வியாழன், 27 ஜூன், 2013

தாயா பிள்ளையா வாழ்கிறோம் என்ற தேவர் சாதி டையலாக்

வடுகப்பட்டிஉசிலம்பட்டியில் தொடரும் தீண்டாமைக் கொடுமை! தீண்டாமையை குற்றமாகப் பார்க்க மறுக்கும் தேவர் சாதி வெறித்தனம்!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, உசிலம்பட்டியிலிருந்து கிழக்கு நோக்கி 5 கி.மீ தொலைவில் இருக்கும் வடுகபட்டியில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த காலம் சென்ற பாண்டி, நாகம்மாள் இவர்களின் மகன் 11 வயது அருண்குமார் என்ற மாணவனை காலில் செருப்பு அணிந்து செல்ல விடாமல் அவன் தலையில் சுமக்க வைத்த காட்டுமிராண்டித்தனம் நடந்துள்ளது.
வடுகபட்டியில் ஊரின் மேல்புறத்தில் அமைந்துள்ள கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து முடித்த அருண்குமார் தான் ஆறாம் வகுப்பில் பாஸ் ஆகிவிட்டோமா என்று பார்ப்பதற்காக கடந்த 3.6.2013-ம் தேதியில் பள்ளிக்குச் சென்றவனை அதே ஊரைச்சேர்ந்த வீராயி கோவில் பூசாரி பதிவுராஜா என்பவரின் மகன் நிலமாலை என்ற தேவர் சாதி வெறியன் மாணவன் அருண்குமாரிடம், “செருப்பு போட்டு நடந்து போக கூடாது என்பது தெரியாதோ? செருப்பை கழட்டுடா” என்று மிரட்டி தலையில் செருப்பை வைக்கச் சொல்லி நடந்து போக வைத்து ரசித்து இருக்கிறான்.
விசயத்தை கேள்விப்பட்ட அருண்குமாரின் தாயார் நாகம்மாள் “என் மகன் பச்ச மண்ணு, அவனுக்கு என்னா தெரியும் அவன்கிட்ட இப்படி நடந்துகிட்ட இது நியாயமா?” என நிலமாலையின் தம்பியிடம் தெரியப்படுத்தி விட்டு வந்துள்ளார். இந்த நிகழ்வை அறிந்த ஊர் மக்கள் யாரும் இதுபற்றி கண்டு கொள்ளவில்லை.
5.6.2013-ம் தேதி ஒரு காதணி விழா நிகழ்ச்சியில் நிலமாலை மது அருந்திய நிலையில் நாகம்மாளை சத்தம் போட்டிருக்கிறான். பிறகு மீண்டும் நாகம்மாளின் வீட்டில் வந்து சத்தம் போட்டிருக்கிறான். “பறச்சி அழிச்சிடுவேன் செருப்பு போடக்கூடாதுன்னா சரி என்று கேட்டு நடக்கனும்” என்று சத்தம் போட்டிருக்கிறான். அதன் பிறகுதான் நாகம்மாள் காவல் நிலையம் சென்றிருக்கிறார்.

காவல் துறையில் சார்பு ஆய்வாளர் தேவர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த பிரச்சனையை மறைக்க முயன்றுள்ளார் சார்பு ஆய்வாளர். உடனே நடவடிக்கை எடுத்திருந்தால் நிலமாலையை அன்றே கைது செய்திருக்க முடியும். குற்றவாளியை தப்பிக்க வைத்த குற்றத்தை காவல்துறை செய்தது. செய்தி ஊடகங்களில் வந்த பின்புதான் வழக்கை பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தது போலிஸ்.
உசிலை வட்டாரத்தில் பல கிராமங்களில் சாதி ஆதிக்கம், தீண்டாமை, கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை பதவி ஏற்கவிடாமல் தடுப்பது போன்ற சாதி ஆதிக்கம் இருந்தாலும் இங்கு கூடுதலாக இருப்பதை பார்க்க முடிகிறது.
பல ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் செருப்பு போட்டு நடந்து போவது, ஊருக்குள் சைக்கிள் ஓட்டிச்செல்வது போன்றவை வழக்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் இங்கு இன்றுவரை ஊருக்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் செருப்பு போட்டு நடப்பதில்லை சைக்கிள், மோட்டார்சைக்கிள் ஓட்டிச்செல்ல விடுவதில்லை, வேட்டியை மடித்துக்கட்டி நடந்து போக முடிவதில்லை
எல்லா ஊர்களிலும் தீண்டாமை கடைப்பிடிக்கும் இடமாக கோவில்தான் உள்ளது என்றாலும் இங்கு சற்று கூடுதலாக உள்ளது. திருவிழா காலங்களில் மட்டும் பல ஊர்களில் கோவிலில் சாமி இருப்பிடம் வரை தாழ்த்தப்பட்டவர்களை செல்ல அனுமதிப்பார்கள். இங்கு கோவில் படியில் மட்டும் ஏறி நின்று மாவிளக்கு, தீச்சட்டி எடுப்பது, திருநீர் வாங்குதற்கு செல்லாம், திருவிழாவில் ஒரே நேரத்தில் எல்லோரும் பொங்கல் வைப்பார்கள், பூசாரி எல்லா பொங்கல் பானைக்கும் திருநீர் போடுவார், பிறகு எல்லா குடத்திலும் பூசைக்கு பொங்கல் எடுப்பார்கள், அப்படி எடுப்பவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடம் பொங்கல் எடுப்பதில்லை.
காலப் போக்கில் தானாக ஏற்பட்ட மாற்றம் டீ டம்ளர், குடி தண்ணீர் போன்றவைகளுக்கு ஒரு முறை பயன்படுத்தகூடிய கப் வந்ததால் எல்லோருக்கும் ஒரே டம்ளர் என்று பல ஊர்களில் வந்து விட்டது. இங்கும் மாறி உள்ளது. எந்த ஊரிலும் கிணறுகளில் குடிநீர் எடுப்பது இந்தப் பக்கம் ஒழிந்து விட்டது. எல்லா ஊர்களிலும் ஆழ்துளை கிணறு மூலம் மோட்டார் வைத்து வாட்டர் டேங்குகளில் நீர் ஏற்றி குழாய்வழியாக கொடுப்பதால் எல்லா சாதிக்கும் எல்லா ஊர்களிலும் ஒரே குடிநீர் தொட்டி ஆக மாறிவிட்டது. இங்கும் மாறி உள்ளது.
இந்த ஊர் தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமைத்தனமான வேலையை மறுத்து ஒழித்தது மேளம் அடிப்பதை மட்டும்தான். எங்களுக்கு அடிப்பதற்கு ஆள் இல்லை என்று அடிக்க மறுத்து ஜெயித்து இருக்கிறார்கள். அதை தவிர்த்து பிணம் எரிப்பது, பிணம் புதைக்க குழி தோண்டுவது, உறவினர்களுக்கு சாவு செய்தி சொல்ல செல்வது, போன்ற தோட்டி வேலைகளை அச்சுபிசகாமல் செய்து வருகிறார்கள். இது அடிமைத்தனமான வேலை வேண்டாம் என்று ஏன் நீங்கள் மறுக்கவில்லை என்று கேட்டால் ஏதோ நாங்கள் இருக்கிற வரைக்கும் எங்களோட செய்துவிட்டு போகிறோம் ஊரை பகைத்து கொண்டு வாழ முடிக்குமா? என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பகுதியில் எல்லா ஊரிலும் இருப்பதை போல் இங்கும் தனிச்சுடுகாடுதான் உள்ளது. ஆனால் இரு சுடுகாட்டுக்குமே பிணம் எரிக்க மேல்கூரை இல்லை. அதில் இருவரும் சமம்தான்.
vadugapatti-2இவ்வளவு அடக்கு முறை இருந்தும் சாதிக்கலவரம் இங்கு நடக்கவில்லை. காரணம், அடங்க மறுத்தால் தானே கலவரம் நடக்கும், சரி ஏன் இந்த ஊர் தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்ப்பது இல்லை. இப்பகுதியில் இதுபோன்ற இழி நிலை பல ஆண்டுகளுக்கு முன்பே பல ஊரில் ஒழிந்து போன பின்பும் இங்கு மட்டும் ஏன் நீடிக்கிறது. தேவர் சமூகத்தைச் சேர்ந்த (பிரமலை கள்ளர்) சுமார் 650 குடும்பங்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த (பறையர்) சுமார் 120 குடும்பங்கள் உள்ளது அருந்ததியர் 3 குடும்பம் மட்டும்தான் உள்ளது. வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் இல்லை.
இங்கு போக்குவரத்து பாதை மற்ற ஊர்களில் இருந்து வேறுபட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் வெளியூர்களுக்கு செல்ல மெயின்ரோட்டை அடைய பொதுவாக மற்ற ஊர்களில் ஊரின் நடு வழியாகத்தான் போக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால் அடிக்கடி செருப்பு போட்டு செல்வது, மோட்டார் சைக்கிள்களில் செல்வது போன்றவைகளை தடுப்பது சாத்தியமில்லாத அணைமீறிய காரியமாக மாறிவிடுவதால் அந்த ஊர் கள்ளர்களும் முக்கி முனங்கி கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். ஆனால் இங்கு கள்ளர்கள்தான் தாழ்த்தப்பட்டவர் வசிக்கும் பகுதியின் நடு வீதி வழியாக திருமங்கலம் மெயின்ரோட்டுக்கு வரவேண்டியுள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி திருமங்கலம் மெயின்ரோட்டின் மேல்புறத்தில் உள்ளது. ஊருக்குள் வருவதற்கு இன்னொரு வழிச்சாலை உள்ளது அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுற்றுப் பாதை என்பதால் அதை பயன்படுத்துவதில்லை.
இந்த இயற்கை சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்குள் செல்ல வேண்டிய அவசியம் மிக குறைவாக உள்ளதால் யாராவது எப்போதாவது ஊருக்குள் செல்லுகிறார்கள் ரேசன் பொருள் வாங்க மாதத்தில் ஒரு நாள், ஏதாவது கோவில் திருவிழா நடைபெற்றால் வருடத்தில் ஒருநாள், பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைகளைச் சேர்க்க இதுபோன்று வருடத்தில் ஒன்று இரண்டு நாள்தான் சிலர் அந்த வழியாக போக வேண்டியுள்ளது. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கொடிய மிருகங்களுக்கு பயந்து ஒதுங்கி போகும் மனிதர்களைப் போல் ஊர் வழியில் செல்லாமல் காட்டுப்பாதையில் சென்று விடுவார்கள். இதனால்தான் அப்படி தவிர்க்க முடியாத சில பெரியவர்கள் அடங்கி பழக்கப்பட்வர்கள் தேவையில்லாத சண்டை என்று கள்ளர்கள் விருப்பத்திற்கு அடங்கி செல்கிறார்கள். அவசரத்தில் ஒரு சிலர் கவனமில்லாமல் செருப்பு போட்டு போனாலோ, சைக்கிள் ஓட்டிப்போனாலோ, கள்ளர் சாதி ஆண், பெண் யார் பார்த்தாலும் சத்தம் போட்டு தடுப்பார்கள் “எங்களுக்கு பயப்படாட்டியும் தெய்வத்துக்குப் பயந்து போங்கடா” என்று எச்சரிப்பார்கள். தாழ்த்தப்பட்ட மக்களும் மீறுவதில்லை.
அந்த ஊரைச் சேர்ந்த தேவர் சாதி மக்கள் நடந்த சம்பவத்தை குற்றமாக கருதாமல் நடக்காததைப் போல் பேசுகிறார்கள், பிரச்சனை முடிந்து விட்டது. ஏன் ஊடகத்தில் மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள் என்று தான் பார்க்கிறார்கள், செருப்பு போட விடாமல் செய்த குற்றத்தை இது வரை வெறும் அதட்டியே வைத்திருந்தோம் இந்த நிலமாலையின் செயலால் உலகத்துக்கு தெரிந்து விட்டது காரியம் கைமீறி போய்விடுமோ என்றுதான் கவலைப்படுகிறார்கள்.
11-வயது சிறுவனை இப்படி வன்முறை செய்ததற்கு கவலைப்படாத ஊர் மக்கள் நிலமாலையின் அப்பா பூசாரி பூசை செய்ய விடாமல் கைதாகிவிட்டாரே என்று கவலைப்டுகிறார்கள்.
ஊரில் முறையான சாக்கடை வசதியில்லை. சுடுகாட்டிற்கு மயான கூரையில்லை, திருமண மண்டபம் இல்லை, ரேசன்கடை அரசு கட்டிடம் இல்லை அதில் போடும் தரமில்லாத அரிசியை குறைவாக போடுவதை தடுக்க வேண்டும் என்று சிந்திக்க முடியாத மனித பிறவிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் எவன் செருப்பு போட்டு நடக்கிறான், எவன் வேட்டியை மடித்து கட்டி நடக்கிறான், எவன் மோட்டார் சைக்கிளில் ஏறி ஓட்டி செல்கிறான் என்பதை உற்றுப் பார்த்து கண்டிப்பதில் ஊரில் எல்லோரும் விழிப்பாக உள்ளார்கள்.
விவசாயம் சுமார் 80 சதவீதம் அழிந்து விட்டது. வாழ்வுக்காக நகரத்திற்கு விரட்டப் படுகிறார்கள், அதுபற்றி கவலைப்படுவதாக இல்லை.
சிறுவன் அருண்குமார் இந்த அவமானம் தாங்காமல் இந்த பள்ளியில் இருந்து விலகி வேறு பள்ளிக்கு செல்வதை வருத்தத்தோடு பள்ளி ஆசிரியர்கள் “நல்லா படிக்கிற உனக்கு இப்படி ஒரு நிலைமையா?” என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள் அப்படி ஒரு கவலை அந்த ஊரைச்சேர்ந்தவர்களுக்கு இல்லை.
அருண்குமார், தாயார் நாகம்மாளின் துணிச்சல் செயலால் ‘தாயா பிள்ளையா வாழ்கிறோம்’ என்ற தேவர் சாதி டையலாக் அம்பலமாகி ஊர் உலகமெல்லாம் நாற்றமடிக்கிறது. vinavu.com

கருத்துகள் இல்லை: