ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

அழகிரி மோதலில், அன்பழகனை ஒருமையில் திட்டிய ஸ்டாலின்!

Viruvirupu,
ஜெயிக்கப்போவது யார்? இந்தக் கேள்விதான் இன்று தி.மு.க.-வினரிடையே அடிபடும் மில்லியன் டாலர் கேள்வி. ஸ்டாலின் – அழகிரி இடையே எழுந்துள்ள மோதல், முன்பு போல இல்லாமல் இம்முறை ஆக்ரோஷமாகத்தான் உள்ளது என்பதை தி.மு.க. தலைமையுடன் நெருக்கமானவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.
ஸ்டாலின் இம்முறை எந்த சமாதானத்துக்கும் மசியப் போவதில்லை என்கிறார்கள் அவரது ஆதரவு வட்டத்தில். “தளபதி அழகிரி மீது மட்டுமல்ல, கருணாநிதி மற்றும் அன்பழகன் மீதும் கடும் கோபத்தில் உள்ளார்” என்கிறார்கள் அவர்கள். இதற்குக் காரணம் முதலில் கருணாநிதி நேரிலும், பின்னர் அன்பழகனை தூதுவிட்டும், ஸ்டாலினை கொஞ்சம் இறங்கிப் போகும்படி அட்வைஸ் பண்ணியதுதான் என்றும் சொல்கிறார்கள்.

ஸ்டாலினின் கோபத்தால், தி.மு.க.-வில் இதுவரை நடைபெறாத ஒரு சம்பவம் ஒன்றும் நடந்தது என்கிறார்கள். வார்த்தைகள் தடித்த நிலையில், ஒரு கட்டத்தில் அன்பழகனை ஸ்டாலின் ஒருமையில் பேசிவிட்டதாகவும், முகம் சிவந்த நிலையில், தனது தோளில் இருந்த துண்டை உதறிவிட்டு அன்பழகன் வெளியேறியதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
தி.மு.க. உள்வட்டத்துடன் நெருக்கமான ஒருவரிடம் பேசியபோது, ஸ்டாலினுக்கு இந்த விவகாரத்தில் ஏற்கனவே அன்பழகன் மீது கோபம் இருந்தது என்றார்.
ஸ்டாலின் மதுரையில் இருந்து திரும்பும்போதே ஒரு முடிவோடுதான் வந்தாராம். தன்னை ‘கண்டுகொள்ளாத’ 17 பேரையும் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்பதுதான் அவரது முடிவு. கருணாநிதிக்கு அதைத் தெரிவித்தவுடன் இறுக்கமான முகத்துடன், “பொதுச் செயலாளரிடம் சொல்லுப்பா. அவர் சஸ்பென்ட் பண்ண விரும்பினா லெட்டா அனுப்பட்டும்” என்றாராம் கலைஞர்.
ஆனால், ஸ்டாலின் அன்பழகனுடன் போனில் பேசுவதற்குமுன், கருணாநிதி அன்பழகனை போனில் பிடித்திருக்கிறார். ஏதோ சொல்லியிருக்கிறார்.
இதனால், ஸ்டாலின் அன்பழகனிடம், 17 பேரை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று சொல்லியபோது, அன்பழகன் ரியாக்ஷன் எதையும் காட்டவில்லை. “சரி.. விசாரிச்சுக்கலாம்” என்று மட்டுமே கூறியிருக்கிறார்.
இது ஸ்டாலினுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, கலைஞருடன் எப்போதும் கூடவே உள்ள ஒருவரை உலுப்பியிருக்கிறார். ஸ்டாலின் உலுக்கிய உலுப்பலில், கருணாநிதி அன்பழகனுடன் போனிஸ் பேசிய கதை வெளியே வந்து விழுந்திருக்கிறது.
17 பேர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஸ்டாலின் விட மாட்டார்; நடவடிக்கை எடுத்தால், அழகிரி சும்மா இருக்க மாட்டார் என்பதை புரிந்து கொண்ட அன்பழகன், இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ள விரும்பியிருக்கிறார்.
இதற்கிடையே 17 பேரையும் கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பென்ட் செய்யும் திட்டத்தை செல்வி உட்பட யாரும் ஆதரிக்கவில்லை. அதனால், 17 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது என்று முடிவாகியது.
அதன்பின், பேராசிரியரை தொடர்புகொண்ட ஸ்டாலின், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் 17 பேருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு கூறியிருக்கிறார். அதற்கு பேராசிரியர் சரியான பதிலைக் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார். கருணாநிதியுடன் பேசவேண்டும், அழகிரியுடன் பேசவேண்டும் என்றெல்லாம் கூறி, பிடி கொடுக்காமல் பேசிவிட்டு போனை வைத்துவிட்டார்.
இது ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திவிடவே, பொதுச் செயலாளரின் கையொப்பம் இல்லாமலேயே, தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதுதான், ஸ்டாலினுக்கு அன்பழகன் மீது இருந்த கோபத்தின் பின்னணி.
“அப்போது ஒதுங்கிக் கொண்ட அன்பழகன் அப்படியே இருந்திருக்கலாம். மரியாதை காப்பாற்றப்பட்டிருக்கும்” என்று வருத்தத்துடன் கூறினார் எமக்கு தகவல் தந்தவர்.
ஆனால், அப்படி நடக்கவில்லை. அழகிரி ஒருபுறமாக நெருக்கடி கொடுக்க, ஸ்டாலின் மறுபுறமாக பிடிவாதமாக நிற்க, கருணாநிதி வேறு வழியில்லாமல், அன்பழகனையே ஸ்டாலினிடம் தூது அனுப்பியிருக்கிறார். பிரச்னையில் பரிமாணம் புரியாமல் அன்பழகனும் தூது சென்றிருக்கிறார்.
அப்போது அன்பழகன் பேசியது அழகிரிக்கு சார்பாக இருந்ததாக ஸ்டாலினுக்கு தோன்றவே, வார்த்தைகன் தடித்தன என்கிறார் எமக்கு தகவல் தந்தவர். ஒருகட்டத்தில் கோபமாக பேசிய ஸ்டாலின் அன்பழகனை ஒருமையில் திட்டிவிடவே, நிலைமை சிக்கலாகிவிட்டது.
கருணாநிதியை தொடர்புகொண்ட அன்பழகன், “எனது வயதுக்கு மரியாதை கொடுக்காத கட்சியில் எனக்கு எதற்கு பொதுச்செயலாளர் பதவி” என்று எகிற, பந்து மீண்டும் கருணாநிதியின் மைதானத்தில் வந்து விழுந்திருக்கிறது. விவகாரம் கோபாலபுரத்தில் நேற்று இரவு பெரிய வாய்த் தர்க்கத்தில் முடிந்திருக்கிறது.
“இன்னிக்கு பேராசிரியருக்கு நடந்த கதி நாளைக்கு எனக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்?” என்று கொதித்த கருணாநிதி கூறியதை கேட்காமல் வீட்டில் இருந்தவர்கள் அந்த இடத்தைவிட்டு அகன்றதாக கூறுகிறார்கள். தாம் பேசிக்கொண்டு இருக்கும்போதே அதைக் கேட்காமல் வெளியேறியது கருணாநிதியை அதிர வைக்க, வீட்டுக்குள்ளே உண்ணாவிரதம் துவங்கப் போவதாக சத்தம் போட்டாராம் அவர்.
தயாளு அம்மாள் உட்பட, இவருடைய உண்ணாவிரதத்தையும் கண்டுகொள்ள யாருமில்லை. “பசி வந்தா அவரே சாப்பிடுவார்” என்று கூறிவிட்டு தயாளு அம்மாளும் கீழே இறங்கி சென்றுவிட்டாராம்.
அந்த நேரத்தில் வீட்டில் இருந்த ‘நெருக்கமான’ கட்சிக்காரர்கள் சிலர் இந்த அமர்க்களத்தை எல்லாம் இறுகிய முகத்துடன் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பிச் சென்றனராம்….
அது, நேற்றிரவு நடந்தது. இன்று கோபாலபுரத்தில் வாண வேடிக்கை நிச்சயம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்!

கருத்துகள் இல்லை: