெதுவாக வெள்ளம் வடிந்து வருகிறது. கோவிலின் வெளிப்பகுதி பாதிக்கப்படாமல் அப்படியே உள்ளது. ஆனால், கோவிலின் வெளிப்புற வாயிலில் சடலங்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால்,கேதார்நாத் நகரம் பேய் நகரம் போல் காட்சி அளிப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் வேதனையுடன் தெரிவித்தனர்.

கேதார்நாத் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மலையில் இருந்து அடித்து வரப்பட்ட பாறைகள் மோதியதில் பெரும்பாலான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. நகரெங்கும் பிணங்கள் குவியல்குவியலாக கிடக்கிறது.
வெள்ளப்பெருக்கில் சிக்கிய பலர் கோயிலுக்குள் தஞ்சம் புக முயன்றுள்ளனர். அவர்களில் பலரது சடலங்கள் கோயில் வாசலிலேயே இன்னமும் கிடக்கிறது. சடலங்கள் அழுகிவிட்டதால் துர்நாற்றம் வீசுகிறது
கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளம் நகருக்குள் நுழைந்து அதன் பாதையில் உள்ள அனைத்தையும் அழித்துவிட்டது. இவ்வளவு அழிந்தும் அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்கள் அப்படியே இருக்கின்றன. ஆனால் அங்கு தவிக்கும் மக்கள் தங்கள் செல்போனை சார்ஜ் செய்ய மின்சாரம் இல்லாததால், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். சாப்பாடு இல்லாமல் காட்டில் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்டினியால் மட்டும் 200 பேர் உயிரிழந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் 40 ஆயிரம் மக்கள் சிக்கியுள்ளவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் ராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இடிபாடுகளோடும், சிதிலமடைந்தும் காணப்படும் கேதார்நாத் ஆலயம் மீண்டும் பழைய நிலையை அடைய இன்னும் 5 ஆண்டுகளாவது ஆகும் என்று கூறப்படுகிறது. அதுவரை சார் தாம் யாத்திரை செல்வது கடினம்தான் என்கின்றனர் பக்தர்கள்

tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: