சனி, 28 ஏப்ரல், 2012

தி.மு.க.,வில் முடிவுக்கு வந்தது "நோட்டீஸ்' பிரச்னை: தயாளுவால்

தி.மு.க.,வில் அனைவரும் கருணாநிதி ஆட்கள் தான்,'' என மத்திய அமைச்சர் அழகிரி கூறியதன் மூலம் "சகோதர யுத்தத்தால்' சர்ச்சையை ஏற்படுத்திய "நோட்டீஸ்' விவகாரம் முடிவுக்கு வந்தது.

கட்சி பொருளாளர் ஸ்டாலின் ஏப்.,14, 15ல், மதுரை மாவட்டத்தில் நடத்திய இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு, பொதுக்கூட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை என, சர்ச்சை எழுந்தது. அழகிரி ஆதரவு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஸ்டாலின் வலியுறுத்தியதால், 17 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு, "அழகிரி ஊரில் இல்லாதபோது, அவருக்கு தகவல் தெரிவிக்காமல், ஸ்டாலின் வந்ததால் நாங்கள் பங்கேற்கவில்லை' என தலைமைக்கு விளக்கம் அளித்தனர்.
நோட்டீஸ் பெற்ற நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையில், ""நீங்கள் தைரியமாக இருங்கள்; விளக்கம் கேட்டால் தலைமைக்கு நான் பதில் சொல்லிக்கிறேன்,'' என ஆதரவாளர்களிடம் ஆறுதலை ஆவேசத்துடன் வெளிப்படுத்தினார், அழகிரி. ஆனால், அடுத்த நாளே, அழகிரியின் தீவிர விசுவாசியும், மூத்த நிர்வாகியுமான அவைத் தலைவர் இசக்கிமுத்துவை, கட்சியிலிருந்து நீக்கியதாக தலைமை அறிவித்தது. இது அழகிரிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அழகிரியுடன் இருப்போரில் முக்கியமானவர் இசக்கிமுத்து. அவருக்கே இந்த கதியா? என நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். "தென்மண்டல அமைப்பு செயலர் என்ற முறையில் அழகிரியிடம் கேட்காமல், விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப அமைப்பு செயலாளருக்கு அதிகாரம் இல்லை' என, இசக்கிமுத்து தனது விளக்க கடிதத்தில் தெரிவித்திருந்ததால், நீக்கப்பட்டார் என, கட்சி விளக்கம் அளித்தது.

சென்னையில் நிருபர்கள் அழகிரியிடம் கேட்டபோது ""கட்சியில் நிர்வாகிகள் நீக்கப்படுவது சகஜம். வேறு கட்சிகளில் நிர்வாகிகள் நீக்கபட்டதில்லையா?'' என கேட்டார். அதன்பின், அழகிரி டில்லி செல்லும் முன், தாயார் தயாளுவை சந்தித்துள்ளார். அழகிரியிடம் அவர் ""நீ தானே எல்லாமே... தைரியமாக சென்று வா'' எனக் கூறியுள்ளார். "தாயாரின்' பேச்சு குறித்து தனது முக்கிய விசுவாசியான மதுரையில் உள்ள தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் எம்.எல்.ஏ., இருவரிடமும் அழகிரி தெரிவித்து விட்டு டில்லி பறந்தார் அழகிரி. பின், அங்கிருந்து நேற்று திரும்பிய அழகிரி, மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டி:

* புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க., போட்டியிடுமா?

நான் போட்டியிடவில்லை. நம்பினால் கைவிட மாட்டார் என்று உங்களை நிர்வாகிகள் கூறுகின்றனர்.

* உங்கள் ஆதரவாளர் ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாரே?

கட்சியில் இதெல்லாம் சகஜம். இதற்காக யாரும் பயப்பட தேவையில்லை. தி.மு.க.,வில் அனைவருமே கருணாநிதி ஆட்கள் தான்.

* "தயா சைபர் பார்க்' பிரச்னை குறித்து?

அதற்கு தான் பிரஸ் மீட் வைத்து விளக்கப்பட்டது. அது இன்று செய்தியாக வந்துள்ளதே.

* திகார் சிறையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராஜாவை சந்தித்தது குறித்து?

கட்சிக்காரரை பார்க்கக் கூடாதா. நான் அடிக்கடி அவரை பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். ""தி.மு.க.,வில் அனைவருமே கருணாநிதி ஆட்கள் தான்'' என்ற அழகிரியின் பதில், கட்சியில் நடக்கும் யுத்தம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாகவும், ""நிர்வாகிகள் நீக்கப்படுவது சகஜம். இதற்காக யாரும் பயப்பட தேவையில்லை'' என்பதன் மூலம் நீக்கப்பட்ட அந்த நிர்வாகி, விரைவில் கட்சியில் இணையலாம் என, மற்றொரு நிர்வாகி ஒருவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை: