வியாழன், 25 நவம்பர், 2010

R.Rajah.சூத்திரனுக்கொரு நீதி-பார்ப்பானுக்கு ஒரு நீதியா!

ஆ.ராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? :
கி.வீரமணி பேச்சு (முழுவதும்)

தமிழ் ஊடகப்பேரவை சார்பில், சென்னை சர்.பி.டி.தியாகராயர் அரங்கத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.
ஆ.ராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடந்தது.  விடுதலை - ஆசிரியர் கி.வீரமணி இக்கூட்டத்திற்கு தலைமையேற்றார்.
கருஞ்சட்டை தமிழர் - ஆசிரியர் சுப.வீரபாண்டியன், பேனாஸ் சவுத் ஏசியா ஊடக அமைப்பு செயல் இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், தமிழ் மையம் நிறுவனர் ஜெகத்கஸ்பார், தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரமேஷ்பிரபா ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
கி.வீரமணி பேசும்போது,   ‘’நான் ஒரு பெரியார் தொண்டன்; இது வெறும் ஆ.இராசா என்ற தனி நபரைச் சார்ந்த பிரச்சனை அல்ல. இது ஆரிய - திராவிட போராட்டத்தின் முக்கியமான காலகட்டம்.
ஆதிக்கவர்க்கத்தால் பின்னப்பட்ட சதிவலை,   கலைஞர்  சூத்திரர் ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகின்றார். வரக்கூடிய தேர்தலிலே மீண்டும் கலைஞர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக ஆதிக்க வர்க்கத்தினரால் பின்னப்பட்ட ஒரு சதிவலை.
2ஜி ஸ்பெக்ட்ரம், 3ஜி ஸ்பெக்ட்ரம் என்பதெல் லாம் ஒரு புறத்தோற்றம். ஆனால் உண்மையிலேயே நடக்கின்ற போராட்டம் மனுதர்மத்திற்கும் - மனித தர்மத்திற்குமிடையே நடக்கின்ற போராட்டத்தின் முக்கிய கட்டம். யார் இதை ஊதி, ஊதிப் பெரிது படுத்தினார்கள் என்று ரமேஷ் பிரபா இங்கே எடுத்துச் சொன்னார்.
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் எங்கே போனது என்று கேட்கிறார்கள். வடமாநில ஆங்கில ஊடகத்தைப் பார்ப்பவர்கள் வெறும் 00.1 சதவிகிதம் என்று சொன்னார்கள். மேல்தட்டுவர்க்கத்தினர், ஆளும் வர்க்கத்தினர், அதிகார வர்க்கத்தினர் கலைஞர் ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதற்காக ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் விளைவு என்ன?

ஊடகங்கள் சூத்திரர் ஆட்சிக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றன. இராமாயண காலத்திலிருந்தே இதற்கு உதாரணம் இருக்கிறது. நம்மை சிந்திக்கவிடாமல் நமது மூளைக்கு விலங்கு போட்டார்கள்.
மண்டல் கமிசன் நடைமுறைப்படுத்தியபொழுது...
ஆ.இராசா பதவி விலகிய நிகழ்ச்சி மிகப் பெரிய போராட்டத்தின் தொடர்ச்சி, மண்டல் கமிசன் ஆணையை வி.பி.சிங்  நடைமுறைப்படுத்தினார். அப்பொழுது ஊடகங்கள் என்ன செய்தன தெரியுமா? இட ஒதுக்கீடு தொடர விட்டு
விடக் கூடாது என்று நினைத்த பார்ப்பன ஊடகத்தினர் அப்பாவி மாணவர்களைப் பிடித்து நீங்கள் தீக்குளிப்பதுபோல நாடக மாடுங்கள்.

உங்களுடைய முகம் தொலைக்காட்சியில் தெரிய வரும். உங்களுடைய முகங்கள் ஆங்கிலப் பத்திரிகைகளிலே வரும் என்று சொல்லி அவர்களை ஏமாற்றி உண்மையிலேயே தீக்குளிக்க வைத்து எரித்துக் கொன்றனர். பிறகு ஊடகத்துறையினரே அதை ஒப்புக்கொண்ட ஆதாரங்கள் இதோ எங்களிடம் உள்ளன.
ஆ.இராசா விசயத்திலும் அதே நாடகம்
எப்படி உயர்ஜாதிக்காரர்கள் தங்களுடைய ஆதிக்கத்திற்கு ஆபத்து வரும் என்று கருதிய பொழுது எப்படி நாடகம் ஆடினார்களோ அதே போன்ற நாடகத்தை ஆ.இராசா விசயத்திலும் ஒரு அரசியல் பிரச்சனையாக ஆக்கியிருக்கிறார்கள். ஆ.இராசா மீது சில ஊடகங்கள் வேட்டை ஆடுவது ஏன்?

காஷ்மீரிலிருந்து, கன்னியாகுமரிவரை ஊடகங்கள் அவர்களுடைய கையிலே தான் இருக்கின்றன.
தாழ்த்தப்பட்ட சகோதரன்பெரிய பதவியில் இருப்பதா?

ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரன் முன்னேறி அமைச்சராகப் பெரிய பதவியில் இருப்பதா? அவரை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள்.

ஆ.இராசா வீழ்ச்சி தற்காலிகம்தான்!

இராசா வீழ்ச்சி தற்காலிக வீழ்ச்சிதான். தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அவர்கள் ஒத்திகை பார்த்திருக் கிறார்கள். அரசியல் சட்டம் 151ஆவது பிரிவில் தெளிவாக சட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நீங்கள் எங்களிடம் வாதாட எந்த அரங்கத்திற்கு வந்தாலும் உங்களை சட்ட ரீதியாக நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம். சு.சாமி போன்ற சாமிகள், அவாள்கள் எல்லாம் ஆட்டம் போடுவார்கள்.

அறிக்கை எப்படி கசிந்தது?

அரசியல் சட்டம் 151 ஆவது சட்டப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறபடி மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை முதலில் குடியரசுத் தலைவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். உடனே நாடாளுமன்றத்தில் அந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதுதான் நடைமுறை. இது சட்டப்படி நடந்ததா? நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே ஊடகத்துறைக்கு இந்த அறிக்கை எப்படிக் கசிந்தது? எப்படி வெளியே வந்தது?

விசாரணைக் கமிசன்மூலம்...

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று எப்படிச் சொன்னார்கள்? எனவே, இதைப்பற்றி ஒரு பெரிய விசாரணை கமிசன் வைத்தால்தான் உண்மைகள் வெளியே வரும். பால் கமிசன் அறிக்கை வெளியானது என்று அன்றைக்கு கலைஞர் மீதும், அவருடைய செயலாளர் சண்முகநாதன் மீதும் எம்.ஜி.ஆர். வழக்குப் போட்டாரே!

பிரதமர் மறைமுகமாக சொன்ன செய்தி

டில்லியில் முரசொலி மாறன் படத்திற்கு மலர் தூவிவிட்டுச் செல்லும் பொழுது பிரதமர் மன்மோகன் சிங் அங்கே நின்று கொண்டிருந்த இராசா முதுகை தட்டிக்கொடுத்ததை தொலைக்காட்சியினர் திரும்பத் திரும்பக் காட்டினர்கள்.

இராசா நீ குற்றமற்றவன் என்பதை நானே உணருகிறேன் என்று சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்று விட்டாரே.

சூத்திரனுக்கொரு நீதி-
பார்ப்பானுக்கு ஒரு நீதியா!

பார்ப்பனர் குற்றம் செய்தால் உச்சிக்குடுமியில் இரண்டு முடியை வெட்ட வேண்டும் அவ்வளவு தான். சூத்திரன் தவறு செய்தால் அவனுக்கு கொலை குற்றத்தண்டனை கொடுத்து கொல்ல வேண்டும்.

மரண தண்டனை விதிக்க வேண்டும்.  இதுதானே உங்களுடைய மனுதர்மச் சட்டம்? சூத்திரனுக்கு ஒரு நீதி; பார்ப்பானுக்கு ஒரு நீதிவழக்கு போடப்படும்.

இந்தப் புகாரை நாங்கள்தான் கொடுத்தோம் என்று சொல்லுகின்ற வீரர்களை கேட்கிறோம். 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் 60 ஆயிரம் கோடி ரூபாய் புழங்கியிருக்கிறது என்று சந்தேகப்படு கிறோம் என்று சொல்லுகிறார்களே! அப்படி யானால் யார் வாங்கினார்கள் எப்படி கொடுத்தார்கள் என்பதை நீங்கள் சொல்லியாக வேண்டும். வழக்கு வரும்.

மந்திரியாக இல்லாவிட்டாலும்,
ராஜா ராஜாதான்!

எனவே இராசா தனி மனிதரல்ல; திராவிட இனத்தின் தலை சிறந்த தளபதி; திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற கொள்கை பரப்புச் செயலாளர். மந்திரியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராஜா ராஜா தான்!

ஒவ்வொருவரும் நூறு பேருக்குச் சொல்லுங்கள்.ஆகவே மக்களுக்குப் புரியும் படியாக இங்கு வந்திருக்கிறவர்கள் ஒவ்வொருவரும் நூறு பேருக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தப் பார்ப்பன ஊடக சதி வலையைப் பற்றி.

அரசாங்கம் பொது மக்களுக்கு நன்மை செய்யும் பொழுது நட்டங்கள் வரும்; அதைப்பற்றி அர சாங்கம் கவலைப்படாது.

அரசுக்கு நட்டம் மக்களுக்கு லாபமாயிற்றே

போக்குவரத்துத் துறையில் கல்வித் துறையில், உணவுத் துறையில் அரசுக்கு நட்டம் ஏற்படத்தான் செய்யும்; ஆனால் மக்களுக்கு லாபம் அல்லவா?

இன்றைக்கு ஏழை, எளிய மக்கள் கையில் எவ் வளவு காலம் தொலைபேசி இருக்கிறதோ அவ்வளவு காலத்திற்கும் மக்களும் இராசாவை நினைத்துக் கொண்டிருப்பார்கள். தி.மு.க. ஆட்சியை நினைத்துக் கொண்டிருப்பார்கள். கலைஞரை நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

தமிழர்களுக்கு எதிரான பத்திரிகையை வாங்காதீர்!

எனவே, தேர்தல் வரப்போகிறது, நாம் எச்சரிக் கையாக இருக்கவேண்டும். தமிழர்களுக்கு எதிரான ஊடகத்தை புறக்கணியுங்கள்; தமிழர்களுக்கு எதி ரான செய்தித் தாள்களை வாங்காதீர்கள். புறக்கணியுங்கள். தி.மு.க. ஆட்சிக்கு நாம் காவலர்களாக இருப்போம்.

இராசா பெயர் எந்த இடத்தில் இருக்கிறது?

இராசாவை கைது செய்ய வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவை புரிந்து கொள்ளுங்கள். ராசா குற்றம் செய்தார் பணம் வாங்கினார் என்று எந்த இடத்தி லாவது இருக்கிறதா? ஆதாரம் எங்கே என்று அட்டர்னி ஜெனரல் அந்தியார்ஜுனா கேள்வி கேட்டாரே. உச்சநீதிமன்றத்தில் இதற்கு என்ன பதில்?

மீண்டும் கலைஞர் ஆட்சியே!
உணர்ச்சி பெறுங்கள் மக்களே!

சிலர் தமிழர் ஆட்சியை திராவிடர் ஆட்சியை வீழ்த்த இதை ஒரு சாக்காகப் பயன்படுத்த நினைத்தார்கள்.

இனி ஒருபோதும் அது நடக்காது. தமிழர்களே விழிப்பாக இருக்கவேண்டும். கலைஞர் ஆட்சியைக் காப்பாற்றி, மீண்டும் கலைஞர் ஆட்சியை மலரச் செய்வது ஒன்றுதான் நமது கடமை’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: