புதன், 25 ஏப்ரல், 2012

மம்தாவின் அரசியல் தேவை ஒரு ஸ்பீட் பிரேக்

இன்று வரை, நம் நாட்டு பெண் அரசியல்வாதிகளில், எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல், ஒருவர் முதல்வராக இருக்கின்றார் எனில், அது நிச்சயம் மம்தா பானர்ஜி என்று, நாம் அனைவரும் எளிதாக சொல்லி விடலாம்.அந்த வகையில், எளிமை, நேர்மை! போராட்டக் குணத்தில் அவருக்கு நிகர் அவரே. ஆனால், மேற்கு வங்கத்தை தொடர்ந்து, 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வந்த இடதுசாரிகளை ஓரம் கட்டிவிட்டு, என்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாரோ, அன்று முதல், அவரிடம் பல மாற்றங்கள் உண்டாகிவிட்டன.

உதாரணமாக, மேற்கு வங்கத்தில் ஒரு கற்பழிப்பு சம்பவத்தை அரசியலாக்கி, மூடி மறைக்கப் பார்த்தார். பின், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்; அதனால், தம் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக, பொய்யாக கொடுக்கப்பட்ட புகார் என்று கூறினார்.பின், எப்போதும், "மீடியா'க்களிடம் அன்பு காட்டி வந்த அவர், ஒரு முறை அரசு மருத்துவமனையில், சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் குழந்தைகள் இறந்ததை விசாரிக்கச் சென்ற போது, "மீடியா'க்கள் அவர் பின்னால் படையெடுத்ததை, பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபப்பட்டது, பெரும் வியப்பளித்தது.


இப்படி, அவரின் கோபக்குணம், அவர் இன்று வரை ஆட்சியில் செய்து வந்த நல்லவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டன. அதிலும், கடைசியாக ரயில்வே அமைச்சர் திரிபாதியை வீட்டுக்கு அனுப்பினார். கேலிச் சித்திரத்தை நண்பர்களுக்கு, "இ-மெயில்' மூலம் அனுப்பிய பேராசிரியர் ஒருவர் மீது, வழக்குப்பதிவு செய்தார். இவற்றின் மூலம், அவர் மீது நடுநிலையாளர்கள் வைத்திருந்த அன்புக்கும், மரியாதைக்கும், களங்கத்தைத் தேடிக்கொண்டார். இதன் உச்சகட்டமாக, மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளி பாடப் புத்தகங்களிலிருந்து, காரல் மார்க்ஸ் பற்றிய பாடங்களையெல்லாம் நீக்கிட உத்தரவிட்டுள்ளது, சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது.

சீனாவில் நடக்கும் இடதுசாரிகள் ஆட்சியைப் போன்றும், லிபியா, எகிப்து போன்ற நாடுகளில், அதிபர்கள் நடந்து கொண்ட செயல்களைப் போன்றும் அல்லவா, மம்தாவின் செயல்பாடுகள் உள்ளன!

கருத்துகள் இல்லை: