ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

மாவோயிஸ்ட்களின் நல்வாழ்விற்கு முயற்சித்தவர்: கடத்தப்பட்ட கலெக்டர் குறித்த புதிய தகவல்கள்

திருநெல்வேலி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்தவர். இவரின் தந்தை வரதாஸ், வள்ளியூர் கன்கார்டியா துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தாய், இவரது சிறுவயதில் காலமாகிவிட்டார். தந்தை வரதாஸ், பாளையங்கோட்டை, தியாகராஜ நகர், ராம் நகரில் வசித்து வருகிறார். அலெக்ஸ் பால் மேனன், பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில், 1996ல் பிளஸ் 2 முடித்தார்.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரியில், எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் முடித்துள்ளார். 2005ல் ஐ.ஆர்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றார். இருப்பினும் முயற்சித்து, 2006ல் ஐ.ஏ.எஸ்., தேர்வானார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி ஆஷா என்ற புஷ்பபாக்கியம், எம்.பி.ஏ., முடித்துள்ளார். திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவரும் கணவருடன் தான் வசித்து வருகிறார்.


இதுகுறித்து, அவரது தந்தை வரதாஸ் கூறியதாவது: என் மகன் ஐ.ஏ.எஸ்., ஆவது எனது கனவாக இருந்தது. கேரளாவை சேர்ந்த வி.கே.கிருஷ்ணமேனன், சுதந்திரம் பெற்றது முதல் 1952 வரை இங்கிலாந்தில், இந்திய ஹைகமிஷனராகவும் இந்தியாவிற்காக வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர். இவர், ஐக்கிய நாட்டு சபையில் ஆற்றிய உரைகளால் கவரப்பட்டேன். எனவே, என் மகனுக்கும், பெயரில் மேனன் என சேர்த்தேன். என் மகன் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களை போராட்ட களத்தில் இருந்து மீண்டும் நேர்பாதைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டான். கடந்த வாரம் வரையிலும், நானும் சத்தீஸ்கரில் தான் இருந்தேன். என் மகனை மீட்க அரசுகள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு வரதாஸ் கூறினார்.

மனைவி வேண்டுகோள்: கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை, மனிதாபிமான அடிப்படையில், நக்சலைட்கள் விடுவிக்க வேண்டும் என, கலெக்டரின் மனைவி ஆஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். ராய்ப்பூரில் நிருபர்களிடம் பேசிய ஆஷா, மேலும் கூறுகையில், "எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை; மருந்துகளைக் கூட அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அவரை மனிதாபிமான அடிப்படையில் நக்சலைட்கள் விடுவிக்க வேண்டும்' என்றார்.

கருத்துகள் இல்லை: