சனி, 17 செப்டம்பர், 2022

சவுக்கு சங்கருக்காக பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகிறார்

Indian Court Hands Down Symbolic Sentence for Outspoken Lawyer - The New  York Times

மின்னம்பலம் : சவுக்கு சங்கருக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் பிரசாந்த் பூஷன்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யு ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மதுரை உயர் நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 15)  ஆறு மாத கால சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் உடனடியாக அடைக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


சவுக்கு சங்கர் தொடர்ந்து தான் பங்கு கொள்ளும் யு ட்யூப்  பேட்டிகளில் நீதிபதிகள் பற்றியும் நீதிமன்றங்கள் பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார். இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றம் தானாகவே முன் வந்து சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தது. இந்த விசாரணையில் சவுக்கு சங்கர் தனக்காக தானே வாதாடினார். உயர் நீதிமன்ற பதிவாளருக்காக மூத்த வழக்கறிஞர் சோமயாஜுலு வாதாடினார்.

ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு (சஸ்பெண்ட்) சவுக்கு சங்கர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதிகள் இதை ஏற்கவில்லை.  குற்றவியல் நடைமுறைச் சட்டம் 389 பிரிவின்படி,  மூன்று ஆண்டு சிறை தண்டனையோ அல்லது அதற்கு குறைவான சிறை தண்டனையோ விதிக்கப்பட்டால்…. தண்டனை விதிக்கப்பட்டவர் மேல் முறையீடு செய்ய திட்டமிருப்பின், விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு அனுமதிக்கிறது. ஆனால் மதுரை உயர் நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து சவுக்கு சங்கர் உடனடியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தத் தகவல் வெளியானவுடன் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன்,   “யு ட்யூபர் சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தீர்ப்பு நியாயமற்றது. இயற்கை நீதிக்கு எதிரானது” என்று தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு 2ஜி தொடர்பான சில ரகசிய டேப்புகளை அப்போது ஆம் ஆத்மி கட்சியில் இருந்த மூத்த வழக்கறிஞரான  பிரசாந்த் பூஷன் வாயிலாகத்தான் டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது வெளியிட்டார் சவுக்கு சங்கர். அந்த தொடர்பு இன்னும் இருவர் இடையிலும் நீடித்து வருகிறது.

நீதித்துறையில் ஊழல் குறித்து  பிரசாந்த் பூஷன் மீது தெரிவித்த கருத்துகளுக்காக அவர் மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து பின் அந்த வழக்கை உச்ச நீதிமன்றமே கைவிட்டது.

இந்த பின்னணியில் சவுக்கு சங்கரின் நலம் விரும்பியும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நிறைந்த அனுபவம் பெற்றவருமான பிரசாந்த் பூஷன், சவுக்கு சங்கருக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். தண்டனை விதித்த  மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சங்கர் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும், அதில் சவுக்கு சங்கருக்காக பிரசாந்த் பூஷன் வாதாட இருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

–வேந்தன்

கருத்துகள் இல்லை: