சனி, 17 செப்டம்பர், 2022

ரோஷனாரா பேகம் - குடியிருந்த கோயில் குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடலை எழுதிய ரோஷனாரா பேகம் யார்?


 vikatan.com  : `குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடலை எழுதிய ரோஷனாரா பேகம் யார்?
விகடன் டீம்
குடியிருந்த கோயில்' என்றாலே ரசிகர்கள் மனத்தில் `குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடல் சட்டென நிழலாடும்; கூடவே வெண்ணிற சேலையில் நளினமாக ஆடும் ஜெயலலிதாவும், அலட்டலில்லாத காதலை வெளிப்படுத்தும் எம்.ஜி.ஆரும் மனக்கண் முன்வந்து போவார்கள். இரு முன்னாள் முதல்வர்கள் நடித்த அந்தப் பாடலை எழுதியவர், நம் முதல் பெண் ரோஷனாரா பேகம்!
இஸ்லாமியப் பெண்கள் திரைத்துறைக்கு வருவது இன்றுகூட பெரும் சிக்கலாகத்தான் உள்ளது. ஆனால், 1968-ம் ஆண்டே இஸ்லாமியப் பெண் ரோஷனாரா பேகம் திரைப்பாடல் எழுதியது பெரும் ஆச்சர்யம்தான். துரதிர்ஷ்டவசமாக அவர் எழுதிய `குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடல் அவரின் முதலும் இறுதியுமான திரைப்பாடலாக அமைந்துவிட்டது. காலத்தின் அடுக்குகளில் எங்கோ மறைந்துபோனார் ரோஷனாரா.
ஆனால், அவரை நினைவில்வைத்திருந்து தேடிக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் டி.விஜயராஜ். சில ஆண்டுகளுக்கு முன் பாடகர் டி.எம்.சௌந்தர ராஜன் பற்றிய `இமயத்துடன்' என்ற பிரமாண்ட தொலைக்காட்சித் தொடரைத் தயாரித்த விஜயராஜ், டி.எம்.எஸ் மற்றும் ரோஷனாரா இருவரையும் பேட்டி கண்டிருக்கிறார். இசை உரிமை சிக்கல்கள் காரணமாக அவரது தொலைக்காட்சித் தொடர் வெளியாவதில் தாமதமாகியிருக்கிறது. பேட்டி ஒன்றில் ரோஷனாரா குறித்து பேசியிருந்த விஜயராஜ், அவரை பெரும் சிரமத்துக்கிடையே தேடிக் கண்டுபிடித்ததை இரு வரிகளில் சொல்லியிருந்தார். இன்றும் வெளிநபர்கள் யாரையும் சந்திக்க ஆர்வமின்றி மறுக்கிறார் ரோஷனாரா.

    கோவையில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த மோட்டார் நிறுவனம் `ஷைனிங் ஸ்டார்' மோட்டார்ஸ். அதன் உரிமையாளர் ஷேக் முஸ்தபாவின் மகள் ரோஷனாரா. இவரின் தாய் பேகம், பல ஆண்டுகளாக மருத்துவப் பணியாற்றியவர்.

கோவை செயின்ட் ஃபிரான்சிஸ் கான்வென்டில் ரோஷனாரா எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தார். நல்ல குரல் வளம்கொண்டிருந்த இவர் திரைப் பாடல்களை அருமையாகப் பாடக்கூடியவர். கைலாசம் என்பவரிடம் முறைப்படி இசை கற்றிருந்தார். பள்ளி நிகழ்ச்சிகளில் பாடிப் பரிசுகள் வென்றிருக்கிறார். எழுத்துத் திறமையும் கைவர, பாடல்கள் எழுதவும் தொடங்கினார். அவரே எழுதி, பாடியிருக்கும் இசைத்தட்டுகள் சில வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்ல... இவர் கதை எழுதும் ஆர்வமும் கொண்டிருந்தார்.

மகளின் திறமையை உணர்ந்திருந்த தந்தை ஷேக் முஸ்தபா, கலைத்துறையினருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தவர். கோவையிலுள்ள அவர்கள் வீட்டுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வந்து செல்வதுண்டு. விஸ்வநாதனிடம் தன் மகளின் பாடல்கள் பற்றி ஷேக் முஸ்தபா சொல்ல, ரோஷனாராவின் பாடல்களை வாசித்து, அவ்வப்போது எம்.எஸ்.விஸ்வநாதன் திருத்தங்கள் சொல்லியிருக்கிறார். ரோஷனாவை எழுதத் தூண்டியவர்களில் எம்.எஸ்.வி-க்குப் பெரும் பங்குண்டு.

    நிவேதிதா லூயிஸ் எழுதும் அவள் விகடன் தொடரில் முழுமையாக வாசிக்க > முதல் இஸ்லாமியப் பெண் தமிழ்த் திரைப் பாடலாசிரியர் - ரோஷனாரா பேகம் https://bit.ly/2BgF2Ju

விகடனின் அதிரடி ஆஃபர்!

தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'குடியிருந்த கோயில்' படத்தின் தயாரிப்பாளரான வேலுமணியிடம், ரோஷனாராவுக்கு வாய்ப்பு வழங்கும்படி எம்.எஸ்.வி. பலமாக சிபாரிசு செய்தார். வேலுமணியின் அழைப்பின்பேரில், பாடல் எழுத ரோஷனாரா சென்னை வந்து சேர்ந்தார். வேலுமணி, படத்தின் இயக்குநர் கே.சங்கர் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. முன்னிலையில் பாடல் எழுத வேண்டிய காட்சி பற்றி ரோஷனாராவிடம் விளக்கப்பட்டது.
`குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடலை எழுதிய ரோஷனாரா பேகம் யார்?

பாடலின் பல்லவியை ரோஷனாரா அங்கேயே எழுதிவிட்டார். `குங்குமப் பொட்டின் மங்கலம், நெஞ்சமிரண்டின் சங்கமம்' என்ற பல்லவியைக் கேட்ட படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சி. காரணம், படத்துக்கு அவர்கள் முதலில் சூட்டியிருந்த பெயர், `சங்கமம்'. வேடிக்கை என்னவென்றால், அந்தப் பெயர் ரோஷனாராவிடம் தெரிவிக்கப்படவில்லை. படத்தின் பெயரை பாடலின் இரண்டாவது அடியில் அறியாமலேயே ரோஷனாரா எழுதியிருந்தது அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நான்கு நாட்கள் சென்னையில் தங்கி பாட்டெழுதித் தந்துவிட்டு ரோஷனாரா கோவை திரும்பிவிட்டார்.

என்ன காரணத்தாலோ அவர் எழுதிய பாடல் மாற்றப்பட்டு, வேறு பாடல் எழுதி, படமாக்கப்பட்டது. ஆனால், வேலுமணி தலையிட்டு, கட்டாயம் ரோஷனாரா எழுதிய பாடலே படத்தில் இடம்பெற வேண்டும் என்று சொன்ன பிறகு, மீண்டும் 'குங்குமப் பொட்டின்' பாடல் படமாக்கப்பட்டது. இந்தத் தகவல் மறுபடி சென்னைக்கு வந்தபோதுதான் வேலுமணி மூலம் ரோஷனாராவுக்குத் தெரியவந்தது.

'குடியிருந்த கோயில்' வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அன்றைய காதல் ஜோடிகளின் நெஞ்சில் 'குங்குமப் பொட்டின்' பாடலும், அதை எழுதிய ரோஷனாராவும் குடிகொண்டுவிட்டார்கள்.

கருத்துகள் இல்லை: