வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

தேர்தல் முறையில் மாற்றம் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்

சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாராளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படும் என்று அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தும் பொழுது பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் பெற்றுக்கொள்ளப்படுமென அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பொருளாதார பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகப் பிரதியமைச்சர் கூறினார்.
அரசாங்கம் உத்தேசித்துள்ள தேர்தல் முறை மாற்றத்தின்படி விகிதாசார முறைமை மாற்றப்பட்டுத் தொகுதி வாரி முறையும் விகிதாசார முறையில் கலந்த ஒரு முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எனவே, விகிதாசார முறையில் சிறுபான்மையினர் பாதிக்கப்படாதிருக்க வேண்டுமென்று காங்கிரஸ் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மலையக மக்கள் பரந்துபட்டு வாழ்கிறார்கள் எனவே விகிதாசார முறையில் அவர்களடைந்த நன்மை, பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பன பாதித்துவிடக் கூடாது.
மலையக மக்கள் பரந்து வாழும் சூழலுக்கு ஏற்ப புதிய தொகுதி உருவாக்கப்பட வேண்டுமென்றும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருப்பதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார். புதிய தொகுதிகள் உருவாக்கப்படவேண்டிய பிரதேசங்களை அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை சிறுபான்மையினருக்கு விசேடமாக மலையகப் பெருந்தோட்டப் புறங்களுக்குப் பாதகமான நிலை கிடை யாது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு தோட்டத்திலும் மக்கள் செறிந்து வாழ்வதால், அதற்கு ஏற்றவாறு தொகுதிகளை ஏற்படுத்துவதன் மூலம் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் தொகுதிகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சித் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாகத் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது அது பற்றித் தெளிவுபடுத் தப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர் பெரும்பாலும் உள்ளூராட்சித் தேர்தல் முறை சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்பு அல்லவென்றும் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை: