சனி, 27 நவம்பர், 2010

M16-UK.உளவுத்துறையின் மட்டமான செயல்:ஆப்கன் விவகாரத்தில் அம்பலம்

mi6லண்டன்:ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்திய "போலி' தலிபான் தலைவரை பேச்சு வார்த்தையில் ஈடுபடுத்தியது, பிரிட்டனின் ரகசிய உளவுத் துறை என்பது இப்போது தெரிய வந்துள்ளது. எனினும், இது குறித்து பிரிட்டன் உளவுத்துறை மவுனம் காத்து வருகிறது.ஆப்கானிஸ்தானில், தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அதிபர் ஹமீத் கர்சாய் முன்வந்தார். எனினும், தலிபான் தலைவர் முல்லா ஒமர், "நேட்டோ' படைகள் வெளியேறிய பின்னர் தான் பேச்சு வார்த்தை என்று கறாராக கூறிவிட்டார்.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக, கர்சாயுடன் தலிபானின் இரண்டாம் கட்டத் தலைவர் முல்லா அக்தர் முகமது மன்சூர், பாக்., நகரான குவெட்டாவில் இருந்து பிரிட்டனின் ராணுவ விமானம் மூலம் காபூலுக்கு வந்து, மூன்று சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன. தலிபான் இதை மறுத்தது.இந்நிலையில், அமெரிக்க மற்றும் ஆப்கன் அதிகாரிகள் சிலர், கர்சாயுடன் பேச்சு வார்த்தை நடத்தியது, தலிபான் தலைவர் மன்சூர் அல்ல, குவெட்டாவில் ஒரு கடை வைத்து நடத்தும் சாதாரண நபர் என்ற செய்தியை வெளியிட்டனர்.இதையடுத்து, மன்சூருடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்தார் கர்சாய்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆப்கன் அதிபரின் தலைமை அதிகாரி, மன்சூர் என்ற பெயரில் ஒரு நபரை கூட்டி வந்து, ராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட வைத்தது, பிரிட்டன் அதிகாரிகள் தான் என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார். பிரிட்டனின் ரகசிய உளவுத் துறையான "எம்.ஐ.6' தான், குவெட்டாவில் கடை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவரை அழைத்து வந்து, பேச்சு வார்த்தை நடத்தச் சொல்லி பணம் கொடுத்ததாக, அமெரிக்காவில் இருந்து வெளியாகும், "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை கூறியுள்ளது.
இவ்விவகாரத்தில் அமெரிக்கா, நேட்டோ, ஆப்கன் மற்றும் பிரிட்டன் உளவுத்துறைகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன. இதுகுறித்து பிரிட்டன் மவுனம் சாதித்து வருகிறது.ஆனால், ஆப்கனின் கந்தகார் மாகாணத்திற்கான அமெரிக்கப் பிரதிநிதி பில் ஹாரிஸ் இதுகுறித்து கூறுகையில், "பிரிட்டன் உளவுத்துறை மீது மட்டும் குற்றம் சுமத்த முடியாது. இது போன்ற முட்டாள்தனமான செயல்களை அமைப்பு ரீதியாக மட்டுமே செயல்படுத்த முடியும்' என்று கூறியுள்ளார்.எனினும், ஆப்கன் போரை விரைவில் நிறுத்த, அமெரிக்காவை விட பிரிட்டன் அதிக ஆர்வத்தில் உள்ளது என, சில அமெரிக்க அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: