ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

அழகிரி: தலைமைக்கு நான் பதில் சொல்லிக்கிறேன்'

நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் குறித்து தலைமை என்னிடம் நேரில் கேட்கட்டும்; அதற்கு நான் பதில் சொல்லிக்கிறேன். நீங்கள் (நோட்டீஸ் பெற்றவர்கள்) கவலைப்பட வேண்டாம்,'' என, மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்தார்.
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மதுரையில் பங்கேற்ற நிகழ்ச்சிகளை புறக்கணித்ததற்காக, தலைமையிலிருந்து நோட்டீஸ் பெற்ற நிர்வாகிகள் 17 பேருடன் நேற்று அவரது இல்லத்தில் அமைச்சர் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதில், அவை தலைவர் இசக்கிமுத்து, முன்னாள் துணைமேயர் மன்னன், துணை செயலாளர் உதயகுமார் உட்பட 17 பேரும் பங்கேற்றனர்.
அப்போது அழகிரி பேசியது குறித்து கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தென் மாவட்டங்களில் கட்சி வளர்ச்சிஅடைந்ததற்கு எனது பங்கும் உள்ளது. சோதனை காலங்களில் எல்லாம் எனக்கு பக்கபலமாக பலர் இருந்தீர்கள். ஒரு முக்கிய முடிவு தொடர்பாக நாம் பேசி முடிவெடுக்கும் போது அது பத்திரிகைகளில் வெளியாகிறது. "சீக்ரெட்டை மெயின்டன்' பண்ணுங்க. இதுபோன்ற விஷயங்கள் இனிமேல் வெளியில் போகக் கூடாது. ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்காதது தொடர்பாக, தென் மண்டல செயலர் என்ற முறையில் என்னிடம் கட்சி தலைமை தெரிவித்து விட்டு, நோட்டீஸ் அனுப்பியிருக்கலாம். நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக தலைமை என்னிடம் இதுவரை கேட்கவில்லை. தலைமை என்னிடம் கேட்கட்டும்; நான் பதில் சொல்லிக்கிறேன்.

எனக்கு எதிராக...: நகர் செயலாளர் தளபதி, நான் உருவாக்கிய ஆள். ஆனால், இப்போது எனக்கு எதிராக சிலர் போகின்றனர். என்னிடம் உள்ளவர்கள் உண்மையான விசுவாசியாக இருங்கள். கட்சி பொருளாளர் வருகை குறித்து என்னிடம் கேட்கணுமா, இல்லையா? தொண்டர்கள் மனநிலையை தொடர்ந்து எனக்கு தெரியபடுத்துங்கள். மீண்டும் சொல்கிறேன் "டபுள் கேம்' ஆடாமல் உண்மை விசுவாசிகளாக இருங்கள். உங்களுக்கு எதிர்காலம் உள்ளது, என்றார். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தது.

சீன பெருஞ்சுவர் குறித்து தான் கேட்டார்: ""என்னிடம் தலைவர் பேசினார். சீன பயணம் குறித்து கேட்டார். சீனாவில் உள்ள "சீன பெருஞ்சுவர்' உட்பட சில இடங்களை குறிப்பிட்டு எப்படி இருந்தது? என ஆவலுடன் கேட்டார். கட்சியினருக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து என்னிடம் கேட்கவில்லை'' என, நிர்வாகிகளிடம் அழகிரி "ஜாலியாக' தெரிவித்தார்.

மூர்த்தியை கண்டியுங்கள்...: கூட்டம் நடக்கும்போது பகுதி செயலர் ஒருவர் எழுந்து, ""நகரில் பங்கேற்ற தளபதி மீது நடவடிக்கை எடுத்தது போல், சிக்கந்தர் சாவடியில் நடத்த நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்கள் பெயரை கூட தெரிவிக்காமல் பேசிய மூர்த்தியை கண்டியுங்கள்'' என ஆவேசப்பட்டார். அப்போது மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி எழுந்து, ""நகருக்கும், புறநகருக்கும் தேதியை கொடுத்தது யார் எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை. நான் பேசும்போது "அண்ணன்' பெயரை குறிப்பிட்டதற்கு ஆதாரம் உள்ளது'' என மூர்த்தியும் ஆவேசப்பட்டார். "கட்சி தலைமை கேட்ட போது "அண்ணன்' ஊரில் இல்லாமல் கூட்டத்தை நடத்தமாட்டோம் என, ஏற்பாடு செய்த நிர்வாகிகள் மறுத்திருக்க வேண்டியது தானே' என கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக கருத்து தெரிவித்தனர். நகர் செயலர் தளபதி ராஜினாமா கொடுத்துள்ளது குறித்து பேச்சு எழுந்தபோது, ""அவரது ராஜினாமாவை முதலில் தலைமை ஏற்றுக்கொள்ளட்டும். இந்த விஷயம் குறித்து பின்னர் பேசுவோம்,' என்றார் அழகிரி.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: