செவ்வாய், 9 ஏப்ரல், 2019

இதெல்லாம் எந்த ஊடகங்களிலும் வந்திருக்காது. இனிமேல் வரவும் வராது. ..தமிழரசு

Yuva Krishna :  கலைஞரின் மகன் மு.க.தமிழரசு அவர்களது மணிவிழா நேற்று கொண்டாடப்பட்டதாக உடன்பிறப்பு ஒருவரது ஸ்டேட்டஸில் வாசித்தேன். சில நினைவலைகள்
96ஆம் ஆண்டு தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அண்ணன் தமிழரசு அவர்களோடு வீடுவீடாக வாக்கு கேட்டுச் சென்றது நினைவுக்கு வருகிறது. அப்போது தேனாம்பேட்டையில் ஒரு நிறுவனத்தில் கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். அலுவலகம் முடிந்ததுமே கழகத்தின் தேர்தல் பணிகளுக்கு கிளம்பிவிடுவேன்.
தமிழரசு, முன்னாள் முதல்வரின் மகன் என்கிற பந்தா சற்றுமில்லாதவர். தொகுதி முழுக்க வீடுவீடாக நடந்துச் சென்றேதான் வாக்கு கேட்பார். அவருடன் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர்கள் மட்டும் உடன் செல்வோம். எந்தவித ஆர்ப்பாட்டமோ, ஆடம்பரமோ சற்றும் இருக்காது.
“ஆத்தா, கலைஞரோட மகன் வந்திருக்கேன். உதயசூரியனுக்கு மறக்காம ஓட்டு போடுங்க”
“தம்பி, என்னோட அண்ணன் இங்கே நிக்குறாப்புலே. மறக்காம உங்க ஓட்டை உதயசூரியனுக்கே போடுங்க”
என்று ஒவ்வொருவரிடமும் உறவுமுறை சொல்லியே வாக்கு கேட்டு, பிட்நோட்டீஸை அவரே வினியோகிப்பார்.

எல்டாம்ஸ் சாலையை ஒட்டியிருந்த சந்தில் ஒருமுறை வாக்கு கேட்டுக் கொண்டிருந்தோம்.
“அண்ணே அடுத்த வீடு பாமக தலைமையகம். தாண்டி போயிடுவோம்”
அப்பகுதியே வன்னிய தேனாம்பேட்டை என்றுதான் அந்நாளில் அழைக்கப்படும். காமராஜர் அரங்கம் எதிரில் வேளாள தேனாம்பேட்டை.
“இருக்கட்டும்பா. அங்கே இருக்கிறவங்களுக்கும் இங்கே ஓட்டு இருக்கில்லே? போடுறாங்களோ, போடலையோ... கவுரவம் பார்க்காம ஓட்டு கேட்கணும். அதுதான் வாக்காளனுக்கு நாம செய்யுற மரியாதை” என்றவாறே, அந்த சிறிய இல்லத்துக்குள் நுழைந்தார்.
திமுக கொடியோடு உள்ளே நுழைந்தவர்களை பார்த்து, அங்கிருந்த அலுவலர்கள் மிரண்டார்கள்.
“எங்கப்பாதான் கலைஞர். எங்க அண்ணன் ஸ்டாலின் இங்கே திமுக வேட்பாளரா நிற்கிறாரு. மறக்காம உதயசூரியனுக்கு ஓட்டு போட்டுருங்க” என்றுகூறி பிட்நோட்டிஸை கொடுத்தார். சட்டென்று சகஜமான அவர்கள் உடனடியாக கூல்டிரிங்க்ஸ் வாங்கிக்கொண்டு ஓடிவந்து உபசரிப்பை துவக்கினார்கள்.
எளிமையும், புன்னகையும்தான் மு.க.தமிழரசு அவர்களின் அடையாளம்.
----
கலைஞரின் குடும்ப வாரிசுகளிலேயே பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியிருந்தவர் இவர்தான். கலைஞர் முதல்வர் ஆனபிறகு, ”தமிழுக்கு ஏதாவது அரசு வேலை வழங்கக்கூடாதா?” என்று தயாளு அம்மாள் நச்சரித்துக் கொண்டே இருப்பாராம். “எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணச் சொல்லு. அப்படிதான் கவர்மெண்டு வேலையில் சேரமுடியும்” என்று கலைஞர் மறுத்துவிடுவாராம்.
கலைஞரை பார்க்க கோபாலபுரத்துக்கு வரும் திமுக பிரமுகர்களிடமெல்லாம், “தமிழுக்கு வேலை இல்லைன்னு சொல்லிட்டாரு. டூவீலர் சேல்ஸ் ஏஜென்ஸியாவது எடுத்துக் கொடுக்கச் சொல்லுப்பா. தொழில் செஞ்சி பிழைச்சிக்கட்டும்” என்று தயாளு அம்மாள் கேட்டுக்கொண்டே இருப்பாராம்.
----
கலைஞர் குடும்பத்திற்கு சற்று நெருக்கமான - ஆனால் நேரடி கட்சித்தொடர்பு இல்லாத - ஒருவர் சொன்ன தகவல் இது.
அவரது மகள் திருமணத்திற்கு கோபாலபுரம் சென்று அழைப்பிதழ் வைத்திருக்கிறார். அப்போது தமிழரசு, தனிக்குடித்தனம் போயிருக்கிறார் என்று தெரிந்து அவருக்கும் அழைப்பிதழ் வைக்க அவரது இல்லம் தேடி கோடம்பாக்கம் சென்றிருக்கிறார்.
கோடம்பாக்கத்தில் முகவரியை கண்டறிய முடியவில்லை. “இங்கே கலைஞரோட பையன் மு.க.தமிழரசு வீடு எது?” என்று எதிர்ப்பட்ட ஒவ்வொருவரிடமும் காரை நிறுத்தி விசாரித்திருக்கிறார். யாருக்குமே தெரியவில்லை.
அங்கிருந்த மாநகராட்சி விளையாட்டுத் திடலில் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்தபோது ஒரு பையன், “எனக்குத் தெரியும். வாங்க காட்டுறேன்” என்றுகூறி காரில் ஏறியிருக்கிறான்.
சந்து, பொந்தெல்லாம் கடந்து ஒரு சாதாரண வீட்டுக்கு முன்பாக கார் வந்து நின்றது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு அதுவரை அதுதான் கலைஞரின் மகன் வீடு என்றே தெரியாது. இத்தனைக்கும் அப்போது கலைஞர் முதல்வராகதான் இருந்தார்.
வழிகாட்டிய பையன், “எங்கப்பாதான் தமிழரசு. இதுதான் எங்க வீடு” என்று சொல்லிவிட்டு மீண்டும் கிரிக்கெட் ஆட ஓடிவிட்டானாம்.
இன்றைய தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவரான அருள்நிதிதான் அந்த பையன்.
----
இதெல்லாம் எந்த ஊடகங்களிலும் வந்திருக்காது. இனிமேல் வரவும் வராது. கலைஞர் குடும்பம் பற்றி நேர்மறையாக எதையாவது எழுதிவிட்டால் அது எப்படி ஊடகமாக இருக்கமுடியும்

கருத்துகள் இல்லை: