திங்கள், 24 ஜூன், 2013

மீட்பு சுணக்கம்! உத்தரகண்டில் பலத்த மழையால் பரிதவிக்கும் 30 ஆயிரம் பேர்

டேராடூன்:இம்மாதம், 17ம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தையே புரட்டிப் போட்ட பேய் மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு போன்றவற்றால், இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டு உள்ளது.உத்தரகண்ட் மாநிலம், 93 சதவீதம் மலைகளும், அதில், 64 சதவீதம் அடர்ந்த காடுகளும் கொண்டது. அங்கு அமைந்துள்ள சிவபெருமானின் வழிபாட்டுத் தலங்களில், வழிபடச் சென்ற பக்தர்கள் மற்றும் அங்கு வசித்த பொதுமக்கள், கடந்த, ஏழு நாட்களாக சொல்லொணாத் துயரம் அனுபவித்து வருகின்றனர். சிக்கிய லட்சம் பேர்: பேய் மழை பெய்யத் துவங்கிய போது, உத்தரகண்டின், கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் சில வழிபாட்டுத் தலங்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், உள்ளூர் மக்களும் இருந்துள்ளனர்.ராணுவம், இந்தோ - திபெத் எல்லை போலீஸ், எல்லை சாலை அமைப்பு பணியாளர்கள் என, ஆயிரம் வீரர்களும், அவர்களுக்கு துணையாக, மிகக் குறைந்த எண்ணிக்கையில், மாநில அரசு ஊழியர்களும், கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்ட மீட்பு பணிகளில், 70 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்; இன்னும், 30 ஆயிரம் பேர் மீட்கப்பட வேண்டியுள்ளது.அவர்களில் பெரும்பான்மையினர், மலையின் உச்சியில் தஞ்சம் அடைந்து உள்ளனர். காட்டு வெள்ளத்திற்கு பயந்து, எப்படியோ வேகமாக ஏறிவிட்டவர்களால், இறங்க முடியாமல், ஹெலிகாப்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


காடுகளில் தஞ்சம்:

நேற்றைய நிலவரப்படி, கேதார்நாத் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள காடுகளில் தஞ்சம் அடைந்திருந்த பக்தர்களும், ஜங்கிள்சாட்டி, கோரிகான், பைரோன்சாட்டி ஆகிய இடங்களில், நடுங்கும் குளிரில், உயர்ந்த மலை சிகரங்களில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டு விட்டனர். இன்னமும், 5,000 முதல், 7,000 பேர் மட்டுமே கேதார்நாத் பகுதியில் மீட்கப்பட வேண்டியுள்ளது. ராணுவத்தின், 40க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால், ஐந்து நாட்களில் அதிகம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர். அதிலும், கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தான் ஏராளமானோர் மீட்கப்பட்டனர்.அதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், நேற்று காலை முதல், லேசானது முதல் பலத்த மழை வரை பெய்து, ஹெலிகாப்டர் மீட்பு சேவையை பாதிப்படைய வைத்து உள்ளது. எனினும், அது பற்றி கவலைப்படாமல், பிற வழிகளில் பக்தர்களை மீட்கும் பணியில், ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.பல இடங்களில், எல்லை சாலை அமைப்பு நிறுவன ஊழியர்கள், சாலைகளை சீரமைத்து வருகின்றனர். உடைந்து போன பாலங்கள் மற்றும் இணைப்பு பாலங்களில், ராணுவ வீரர்கள், தற்காலிக இரும்பு பாலங்களை வைத்து, பக்தர்களை மீட்டு, கோபிகாட், ஜோஷிமத் போன்ற இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

சாலை வசதி ஏற்பாடு:

அங்கிருந்து, சாலை வழியாகவோ அல்லது ஹெலிகாப்டர்கள் மூலமோ, டேராடூன், சிம்லா, டில்லிக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.பிதோராகாட் என்ற இடத்தில் சாலை வசதி மீண்டும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, ராணுவ வீரர்கள் கடும் முயற்சி மேற்கொண்டனர்.எனினும், ஐந்து நாட்களுக்கும் மேலாக தண்ணீரில் தத்தளித்து, சரியான உணவு, தங்கும் இடங்கள் இல்லாமல் பரிதவித்த முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களுக்காக மருந்து கிடைக்காத ஏராளமானோர் இறந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.நான்கு நாட்களாக வெள்ளப்பெருக்கு சற்றே குறைந்திருந்த, மந்தாகினி, அலோக்நந்தா போன்ற துணை நதிகளில், இரண்டு நாட்களாக தண்ணீர் அதிகரித்துள்ளது. இதில், தற்காலிக பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.யமுனை நதியும், கங்கையும் உற்பத்தியாகும், யமுனாத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய புனித இடங்களில், மக்கள் நடமாட்டமே இல்லை; மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தான் அங்கு காணப்படுகின்றனர்.

சேட்டிலைட் போன் :

தகவல் தொடர்பு ஏற்கனவே சற்று மோசமாக இருந்த அந்தப் பகுதியில், சாலைகள் காணாமல் போனதாலும், பாலங்கள் உடைந்ததாலும், தகவல் தொடர்பு இப்போது அறவே இல்லை. ராணுவத்தினர், தங்களின் வயர்லெஸ் கருவிகள் மூலம் தகவல் தொடர்பு மேற்கொள்கின்றனர்.உள்ளூர் அதிகாரிகளுக்கு, 25 சேட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டு உள்ளன; மேலும், 50 போன்கள் இன்று அனுப்பி வைக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதிகம் பாதிக்கப்பட்ட ருத்ரபிரயாக், சமோலி, உத்தரகாசி பகுதிகளில், நேற்று மழைப்பொழிவு இருந்ததால், நிவாரணப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. நேற்று மதியத்திற்கு பிறகு, ஹெலிகாப்டர்கள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இன்னும், கனமழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் கதி என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விமான படையின்மிகப்பெரிய மீட்பு:

"இந்திய விமானப்படை இது வரை மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளில், உத்தரகண்ட் மீட்பு தான் மிகப் பெரியதாக இருக்கும்' என, தெரிவித்துள்ள விமானப்படை அதிகாரிகள், "தத்தளித்து வருபவர்களை முழுமையாக மீட்க, இன்னும் ஒரு வாரம் ஆகும்' என, கூறியுள்ளனர்.விமானப்படையினருக்கு மிகப் பெரிய சவாலாக, அவ்வப்போது மாறும் சீதோஷ்ணமும், மழையும் அமைந்துள்ளது. அதுபோல், எரிபொருள் பற்றாக்குறையும் உள்ளது.சாலை போக்குவரத்து அறவே இல்லாததால், தொலை தூரப் பகுதிகளில் இருந்து எரிபொருள் நிரப்பி, மீட்புப்பணியில் ஈடுபடும் ஹெலிகாப்டர்களுக்கு விரைவிலேயே எரிபொருள் தீர்ந்து விடும் நிலை நிலவுகிறது.

1,000 உடல்களைதகனம் செய்ய முடிவு:

கேதார்நாத், பத்ரிநாத், சமோலி, ருத்ரபிரயாக் பகுதிகளில், மொத்தம் மொத்தமாக கண்டெடுக்கப்பட்ட, 1,000 உடல்களை, ஆங்காங்கே தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.அவர்களின் அங்க அடையாளங்கள் குறிக்கப்பட்ட பிறகு, உடல்கள் தகனம் செய்யப்பட உள்ளன. ஆத்மா சாந்திக்காக, 29 அல்லது 30ம் தேதி, ஹரித்துவாரில், "மகாயக்ஞம்' என்ற பெயரில், ஹோமம் நடத்தப்பட உள்ளது. இதற்கு, சந்த் சமாஜ் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.

சம்பளத்தை வழங்கினார்ஜனாதிபதி பிரணாப்
உத்தரகண்ட் நிவாரண நிதியாக, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி தன், ஒரு மாத சம்பளத்தை வழங்கப் போவதாக அறிவித்து உள்ளார். அவர், மாதம், 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், நிவாரணம் வழங்கவும், மத்திய, மாநில அரசுகள் அதிக ஆர்வம் இல்லாமல் உள்ளன. நடந்தது, தேசிய பேரழிவு
முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சித் தலைவர்

கடும் அழிவைச் சந்தித்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தைச் சீரமைக்க, நீண்ட கால அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
dinamalar.com

கருத்துகள் இல்லை: