வெள்ளி, 28 ஜூன், 2013

பா.ம.க.,விடம் ரூ.100 கோடி இழப்பீடு வசூலிக்க அரசு முடிவு

சென்னை:வட மாவட்டங்களில் நடந்த வன்முறையால் ஏற்பட்ட சேதத்துக்கு
இழப்பீடாக, 100 கோடி ரூபாய் வரை, பா.ம.க.,வினரிடம் வசூலிக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஜூலை, 1ம் தேதி முதல், விசாரணைக்கு வருமாறு, பா.ம.க.,வினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த, மாமல்லபுரத்தில், ஏப்., 25ம் தேதி, வன்னியர் இளைஞர் பெருவிழா நடந்தது. இந்த விழாவிற்கு சென்றோருக்கும், மற்றொரு பிரிவினருக்கிடையே, மரக்காணத்தில் மோதல் நடந்தது. இதன் மீதான, போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.இதைக் கண்டித்து, வட மாவட்டங்களில், வன்முறை சம்பவங்கள் நடந்தன. 800க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் நொறுக்கப்பட்டன; 15க்கும் மேற்பட்ட வாகனங்கள், தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில், மூன்று பேர் இறந்தனர்."வன்முறையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, பா.ம.க.,வைச் சேர்ந்த, 96 பேர், குண்டர் சட்டத்திலும், 24 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், இழப்புத் தொகையை சம்பந்தப் பட்டவர்களிடம் இருந்தே வசூலிக்க வகை செ#யும், "தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992' என்ற சட்டத்தின் படி, இழப்பீட்டுத் தொகையை, பா.ம.க., வினரிடமிருந்து பெறும் முயற்சி முடுக்கிவிடப்பட்டது.வன்முறையால் வடமாவட்டங்களில் ஏற்பட்ட சொத்து சேதம் குறித்து, வருவாய்த் துறை மூலம் கணக்கெடுப்புப் பணி நடந்தது. போக்குவரத்து துறை, டாஸ்மாக் உள்ளிட்ட அரசுத் துறைகள் மட்டுமின்றி, தனியாரிடமிருந்தும், 150க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

இவற்றை கணக்கிடும்போது, 80 முதல் 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என, தெரிய வந்துள்ளது.இத்தொகையை, பா.ம.க., வினரிடமே வசூலிக்கும் அதிரடியில் அரசு இறங்கியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி செயலாளர் அன்புமணி, கட்சி தலைவர் கோ.க.மணி உள்ளிட்டோருக்கு, வருவாய்த்துறை ஆணையர் அலுவலகம் மூலம் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.ஜூலை, 1ம் தேதி முதல், வருவாய்த்துறை ஆணையர் அலுவலகத்தில், விசாரணை தொடங்குகிறது. இந்த விசாரணை முடிய, ஒரு மாதம் வரை ஆகலாம் எனவும், கூறப்படுகிறது. நோட்டீஸ் வந்துள்ளதை உறுதி செய்துள்ள, பா.ம.க.,வினர், "இதை எதிர்கொள்வது குறித்து, சட்ட ரீதியாக ஆலோசித்து வருகிறோம்' என்றனர் dinamalar.com

கருத்துகள் இல்லை: