வெள்ளி, 16 செப்டம்பர், 2022

சவுக்கு சங்கர்! "பேசிய கருத்துக்காக ஒருவரைத் தண்டிக்க முடியாது - நீதிபதி ஹரி பரந்தாமன் பேட்டி

முரளிதரன் காசி விஸ்வநாதன்  -      பிபிசி தமிழ் :  
சவுக்கு சங்கர் நீதிமன்றம் குறித்தும் நீதிபதிகள் குறித்தும் வெளிப்படுத்திய கருத்துகளுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது. ஆனால், ஒருவர் பேசுவதற்காக சிறை தண்டனை விதிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறார், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது.
ென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒருவரை சந்தித்த பிறகுதான் யூடியூபர் மாரிதாசுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்ததாக அவர் ட்விட்டரில் பதிவிட்ட இடுகையை மேற்கோள்காட்டி, ஜூலை மாதம் மதுரை உயர் நீதிமன்ற கிளை அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், "இந்திய அரசியல் சாசனம் எழுதப்பட்ட காலத்தில் இருந்த நிலை வேறு. தற்போது உள்ள நிலை வேறு. ஆகவே, பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து சொல்லும் உரிமைக்காக தண்டனை கொடுப்பதை ஒழிக்க வேண்டும். நீதிமன்றம் ஒரு உத்தரவை அரசாங்க அதிகாரிக்கு இடுகிறது. அதனை அவர் அமல்படுத்தவில்லையென்றால், அதற்காக நடவடிக்கை எடுப்பதென்பது வேறு. நீதிமன்றம் குறித்துப் பேசியதற்காக நடவடிக்கை எடுப்பதென்பது வேறு.

சவுக்கு சங்கரின் பேச்சில் உடன்பாடு இல்லாவிட்டால் கூட நான் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மாட்டேன். சென்னை உயர் நீதிமன்றம் குறித்துப் பேசிய ஹெச். ராஜா மீது கூட நடவடிக்கை எடுக்கக்கூடாது.

இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டபோது 'நீதிமன்ற அவமதிப்பு' ஒரு குற்றமாக இருந்தது. இன்று வளர்ந்த நாடுகள் அனைத்திலும் அந்தப் பிரிவு நீக்கப்பட்டு விட்டது. அதற்காக ஒருவர் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? கூடாது. அப்படி ஒரு தனி நபரைப் பற்றி அவதூறாகப் பேசினால் அவர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடரலாம்.

தொடர்ந்து ஒரு பத்திரிகை இது போன்ற செய்திகளை வெளியிட்டால், அந்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிடக்கூடாது என ஆணையிடலாம். மாறாக ஒருவர் பேசியதற்காக சிறையில் அடைக்க உத்தரவிடலாமா என்பதுதான் இப்போது உள்ள கேள்வி.

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் தண்டிக்கும் அதிகாரம் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(2)ல் இருந்து கிடைக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1) குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளையும் 19(1A) என்பது பேச்சுரிமை, எழுத்துரிமை போன்றவற்றைப் பற்றியும் பேசுகிறது. இதில் இருக்க வேண்டிய கட்டுப்பாடுகளை (Reasonable restrictions) பற்றி அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(2) பேசுகிறது.

இந்தப் பிரிவைப் பொறுத்தவரை, நீதிமன்ற மாண்பைக் குலைக்கும் வகையில் பேசுதல், பொது ஒழுங்கைக் குலைத்தல், நட்பு நாடுகளுடனான உறவை சீர்குலைக்கும் வகையில் பேசுதல், தேச ஒற்றுமைக்கு எதிராகப் பேசுதல் போன்ற ஏழெட்டு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாமே நீக்கப்பட வேண்டும். குறிப்பாக நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையில் பேசுவதற்கு தண்டிப்பது என்பதை கண்டிப்பது என்பதை நீக்க வேண்டும். அதுதான் எல்லாவற்றுக்கும் ஊற்றுக்கண்.

இந்தப் பிரிவின் அடிப்படையில்தான் பெரியார், பிரசாந்த் பூஷண், அருந்ததி ராய் ஆகியோர் தண்டிக்கப்பட்டார்கள். இதில் பெரியாரைத் தவிர்த்த அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள். பெரியார் சென்னை உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.

பெரியார் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். மலையப்பன் என்பவர் தொடர்பான வழக்கு அது. இந்த வழக்கு நடக்கும்போது பெரியாருக்கு கிட்டத்தட்ட எழுபது வயதிற்கு மேல் ஆகிவிட்டது. இதில் குறிப்பிடப்படும் மலையப்பன் என்பவர் ஒரு மாவட்ட ஆட்சியர். "எனக்கு மலையப்பன் யார் என்பது தெரியாது. அவர் கறுப்பா, சிவப்பா என்பது தெரியாது. ஆனால், மலையப்பன் என்பவர் ஒரு சூத்திரன் என்பது தெரியும். அவர் நிலம் தொடர்பாக ஒரு உத்தரவிடுகிறார்.

பெரியார் தண்டிக்கப்பட்டார்
அந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால், அதனை ரத்து செய்துவிட்டு, மலையப்பனுக்கு இனிமேல் பதவி உயர்வு தரக்கூடாது என எழுதுகிறீர்கள். ஏன் எழுதுகிறீர்கள் என்றால், அவர் சூத்திரன், நீங்கள் பிராமணர்" என்று எழுதினார். இதற்காக பெரியார் தண்டிக்கப்பட்டார்.

அடுத்ததாக ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் வழக்கு. அவர் முதலமைச்சராக இருக்கும்போது நீதிமன்ற அவமதிப்பிற்காக தண்டிக்கப்பட்டார்.

"இது வர்க்கரீதியான சமூகம். அரசாங்கத்தின் எல்லா பிரிவுகளுமே சுரண்டும் வர்க்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனவே தவிர, சுரண்டப்படும் வர்க்கத்திற்கு ஆதரவாக இல்லை. நீதித் துறையும் இதற்கு விலக்கல்ல என்கிறார் கார்ல் மார்க்ஸ்" என்று 1967ல் ஒரு செய்தியாளர் சந்திப்பில் சொன்னார் ஈ.எம்.எஸ். இதற்கு கேரள உயர் நீதி மன்றம் தண்டனை அளித்தது. அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஈ.எம்.எஸ். இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார். அங்கு அவருக்கு அபராதம் குறைக்கப்பட்டது. ஆனால், தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதயத்துல்லா, ஈ.எம்.எஸ்ஸிற்கு சட்டம் தெரியவில்லை என்று கூறியிருக்கலாம். மாறாக, அவர் ஈ.எம்.எஸ். கார்ல் மார்க்ஸை சரியாகப் படிக்கவில்லை என்றார்.

பிரசாந்த் பூஷண் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் யார், யார் ஊழல்வாதி என எழுதி அதனை சீலிட்ட கவரில் நீதிமன்றத்திற்குக் கொடுத்தார். இப்போதுவரை அதன் விவரத்தை அவர் வெளியிடவில்லை. இருந்தபோதும் நீதிமன்ற அவமதிப்பிற்காக அவர் தண்டிக்கப்பட்டார். இத்தனைக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வர்மா, முகர்ஜி போன்றவர்களே, அங்கு நிலவும் ஊழல் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் கருத்துகள் ஏகத்திற்கு வந்து குவிகின்றன. அதில் சில கருத்துகளுக்காக இப்படி தண்டிப்பதென்பதை ஏற்க முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்பே மேலை நாடுகள் இந்தப் பிரிவுகளை நீக்கிவிட்டன. இப்போதாவது நாம் அதைச் செய்ய வேண்டும். இதற்கான நல்ல வாய்ப்பை உச்ச நீதிமன்றம் தவறவிட்டுவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவால், சுப்பிரமணியன் சுவாமி, விஜயகாந்த் ஆகியோர் கிரிமினல் அவதூறு என்ற பிரிவை நீக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அரசியல்சாசன ரீதியாக அது சரியா என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த வழக்கை தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது. ஆனால், அவதூறான வார்த்தைகள் மனதைத் துன்புறுத்தக்கூடியவை என்று கூறி அந்த பிரிவை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

இப்போது பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை என்ன வேண்டுமானாலும் சொல்ல முடிகிறது. அதிகபட்சம், அவர்கள் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்வார்கள். ஆனால், சிறைக்கு அனுப்ப மாட்டார்கள். ஆனால், கிரிமினல் அவதூறு வழக்குத் தொடர்ந்தால், சிறைக்கு அனுப்ப முடியும். என்னைப் பொறுத்தவரை, கிரிமினல் அவமதிப்பு பிரிவை நீக்கிவிட்டால், கிரிமினல் அவதூறு பிரிவும் நீங்கிவிடும்.

நீதிமன்றத்திற்குள் சென்று ஒரு நீதிபதியைச் செயல்பட விடாமல் தடுத்தால், அது தண்டனைக்குரிய குற்றம். ஒரு அரசு அதிகாரியைச் செயல்படவிடாமல் தடுத்த குற்றத்தின் கீழ் அந்த செயல்பாடு வரும். நீதியரசர் மார்கண்டேய கட்ஜு முன்பாக ஒரு வழக்கு வந்தது.

அப்போது வாதாடிய வழக்கறிஞர், "இந்த வழக்கை நீங்கள் விசாரிக்கக்கூடாது. வளர்ச்சி என்ற போர்வையில் நாட்டின் வளங்கள் அழிக்கப்படுவது குறித்து உங்களுக்குக் கவலையில்லை. இதற்கு மேல் நான் ஏதாவது குறிப்பிட்டால் நீதின்ற அவமதிப்பு வழக்கு என்மேல் பாயலாம்" என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த கட்ஜு, "நீங்கள் என் மேஜைக்கு அருகில் வந்து கட்டுகளைப் பறிக்காதவரை, உங்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க மாட்டேன். நீங்கள் வாதாடுங்கள்" என்று கூறினார்.

ஆகவே, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பது அல்லது நேரடியாக வந்து நீதிமன்ற நடவடிக்கையைத் தடுப்பது ஆகியவற்றுக்குத்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுக்க வேண்டும். கருத்தைத் தெரிவித்ததற்காக ஒருவரைத் தண்டிப்பது என்பது கூடாது என்கிறார் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்.

கருத்துகள் இல்லை: