வியாழன், 26 ஏப்ரல், 2012

முல்லைப் பெரியாறு அணை அபார பலத்துடன் உள்ளது ஐவர் குழு அறிக்கை

டெல்லி: தமிழகத்திற்கு மிகப் பெரிய நற்செய்தியை உச்சநீதிமன்ற ஐவர் குழு தனது அறிக்கை மூலம் கொடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலத்துடன் உள்ளது. அதில் நீர் இருப்பு அளவை தாராளமாக அதிகரிக்கலாம் என்பதே அந்த நற்செய்தியாகும்.
முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு மாற்றுத் திட்டமாக புதிய அணை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் ஐவர் குழு கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகி விட்டது, இடிந்து விடும், இடிந்தால் பல லட்சம் கேரள மக்கள் சாவார்கள் என்று தேவையில்லாமல் பீதியைக் கிளப்பி பிரச்சினை செய்து வருகிறது கேரள அரசு. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதி்மன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. ஆனால் அந்தத் தீர்ப்பை மதிக்காமல் தனிச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேலிக்கூத்தாக்கி விட்டது கேரள அரசு.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆராய முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு அமைத்தது.

இதில் தமிழகத்தின் சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக இருவர் என மொத்தம் ஐந்து பேர் இடம் பெற்றனர்.

இந்தக் குழு கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள், சோதனைகள், விசாரணைகளில் ஈடுபட்டு வந்தது. மொத்தம் 8 வல்லுநர் குழுக்களை அமைத்து அணையின் பலத்தை ஆய்வு செய்தது. இதையடுத்து இறுதிக் கட்ட விசாரணை நடந்தது. அதன் பின்னர் கடந்த 22ம் தேதி ஐவர் குழு கூடி இறுதி அறிக்கையை தீர்மானித்தது.

இதைத் தொடர்ந்து 206 பக்கங்கள் கொண்ட அறிக்கை சீல் வைத்த கவரில் நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தீர்ப்பளிக்கப் போவதாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அறிவித்துள்ளதால் அறிக்கை குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் இரு மாநிலங்களிலும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய விஷயங்கள் சில கசிந்துள்ளன. அதில் பிரதானமானது முல்லைப் பெரியாறு அணை நல்ல பலத்துடன் இருப்பதாக ஐவர் குழுவினர் தெரிவித்துள்ளதுதான். அணை நல்ல பலத்துடனும், ஸ்திரத்தன்மையுடன் இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை தாராளமாக அதிகரிக்கலாம் என்றும் ஆனந்த் குழு தெரிவித்துள்ளதாம்.

அதேசமயம், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, புதிய அணை கட்டுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும், அதில் கேரளாவின் கருத்துக்கு மதிப்பளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய வழக்கு முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்தது என்பதால் அணை பலமாக உள்ளது என்ற ஐவர் குழுவின் பிரதான கருத்தே முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த அறிக்கையானது தமிழகத்திற்கு நிச்சயம் சந்தோஷம் தரக் கூடிய ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.

ஐவர் குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் மே 4ம் தேதி பரிசீலனைக்கு எடுக்கவுள்ளது

கருத்துகள் இல்லை: