ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

புலிகளுக்கு காணி வழங்க அதிகாரமில்லை, நஸ்டஈடு கோருவதை ஏற்கமுடியாது: கிளிநொச்சியில் நல்லிண ஆணைக்ககுழு தலைவர்


தமிழீழ விடுதலைப்  புலிகளுக்கு காணி வழங்குவதற்கான எந்த அதிகாரம் கிடையாது. அவர்கள் வழங்கியதாக கூறப்படுகின்ற காணிகளை மீளக் கையளிக்க முடியாது.   அதற்கான நஷ்ட ஈடுகளையும் வழங்க முடியாது என்பது கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் தலைவர் கிளிநொச்சியில் தெரிவித்தார்.
வன்னி நிலப்பரப்பில் விடுதலைப் புலிகள் நிலை கொண்டிருந்த போது தமது மாவீரர் குடும்பங்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்தனர். அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிகளையும் அவர்கள் வழங்கியிருந்தனர்.    இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில் பெரும் பாலானவை வெளிநாடுகளில் குடி யேறியவர்களது காணிகளாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது போர் முடிவடைந்த நிலையில் தமது முன்னைய காணிகளுக்கு திரும்ப முனைந்தவர்களுக்கு அந்த காணிகளை வழங்க மறுத்து வருவதாகவும் அவர்களுக்கு காட்டுப் பகுதிகளில் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த காணிகள் தண்ணீர் வசதியோ வேறு எந்த வசதிகளோ இல்லாத நிலங்கள்  எனவும் கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணத்துக்குமான ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் தாம் குடியேறி இருந்த முன்னைய காணிகளில் பயிர் செய்ததாகவும், வீடுகளை அமைத்திருந்ததாகவும் அவை அனைத்தும் தற்போது நாசமாக்கப்பட்டதாகப் தமது காணிகளை மீள வழங்கவேண்டும் என்று கோரியதுடன் நஷ்ட ஈட்டையும் வழங்க வேண்டுமென இவர்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த கோரிக்கைக்கு பதில் அளிக்கையிலேயே கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு தலைவர் புலிகளுக்கு காணி வழங்குவதற்கான அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்டதுடன் காணிகளை மீள வழங்கவோ நஷ்ட ஈட்டை வழங்கவோ முடியாதென தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: