வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

ஜாதிக ஹெல,புலிப் போராளிகளை அரசாங்கம் உடனடியாக விடுவிக்கக் கூடாது-

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவருகின்ற  முன்னாள் புலிப் போராளிகளை எக்காரணம் கொண்டும் விரைவாகவோ உடனடியாகவோ விடுவிக்கக்கூடாது.  அவ்வாறு அவர்களை விடுவித்தால் மீண்டும் பயங்கரவாத அமைப்பு ஒன்று உருவாவதற்கான அபாயம் உள்ளது.   புலிகளின் ஆயுதக்கிடங்குகள் இன்னும் வடக்குகிழக்கில் உள்ளன.
எனவே, அவர்களுக்கு நீண்டகாலம் புனர்வாழ்வு      அளிக்கப்படவேண்டும். என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.  குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதோ அவருக்கு தண்டனை வழங்குவதையோ விட  அவரை பயன்படுத்தி தமிழ் இனவாத பிரிவினைவாத   புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிக்க  முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார்.
ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகபேச்சாளர் அங்கு மேலும் கூறியதாவது: குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்டவர்.   பிரபாகரன் கொல்லப்பட்டதும் தான் புலிகளின் புதிய தலைவர் என்று அறிவித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் இலங்கை புலனாய்வு பிரிவினர் கே.பி.யை கைது செய்தனர்.   தற்போது அவர் இராணுவத்தின் பொறுப்பில் இருக்கின்றார்.
தற்போதைய நிலைமையில் கே.பி.க்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதோ தண்டனை வழங்குவதையோவிட செய்வதற்கு தேவையான விடயம் ஒன்று உள்ளது.  அதாவது தமிழ் பிரிவினைவாத இனவாத புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க கே.பி.யை பயன்படுத்தவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். மேலும் சொத்துக்களையும் அரசுடமையாக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
கருணா அம்மான், பிள்ளையான் போன்றோர் புலிகளிடமிருந்து பிரிந்தபோது அவர்களைக்கொண்டு புலிப் பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.                ஜே.வி.பி. யினரும் இதனை அன்று வலியுறுத்தியிருந்தனர்.     எனவே தற்போதைய நிலைமையில் கே.பி. யைக்கொண்டு   இதனை செய்ய வேண்டும்  என்று எதிர்பார்க்கின்றோம். சர்வதேச மட்டத்தில் பரவியுள்ள தமிழ் இனவாத பிரிவினைவாத புலிகளின் வேர்களையும் கிளைகளையும் பிடுங்கி எறியவேண் டும்.
மேலும் சுமார் 10 ஆயிரம் முன்னாள் புலி போராளிகளுக்கு தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவருகின்றது. அவர்களை விரைவாகவோ உடனடியாகவோ விடுதலை செய்யக்கூடாது. அவ்வாறு விரைவில் விடுதலை செய்வது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அவர்க ளுக்கு நீண்டகாலம் புனர்வாழ்வு அளிக்கப் படவேண்டும்.   அவர்களில் கைது செய்யப்பட்டவர்களும் இருக்கின்றனர். சரணடைந்தவர்களும் உள்ளனர்.
மேலும் முன்னாள் புலி போராளிகளை விரைவில் விடுவிப்பதானது பயங்கரவாதம் மீண்டும் மீளிணையப்படுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தும். புலிகளின் ஆயுத கிடங்குகள் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன. எனவே இது தொடர்பில் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள் 30 வருடங்கள் ஆயுதம் ஏந்தியவர்கள். எனவே நீண்டகால புனர்வாழ்வு அவசியமாகும்.  எனவே முன்னாள் போராளிகளை விரைவாக விடுவிக்கவேண்டும் என்று   கோருவதானது யதார்த்தமற்ற ஒரு விடயமாகும்.
விசேடமாக 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.  உறுப்பினர்களுக்கு சுமார் ஏழு வருடங்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. அவ்வாறு நீண்டகால புனர்வாழ்வுக்கு பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கேள்வி: கே.பி.யை எவ்வாறு நம்புகின்றீர்கள்?
பதில்: ( அனுர பிரதீப  ஹெல உறுமயவின் கல்வி செயலாளர்)
கே.பி. தற்போது அரசாங்கத்தின் இராணுவ பொறுப்பில் இருக்கின்றார். மேலும் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் தன்னை ஒரு வீரராக வெளிக்காட்டவில்லை. அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பையே வழங்கி வருகின்றார்.    மேலும் பயன்மிக்க தகவல்களை வெளியிட்டு வருகின்றார். அண்மையில் புலம் பெயர் மக்களின் 12 பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளனர். இது கே.பி. யின் ஊடாகவே சாத்தியமாகியது.
கேள்வி: புலிகளின் சொத்து தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க முடியாது என்று அரசாங்கத்தின் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனரே?

பதில்:
தற்போதைய நிலைமையில் புலிகளின் சொத்துக்களை பெறுவது பிரதான விடயமல்ல. அவர்களின் சர்வதேச வலையமைப்பை அழிக்கவேண்டும்.   அதுவே தற்போது மேற்கொள்ளப்படவேண்டிய பிர தான விடயமாகும்.

கருத்துகள் இல்லை: