புதன், 25 ஏப்ரல், 2012

ஜெயலலிதா: கொலைகள் குறைந்துள்ளன Today Special

சென்னை:""தி.மு.க., ஆட்சியை விட அ.தி.மு.க., ஆட்சியில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன,'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலுரை:இங்கு பேசிய சில உறுப்பினர்கள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை குறைகூறி பேசியுள்ளனர். கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். பொதுவாக வழக்குகளின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு ஏற்ப கூடி வருவது வாடிக்கை தான்.
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, 2001ல், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 422 ஆக இருந்தது. 2011ல் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது. தேசிய குற்ற ஆவணங்கள் கூடம் தயாரித்துள்ள விவரங்களை பார்த்தாலும், அகில இந்திய அளவில் குற்றங்கள் கூடி வருவது தெரியவரும்.

அதிகரிப்பு:குற்றங்களில் கொடிய குற்றமாக கருதப்படும் கொலைக் குற்றங்கள், 2002ல் இருந்து ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வந்து, 2006க்கு பிறகு ஆண்டுதோறும் கூடிக் கொண்டே வந்திருக்கிறது. 2002ல், 1,605 கொலைக் குற்றங்கள், 2003ல் 1,473 கொலைகள், 2004ல் 1,389 குற்றங்கள், 2005ல் 1,365, 2006ல் 1,273 கொலைக் குற்றங்கள் நடந்துள்ளன.அதன்பின், தி.மு.க., ஆட்சி அமைந்தது. 2007ல், 1,521 கொலைகள், 2008ல் 1,634 கொலைகள், 2009ல் 1,644 கொலைகள், 2010ல் 1,715 கொலைக் குற்றங்கள் நடந்துள்ளன. 2006 உடன் ஒப்பிடும் போது, 2010ல் கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை 35 சதவீதம் உயர்ந்துள்ளது. 2011ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும், இந்த உயர்வு 1.8 சதவீதம் தான் என்பதும், முந்தைய ஆண்டின் உயர்வான 4.3 சதவீதத்திற்கு இது மிகவும் குறைவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவனம்:பெரும்பாலான கொலைகள், குடும்பப் பிரச்னை, வாய்த் தகராறு, முன் விரோதம், கள்ளத் தொடர்பு, பணம் கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றின் காரணமாக நிகழ்கின்றன. இச்சம்பவங்கள் திடீரென அல்லது கோபம் காரணமாக நிகழ்பவை. திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைகளின் எண்ணிக்கை குறைவு. எனவே, இவை அனைத்தையும் காவல்துறை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்க இயலாது.ஆனால், பணத்துக்கும், நகைகளுக்கும் செய்யப்படும் ஆதாயக் கொலைகள் மீது காவல்துறை மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கை 2006ல் 89 ஆக இருந்து, ஆண்டுதோறும் கூடி 2010ல் 153 ஆக உயர்ந்துள்ளது. இது, 2011ல் 123 ஆக குறைந்துள்ளது.வாகன வசதிகள் பெருகியுள்ள நிலையில் வெகு தொலைவில் இருந்து குற்றவாளிகள் இங்கு வந்து குற்றங்களை செய்துவிட்டு தப்பிப்பது தற்போது நடக்கிறது. திருப்பூரில் நடந்த கன்னக்களவு வழக்கில் மேற்குவங்கத்தில் இருந்து வந்த குற்றவாளிகளைத் தேடி திருப்பூர் காவல்துறையினர் வங்கதேச எல்லைக்குச் சென்று, இரண்டு குற்றவாளிகளை பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மாற்றம் :முந்தைய ஆட்சியில் நடந்த கொலை வழக்குகளும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்ற ஆட்சியில் செல்வாக்கு படைத்தவர்களின் ஆதரவுடன் கொலை செய்து, அதை வாகன விபத்தாக மாற்றிய சம்பவங்களும் நடந்தன.மதுரை மாவட்டம், அவனியாபுரம் காவல் நிலையம், வில்லாபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜனை, அக்கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.கோபி மற்றும் 15 பேர், 2009ல் லோக்சபா தேர்தலின் போது, தனக்கு சொந்தமான இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அலுவலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட முன் விரோதத்தால் அவர் கொலை செய்யப்பட்டார்.ஆனால், பாண்டியராஜன் விபத்தில் இறந்தது போல ஜோடித்து சடலத்தை சாலையில் வீசிவிட்டு, எஸ்.ஆர்.கோபிக்கு சொந்தமான ஸ்கார்பியோ காரை சடலத்தின் மீது ஏற்றிச் சென்றுள்ளனர். அவனியாபுரம் போலீசார் வாகன விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்து, பின்னர், கட்நத ஆண்டு ஜூலையில் அவ்வழக்கு கொலை வழக்கமாக மாற்றப்பட்டு, கோபி மற்றும் சுரேஷ் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.எனது முந்தைய ஆட்சியில், ஸ்காட்லாண்டு யார்டு காவல்துறைக்கு இணையாக புகழப்பட்டு பின்னர் வீழ்ச்சியடைந்த காவல் துறை, மீண்டும் அந்த புகழை விரைவில் மீட்டெடுக்கும்.இவ்வாறு முதல்வர் பேசினார்

கருத்துகள் இல்லை: