ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணம் இரண்டு லட்சம் விருந்தினர்... மட்டன் பிரியாணி, சிக்கன் கறி சுதாகரன் திருமணத்தை மிஞ்சிய தடபுடல்

 Karthikeyan Fastura  :  இரண்டு லட்சம் பேர்கள் கலந்துகொண்டு  அத்தனை பேருக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் கறி, அசைவத்தில் நாலு வகை பொரியல் என்று கணக்குப் பார்க்காமல் விருந்து உண்ட கல்யாண வைபோகத்தை நீங்கள் பார்த்ததுண்டா?
வந்திருந்த அத்தனை பேருக்கும் தாம்பூலம் பை, கரும்பு, ஸ்வீட் பீடா என்று பார்த்ததுண்டா?!  
500 பேர் கலந்து கொள்ளும் கல்யாணத்தில் கூட இத்தனை துல்லியமான ஏற்பாடுகளை பார்க்க முடியாது. பல சொதப்பல்களை காண நேரிடும். ஆனால் லட்சக்கணக்கில் மக்கள் வந்து உணவு உண்டாலும் யாரும் காத்திருக்கவில்லை. அந்த அளவிற்கு மிக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு பார்த்ததுண்டா?!


எங்கள் தொகுதி எம்எல்ஏ, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களின் புதல்வருக்கு நேற்று முன்தினம் மதுரையில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த இடம் எங்கள் வீட்டிலிருந்து அறநூறு மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பெரும் பொட்டல். மாடியில் இருந்து பார்த்தால் தெரியும். 10 நாட்களுக்கு முன்பே எங்களுக்கும் பத்திரிக்கை அழைப்பு வந்தது. கடந்த ஒரு மாதமாகவே அந்த பொட்டலில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை பார்த்து வந்தாலும் திருமணம் நடக்கும் காலை வரை அங்கு செல்ல வேண்டும் என்ற உந்துதல் இல்லை. ஆனால் அப்பா கட்சிக்காரர் என்பதால் முன்பே சென்று வந்து ரஞ்சிக்கு போன் செய்து அவ்வளவு அருமையாக
 இருக்கிறது நீங்களும் சென்று வாருங்கள் என்று தூண்டிவிட்டார்.
எனக்கும் இது போன்ற ஒரு அமைச்சர் வீட்டு திருமணத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு முன்னபோதும் கிட்டியதில்லை. சரி சென்று பார்ப்போம் என்று நானும் ரஞ்சியும் ஆபீஸ்ல இருந்து கிளம்பி சென்றோம்.
கார் நிறுத்தும் இடத்திலிருந்து, பந்தி பரிமாறப்படும் இடத்திலிருந்து என்று எங்கும் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவே இல்லை. யாரும் எங்களை தடுத்து நிறுத்தவில்லை. பந்தியில் அமர்ந்தோம். அசந்து போகும் அளவிற்கு அத்தனை உபச்சாரம், உணவு வகைகள் என்று மிகச் சிறப்பாக இருந்தது. தரமான ஏற்பாடு.
கடைசிப் பந்து முடியும்போது அண்டாவில் இருந்த பிரியாணி பலர் பிளாஸ்டிக் பையில் அள்ளிக் கொண்டு சென்றதை பார்த்தேன். ஆனால் அங்கு யாரும் எதுவும் கேட்கவில்லை.
உணவருந்திய பின்பு மணமக்கள் இருந்த மேடையை நோக்கி சென்றோம். மணமக்கள் கிளம்பத் தயாராக இருந்த நேரம். அருகில் நெருங்க முடியவில்லை. அமைச்சருக்கு வாழ்த்துக்கள்
 சொல்லலாம் என்று நெருங்கி செல்ல முயற்சி செய்தோம். ஓரளவுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிந்தது அவ்வளவே
மணமக்கள் மேடை அந்த அரங்கம் குறைந்தது 50,000 பேர் உட்காரக்கூடிய அளவில் மிக பிரம்மாண்டமாக இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி மாட்டுத்தாவணி அருகே நடந்த போது சென்று வந்தோம். அந்தப் பொருள் காட்சியை விட மூன்று மடங்கு பெரியதாக இருந்தது.
கல்யாணம் போல் தெரியவில்லை. கட்சி மாநாடு போல தெரிந்தது. இதன் மூலம் அமைச்சர் மூர்த்தி தன்னால் ஒரு பெரும் கட்சி மாநாட்டினை பொறுப்பெடுத்து நடத்திக் காட்டும் அளவிற்கு வலிமை உண்டு என்று நிரூபித்திருக்கிறார்.
எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே செல்லும்போது மறக்காமல் மொய் எழுதும் பகுதிக்கு சென்று எங்கள் இருவர் பெயரையும் குறிப்பிட்டு மொய் எழுத்து விட்டு கிளம்பினோம். அங்கும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மொய் எழுத மட்டும் 20 பேர் லேப்டாப் பிரிண்டர் என்று இருந்தனர். மொய் எழுதிய பிறகு அதற்கான ரசீது கொடுத்தார்கள். இதுவும் எனக்கு புதிது.
மொத்தத்தில் ஒரு வீட்டு விசேஷத்தை எவ்வளவு கூட்டம் வந்தாலும் எப்படி எந்த குறையும் இல்லாமல் சிறப்பாக நடத்த முடியும் என்ற புரிதலை கற்றுக்கொண்டு வந்தோம்.
வீட்டிற்கு செல்ல எங்கள் தெருவில் காலடி எடுத்து வைக்கும் போது சாலை என்பது இல்லாமல் சேறும் சகதியும் குண்டும் குழியுமாக இருந்தது. அதைக் கடந்து வீட்டுக்குள் நுழையும் போது திருமணத்தின் மிகப்பிரமாண்டமான ஏற்பாடும் அதன் வியப்பும் வழிந்து விட்டது. எங்கள் பகுதி உருவான காலத்தில் இருந்து இந்த அங்குச்சாமி தெரு மண் சாலையைத் தவிர வேறு எதையும் பார்த்ததில்லை. அமைச்சர் எங்கள் பகுதியையும் கவனித்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

கருத்துகள் இல்லை: