புதன், 14 செப்டம்பர், 2022

ஸ்டாலின், கேசிஆர், மம்தா இல்லை.. சரத் பவார்தான் பாஜகவுக்கு எதிரான ஒரே முகமாம்

tamil.oneindia.com  -  Vigneshkumar  :  மும்பை: மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகள் இருந்த போதிலும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது.
அடுத்த மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டில் தான் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தாலும் கூட இப்போதே அரசியல் பரபரப்பு பற்றிக் கொண்டது.
காங்கிரஸ் கட்சி ஒரு பக்கம் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ஒற்றுமை யாத்திரை செல்கிறது.
ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் இந்த பயணம் 150 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கிறது.


எதிர்க்கட்சிகள்
பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதற்காகப் பல அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதற்காக தெலங்கானா முதல்வர் கேசிஆர், சமீபத்தில் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் இறங்கி உள்ளனர்.

கருத்துவேறுபாடு
இருந்த போதிலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்னும் கூட ஒரே அணியில் வரவில்லை. எதிர்க்கட்சிகள் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. குடியரசு தேர்தல் மற்றும் துணை குடியரசு தேர்தலில் கூட அனைத்து கட்சிகளும் இணைந்து பொதுவான வேட்பாளரை முன்னிறுத்த முடியாமல் போனது இதற்கு ஒரு சான்றாகும்.

தேசியவாத காங்கிரஸ்
இந்தச் சூழலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முகமாக மூத்த அரசியல்வாதியும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் இருப்பார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் சமீபத்தில் நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எட்டாவது தேசிய மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர்கள் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தனர். இது 2024 தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளுக்கு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கேசிஆர், ஸ்டாலின், மம்தா
அந்த மாநாட்டில் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க சரத் பவார் என்ற ஒற்றை நபரால் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார். இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரபுல் படேல் கூறுகையில், "தெலங்கானா கே.சி.ஆர், தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் சீதாராம் யெச்சூரி, ஓம் பிரகாஷ் சவுதாலா, அவ்வளவு ஏன் காங்கிரஸ் தலைவர்கள் கூட சரத் பவாரை தான் பார்க்க வருகிறார்கள். ஏனென்றால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு நபராகவே சரத் பவாரை இவர்கள் பார்க்கிறார்கள்" என்றார்.

சரத் பவார் தான் ஒரே தீர்வு
கேரள மாநிலத் தலைவர் பிசி சாக்கோ பேசுகையில், "மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார், அங்கு 21 அரசியல் கட்சிகள் கூடியிருந்தன. அந்த கூட்டத்தில், அனைத்து அரசியல் தலைவர்களும் பரிந்துரைத்த ஒரே பெயர் சரத் பவார் மட்டுமே, ஏனெனில் அவர் ஒருவரால் மட்டுமே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியும்.

காங்கிரஸ்
பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸின் பழைய காலம் எல்லாம் முடிந்துவிட்டது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இப்படி இருக்கும் அவர்கள் எப்படி நாட்டை வழிநடத்துவார்கள்" என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இந்தக் கூட்டத்தில் பேசிய சரத் பவார், விவசாயிகள், மத நல்லிணக்கம், பணவீக்கம், பெண்களின் பாதுகாப்பு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினை குறித்து மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனத் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார்.

முக்கியம்
தேர்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகள் இருந்தாலும் கூட இப்போதுள்ள பாஜக வீழ்த்த பலமான கூட்டணி ஒன்று தேவை. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் ஒருங்கிணைப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: