புதன், 25 ஏப்ரல், 2012

புட்டபர்த்தியில் விழா பக்தர்கள் குவிந்தனர் சத்ய சாய்பாபா முதலாமாண்டு

சத்ய சாய்பாபா சித்தியடைந்த முதலாமாண்டு நிறைவு நாள், நேற்று புட்டபர்த்தியில் மகா ஆராதனை விழாவாக நடைபெற்றது. உலகின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள், பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர்.

புத்தகம்: டாக்டர் பத்மஸ்ரீ வெங்கட்ராமன் எழுதிய சாய்பாபா பற்றிய புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆந்திரா மாநில கவர்னர் நரசிம்மன், சாய்பாபா பற்றிய புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.
அவர் பேசுகையில், தனக்கு சாய்பாபா அருளாசி வழங்கிய விதத்தை சுவாரசியமாக விவரித்தவர், இப்படி ஒரு கட்டுக்கோப்புமிக்க, கட்டுப்பாடான பக்தர்களை எங்கும் பார்க்க முடியாது என்பதை, பலமுறை வியந்து நண்பர்களிடம் கூறி வருவதாகவும் தெரிவித்தார். ஆந்திர மாநில அரசு, சாய்பாபாவின் புகழுக்கு பெருந்துணையாக இன்றும், என்றும் துணை நிற்கும் என்று கூறி முடித்தார். சாய் அறக்கட்டளை அகில இந்திய தலைவர் சீனிவாசன், அனைவரையும் வரவேற்றார். மாணவர்களின் குருவந்தனத்தை தொடர்ந்து, மகிளா பக்தர்கள் சார்பில் மகா ஆராதனையும், தொடர்ந்து மங்கள ஆராத்தியும் நடைபெற்றது.

விழாவின் சிறப்பாக, சாய்பாபாவின் பேச்சு ( வீடியோ கிளப்பிங்) பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டதை, அவரது பக்தர்கள் பார்த்து பரவசப்பட்டனர்.

இலவச ஆடை:புட்டபர்த்தி என்பது ஆந்திர மாநிலத்தில் உள்ள மலை கிராமம். வறண்டு கிடந்த இந்த கிராமத்தில் பிறந்த சாய்பாபா, இந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை முதலில் போக்கினார். பின், படிப்படியாக இங்கு பல்கலைக் கழகம், சர்வதேச தொழில்நுட்பம் கொண்ட மருத்துவமனை, ஆசியாவின் பெரிய உள்விளையாட்டரங்கம், விமான நிலையம் என்று, அனைத்தையும் கொண்டு வந்த சாய்பாபா, தன்னை தரிசிக்க வரும் ஏழை, எளிய கிராம மக்களுக்கு அன்னதானம் செய்வதையும், ஆடை தானம் செய்வதையும் வழக்கமாகவும், விருப்பமாகவும் கொண்டு இருந்தார்.அவரது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், இந்த பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏழை பெண்களுக்கு புடவை வழங்கப்படும். அந்த வகையில், அவர் சித்தியடைந்த நிறைவு நாளான நேற்றும், அவரது பக்தர்கள் சார்பில் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழைப் பெண்கள் 30 ஆயிரம் பேருக்கு, இலவச புடவையும், உணவும் தானமாக வழங்கப்பட்டன.புட்டபர்த்தியில் உள்ள ஹில்வியூ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒரு சின்ன தள்ளுமுள்ளு சம்பவம் கூட இல்லாது பக்தர்கள் அனைவருக்கும், புடவைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டதை ஆச்சர்யத்துடன் பார்த்தவர்கள், எல்லாம் சாய்பாபா கற்றுக்கொடுத்த பாடம், பண்பாடு என்று, மனதார வாழ்த்தி சென்றனர்.

3 திட்டங்கள் :புட்டபர்த்தியில் நடைபெற்ற மகா ஆராதனை நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்று பேசிய, அகில இந்திய சத்ய சாய் அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் பேசுகையில், பாபாவின் அருளால் மூன்று முக்கிய விஷயங்கள் நடக்கவுள்ளன என்றார்.முதலாவதாக, சாய்பாபாவின் செய்திகளை ஒளிபரப்பும் ரேடியோ சாய் நிறுவனத்துடன் குளோபல் ஹார்மனி நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிறுவனம், சாய்பாபா தொடர்பான செய்திகளை உலகம் முழுவதும் இன்னும் விரிவாக ஒளிபரப்பும்.இரண்டாவதாக, சாய்பாபாவின் விருப்பமான ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வியை கொடுக்கும் வகையில், முத்தண்ணஹள்ளியில் உயர்கல்விக் கூடம் ஒன்று கட்டப்பட உள்ளது.மூன்றாவதாக, 80 கோடி ரூபாய் திட்டத்தில், அனந்தபூர் மாவட்டத்தில் விடுபட்ட 118 கிராமங்களுக்கு, குடிநீர் வழங்கும் திட்டம் செயல்பட உள்ளது.30 ஆயிரம் பேருக்கு புடவை செய்திக்கான படமும் உள்ளது.

- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை: