புதன், 25 ஏப்ரல், 2012

அழகிரி கை ஓங்கியது? தி.மு.க., நோட்டீஸ் விவகாரம் முடிந்தது

மதுரையைச் சேர்ந்த தி.மு.க.,வினர் 17 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதாக தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"கடந்த 15ம் தேதி மதுரையில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற ஸ்டாலினை வரவேற்கவில்லை' என்ற குற்றச்சாட்டின் பேரில், அழகிரி ஆதரவாளர்கள் 17 பேருக்கு தி.மு.க., மேலிடம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதற்கு, 17 பேரும் பதில் அனுப்பி இருந்தனர். அவைத்தலைவர் இசக்கிமுத்து மட்டும், நோட்டீஸ் அனுப்பிய அமைப்புச் செயலர் டி.கே.எஸ்.இளங்கோவனின் அதிகாரத்தை கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனால், அவரை மட்டும் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்தது
.மற்ற 16 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. அவர்களது பதிலையும், அழகிரி தரப்பில் இருந்து வந்த நெருக்கடியையும் மனதில் கொண்டு அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நோட்டீஸ் விவகாரம் அழகிரி - ஸ்டாலின் இடையே பதவி மோதலாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினை திருப்திப்படுத்த...:இதுகுறித்து தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறும்போது, ""ஸ்டாலினை திருப்திப்படுத்தவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அழகிரியையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சி மேலிடத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று எங்களுக்கு தெரியும். இந்த நோட்டீஸ் விவகாரம் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது உண்மை. இருந்தாலும் மேலிட மோதல் முடிவுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி தான்'' என்றார்.

யாரென்றே தெரியாது:மற்றொரு நிர்வாகி கூறும்போது, ""இந்த 17 பேரில் இசக்கிமுத்து என்பவர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் யார் என்றே கட்சியில் பலருக்கு தெரியாது. உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகே அவரைப் பற்றி தெரியவந்துள்ளது. இந்தப் பிரச்னையில் பிரதானமாக இருந்த நிர்வாகிகள் யார் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்கள் அனைவரும் அழகிரி ஆதரவாளர்கள் என்பதால், அவர்களை அழகிரி காப்பாற்றி உள்ளார். இதன்மூலம், இந்த மோதலில் அழகிரி வெற்றி பெற்றுள்ளார் என்பதே நிரூபணமாகிறது'' என்றார். தற்போது ஏற்பட்ட சமரசம் புதுக்கோட்டை இடைத் தேர்தல் அறிவிப்பால் முடிவுக்கு வருமா அல்லது மீண்டும் சூடுபிடிக்குமா என்று தெரியவில்லை.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: