வெள்ளி, 16 செப்டம்பர், 2022

திமுக முப்பெரும் விழாவில் . கலைஞரின் 4041 கடிதங்கள் நூல் தொகுப்பு வெளியீடு

மின்னம்பலம்  : பிரதமர் மோடிக்கே பிடித்தவர் நம் முதல்வர் ஸ்டாலின்” என திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் இன்று (செப்டம்பர் 15) நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திமுக நிர்வாகிகள் என தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விழாவில் ’கலைஞரின் கடிதங்கள்’ மற்றும் ‘திராவிட மாடல் ஆட்சி’ ஆகிய தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சிறப்பாக கட்சி பணியாற்றியவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும், கழக முன்னோடிகளுக்கு விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பேசினர்.
இவ்விழாவில் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “இந்த விழாவில் நிறைந்திருக்கிற வீரர்களைப் பார்க்கும்போது திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்ற தைரியம்தான் எழுந்திருக்கிறது. இந்த விழாவில் இயக்கத்துக்காகப் பாடுபட்டவர்கள், உழைத்தவர்கள், சிறை சென்றவர்கள், சித்திரவதைபட்டவர்கள், ரத்தம் சிந்தியவர்கள் இவர்களைக் கெளரவிப்பதே திமுகவின் தனி கெளரவம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைத்து 1 ஆண்டு சில மாதங்களே ஆனாலும், எவரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக ஆட்சி நடத்திக்கொண்டு வருகிறார். ஒரு தலைவர் கட்சிக்கும் தலைவராக இருந்து, ஆட்சிக்கும் தலைவராக இருந்து நடத்துவது என்பது சாதாரணமானது அல்ல. அது, கலைஞருக்கே கைவந்த கலை. அந்தக் கலையை இந்த இளம்பிராயத்தில் வந்த தலைவர் கடைப்பிடிப்பது என்பது ஆச்சர்யம்.

நீங்கள் இந்தியாவினுடைய அரசியலைப் பாருங்கள். மராட்டியத்தில் என்ன நடந்தது? ஆட்சியில் கவனம் செலுத்தினார்கள். கட்சியைக் கோட்டைவிட்டார்கள். அதன் விளைவு, ஆட்சி கவிழ்ந்துபோனது. பீகாரிலும் அதே நிலைமை. எல்லா மாநிலங்களிலும் பாருங்கள். கட்சியையும் ஆட்சியையும் ஒருங்கே நடத்துகிறவர்களுக்கு சில திறமைகள் வேண்டும். அந்த திறமை, நம்முடைய முதல்வர் இடத்திலே இருக்கிற காரணத்தால்தான் அகில இந்தியாவே புகழ்கின்றது.

அறிஞர் அண்ணா ராஜ்ய சபாவுக்குச் சென்றபிறகு அவரது அறிவாற்றலைக் கண்டு அத்தனை பேரும் வாய்பிளந்து நின்றார்கள். அதற்குப்பின் கலைஞர் வந்தார். அவர் முதன்முறையாக முதல்வராகி டெல்லிக்குச் சென்றபோது அவரை சாதாரணமாக நினைத்தார்கள். அவர், அப்போதைய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயை அவர் சந்திக்கச் சென்றபோது 10 நிமிடம் காலதாமதமாகிவிட்டது.

அதற்காக மொரார்ஜி கலைஞரைப் பார்த்து, ‘உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பதற்கு நான் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரனா?” எனக் கேட்டிருக்கிறார். அதற்கு கலைஞர், “அந்த நாற்காலியில் அமருவதற்குக்கூட எனக்கு மனமில்லை. இருந்தாலும், நெருப்பின்மீது உட்காருவதுபோல் அந்த நாற்காலியின்மீது உட்கார்ந்தேன்” எனச் சொன்னாராம்.

அதன்பிறகு மொரார்ஜி கலைஞரிடம், “எதற்காக வந்திருக்கிறீர்கள்” என்றாராம். அதற்கு கலைஞர், ”நீங்கள் நிதியமைச்சர். ஆகையால் உங்களிடம் நிதி கேட்க வந்திருக்கிறேன்” என்றாராம். அதற்கு மொரார்ஜி, “நிதி எங்கே கொட்டிக் கிடக்கிறது? என் வீட்டுத் தோட்டத்தில் பணம் காய்க்கும் மரமா இருக்கிறது? உனக்கு அறுத்துக் கொடுப்பதற்கு?” எனச் சாடியிருக்கிறார்.

அதுவரை பொறுமை காத்த கலைஞர், “பணம் காய்க்கும் மரமே உலகத்தில் கிடையாது. பின்னர், எப்படியய்யா உன் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும்” என கேட்டபோதுதான், இவரிடத்தில் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நினைத்தாராம் மொரார்ஜி. அப்படிப்பட்ட கலைஞர்தான் பின்னாளில் பிரதமரை, குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு காரணமாக இருந்தார் என்பதை இந்தியாவே ஒப்புக்கொண்டது.

அதுபோல இன்றைக்கு இருக்கிற முதலமைச்சர்களிலேயே ‘முதல்’ அமைச்சராக இருக்கக்கூடியவர் ஸ்டாலின்தான் என்பதை அகில இந்தியாவே ஒப்புக்கொண்டிருக்கிறது. திமுகவுக்கும் பிஜேபிக்கும் ஆயிரம் வேற்றுமைகள் உண்டு. ஆனாலும் பிரதமர் மோடி, நம் முதல்வரைப் பாராட்டுவார். ’கட்சி ஆட்சி இருக்கட்டும் ஸ்டாலின். உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது. நீங்கள் என் வீட்டில் தங்குங்கள்’ என பிரதமர் சொல்கிற அளவுக்கு நம் முதல்வரின் கண்ணியம், பண்பாடு தலைதூக்கி நிற்கிறது.

அதனால்தான் திமுக ஆட்சியை எந்தக் கொம்பனாலும் தவறு சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிவிக்கிறார். நாளைக்கு என்ன திட்டம் ஆரம்பிப்பாரோ யாருக்கும் தெரியாது. ஆக ஆட்சியையும் செம்மையாக நடத்துகிறார். கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இன்னும் 60 ஆண்டுக்காலத்துக்கு இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது” என்றார் துரைமுருகன்.

ஜெ.பிரகாஷ்

கருத்துகள் இல்லை: