திங்கள், 8 ஏப்ரல், 2019

இலங்கை ஜனாதிபதி தேர்தல் .. நிறம் மாறும் வேட்பாளர்கள் ...

Jeevan Prasad : பொதுவாக ஜனாதிபதி அபேட்சகர்கள் யார் என்பது முன் கூடியே தெரியும். ஆனால் இப்போதைய நிலையில் அனைவரும் குடுமியை பிடித்துக் கொண்டு மயிரை புடுங்கும் நிலையே உள்ளது.
ஐதேகவிலும் ரணில் - சஜித் - கரு - சம்பிக்க என பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் எதிர்க் கட்சிகள் தடாலடி எதிர்ப்பு பிரச்சாரத்தில் இறங்க முடியாமல் இருப்பதற்காக ஐதேக , சரியான வேட்பாளரின் பெயரை வெளியிடவில்லை. ஐதேக , கடைசி நேரத்தில் தமது வேட்பாளர் பெயரை வெளியிடும். ரணில் தப்பினால் கரு என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது. கருவின் வயது மற்றும் அவரது நேர்மையான அரசியல் ஆகியவை குறித்து கட்சிக்குள் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. இன்னொரு விதத்தில் கரு , ரணிலை மேவியும் நடக்க மாட்டார். காலை வாரவும் மாட்டார்.
ரணில் , 2025 ம் ஆண்டு வரை அரசியலில் இருக்கப் போவதாக தெரிவித்திருந்தார். அவர் பிரதமராகவா அல்லது ஜனாதிபதியாகவா என அவர் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் கட்சித் தலைவராக மட்டுமல்ல நாட்டின் முடிவுகளை எடுப்பதை விரும்புவதாகவே உள்ளது. அவரது கடைசி அரசியல் அத்தியாயம் இதுவாகும். தான் வாழும் காலத்தில் நாட்டை செல்வச் செழிப்பான பூமியாக்க வேண்டுமென பல இடங்களில் தெரிவித்துள்ளார். மென்மையானவர் போலத் தெரிந்தாலும் கடுமையானவர் என்பது நெருங்கி பழகியவர்களுக்கு மட்டும் தெரியும். சற்று பிடிவாதமானவர் என்றால் மிகையில்லை. விட்டுக் கொடுக்கிறார் என்றால் அதன் அறுவடை ரணிலுக்கு சார்பானதாக இருக்கும். அதை அரசியல் ராஜதந்திரம் என்கிறோம்.


இன்றைய நிலையில் ரணில் இல்லாது போனால் ஐதேக சிதைந்து போய்விடும். அது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும். இப்போது ரணில் முன் உள்ள பிரச்சனை தான் ஜனாதிபதியாவதா? அல்லது பிரதமராக இருப்பதா என்பதே? அதற்கான காரணம் நாட்டின் முதன் மகனாகவும் , பாராளுமன்றத்தை கட்டுப்படுத்தக் கூடியவராகவும் தான் இருக்க வேண்டும் என விரும்புகிறார். அப்போதுதான் அவர் நினைப்பதை சாதிக்க முடியும். அதனால் ரணில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடலாம் அல்லது தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளக் கூடிய நம்பகமான ஒருவரை வேட்பாளராக்கலாம். அவர் சஜித்தாக இருக்காது.

சஜித்தின் ஆதரவாளர்கள் எனக் கட்சிக்குள் கொஞ்சம் பேர்தான் ஆதரவாளராக இருக்கிறார்கள். அநேகர் அவரது ஆதரவாளர்களாகி காட்டிக் கொடுக்கப்பட்டு அனாதரவாகியுள்ளனர். மைத்ரி , மகிந்த தரப்பு செய்த 51 நாள் சதிப் புரட்சிக்கு , சஜித் ஒத்துழைப்பதாக மைத்ரிக்கு மறைமுகமாக வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டார். அந்த வேதனையில் மைத்ரி " சஜித் , நம்பவே முடியாத ஒருத்தர்" எனத் சொன்னார். அதைச் சொன்ன மைத்ரியும் நம்பிக்கை கொள்ள முடியாத ஒருவர்தான் என்பது வேறு கதை.

சஜித் குறித்து சிலரோடு பேசும் போது , சஜித் வீடுகளை கட்டுகிறார். ஆனால் நாட்டைக் கட்டி எழுப்ப அவருக்கு பலம் இல்லை. ஆனால் சஜித் , ஜனாதிபதியானால் பெயருக்கு மட்டுமே ஜனாதிபதியாக இருப்பார். அவரை கட்டி மேய்க்கப் போவது , சக்தி தொலைக் காட்சி அதிபர் கிளி மகராசா மற்றும் டிரான் அலஸ்தான் என்கிறார்கள்.

பாட்டலி சம்பிக்கவும் , ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கப் போவதாக அறிவித்திருந்தார். அவர் திறமையான ஒருவர். ஆனால் அவர் ஐதேகவில் இருந்தவர் அல்ல. அவர் இன்னொரு கட்சியில் இருந்து வந்தவர். முன்னர் புரட்சிவாதியாக இருந்தவர். லிபரல்வாதி அல்ல. எனவே இவரும் மைத்ரி மாதிரி மாறி கடும் போக்கை மேற்கொண்டால் என பின் வரிசை ஐதேக உறுப்பினர்கள் அச்சப்படுகிறார்கள். அதனால்தான் அவரது வரவு - செலவு திட்ட வாக்களிப்பில் , ஐதேகவின் பலர் கலந்து கொள்ளாது, அவருக்கு ஐதேகவில் ஆதரவு இல்லை எனக் காட்டியதாக பலர் கருதுகிறார்கள். அண்மைக் காலத்தில் சம்பிக்க , தான் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கப் போவதாக கூறி, அதற்கான சில நடவடிக்கைளையும் செய்து வந்ததையும் அவதானிக்க முடிந்தது.

மைத்ரி , தனக்கு சுதந்திரக் கட்சியில் பலம் இருக்கும் என நம்பினார். ஆனால் அது வர வர குறைந்து கொண்டே போகிறது. ஐதேகவை விட்டு அவர்தான் ஒதுங்கினார். அதன் பின்னரே ஐதேக அவரை ஒதுக்கியது. அதன் பின் அவரது குறி கோட்டாவை மகிந்த தரப்பிலிருந்து பிரித்து சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆக்குவதாக இருந்தது. ஆனால் அது கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை பிரச்சனையால் இழுபறியாகி வந்தது.

இந்த நிலையில் மைத்ரி , மகிந்தவின் ஆதரவை பெற்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதற்காகவே ரணில் அரசைக் கவிழ்த்து, மகிந்தவுக்கு பிரதமர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு கீழிறங்கி செயல்பட்டார். அந்த சதி பெரும் தோல்வியில் முடிந்தது. அதனால் நடுத் தெருக்கு வந்தவர்கள் அவருக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள்தான். அத்தனை விடயங்களையும் அவர்கள் மேல் சுமத்தி விட்டு மைத்ரி தப்பிக் கொண்டார்.

அதன் பின் மொட்டுக் கட்சி ஜனாதிபதி அபேட்சராகும் மைத்ரியின் கனவும் கலைந்து போனது. மொட்டுக் கட்சியில் பெரும்பான்மையானோர் மைத்ரியை நேரடியாக எதிர்க்கின்றனர். மகிந்தவுக்கோ அல்லது பசிலுக்கோ, மைத்ரி மேல் துளி கூட நம்பிக்கை இல்லை. கடந்த வரவு -செலவு திட்ட வாக்கெடுப்பில், மைத்ரி தமது தரப்பின் ஆதரவை மகிந்தவுக்கு தருவதாகத் தெரிவித்திருந்தார். ஐதேகவின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களும் வரவு -செலவு திட்ட வாக்கெடுப்பில் சம்பிக்கவை தோல்வியடைய வைத்தது போல, இறுதி வாக்கெடுப்பில் சமூகமளிக்காமல் இருப்பார்கள் எனும் கணக்கு ஒன்றைப் போட்டனர். அது தப்புக் கணக்கானது. சம்பிக்கவின் விடயம் வேறு, இது வேறு.

ஐதேக பின் வரிசை உறுப்பினர்கள் அனைவரும் வாக்கெடுப்பில் அரசுக்கு சாதகமாக வாக்களிக்க முற்படுவது தெரிந்ததும், மைத்ரி ஐதேகவுடன் பேச்சு வார்த்தை ஒன்றை நடத்தினார். அதன் முடிவாக மைத்ரி ஆதரவு தரப்பு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தான் தோல்வியடைவதை மைத்ரி விரும்பவில்லை. அது மகிந்த தரப்புக்கு பெரும் ஏமாற்றம்தான்.

தொடர்ந்து மொட்டுக் கட்சியில் சிலரும், சுதந்திரக் கட்சியில் சிலரும் இணைப்புக்காக பேசி வருகிறார்கள். ஆனால் எந்த சமரசமும் இதுவரை இல்லை. அதனிடையே எதிர்வரும் காலங்களில், அதிகாரமற்ற ஜனாதிபதியாக பதவியைத் தொடர ஐதேக , மைத்ரிக்கு அடுத்த முறையும் ஆதரவளிக்கும் என பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் ஐதேகவில் உள்ள அநேகர் மைத்ரியை விரும்பவில்லை. ஆரம்பம் தொட்டே மைத்ரி, ஐதேகக்கு ஒரு ஆணியாகவே இருந்து வந்துள்ளார். ஹிருணிகா போன்றவர்கள் எமது வாக்குகளால் பதவிக்கு வந்து எமக்கே கேடு விளைவிக்கும், நன்றி கெட்ட ஒருவர் மைத்ரி என பாராளுமன்றத்தில் பகிரங்கமாகவே பேசுகிறார்கள். எனவே மைத்ரியின் அரசியல் 5 வருடத்தோடு, இம்முறை ஜனாதிபதி பதவி முடிவடைவதோடு , நிறைவடையும் என ஊகிக்க முடிகிறது.

இதனிடையே மகிந்த குடும்ப அரசியல் திருப்பங்கள், தினசரி நிறம் மாறிக் கொண்டே இருக்கிறது. மகிந்த இதுவரை யார் தனது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என சரியாக சொல்லவில்லை. அண்ணன் சமல்தான் முதலில் தேர்வாக இருந்தது. அவர் மற்றவர்களை விடப் பரவாயில்லை. ஆனால் சமல் இப்போது அதிலிருந்து ஒதுங்குவதாக அல்லது ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுவரை மைத்ரியோடு நெருக்கமாக இருந்த கோட்டா , இப்போது மொட்டு பக்கம் திரும்பியுள்ளார். ஆனால் மொட்டுக்குள் அவரை பலர் எதிர்க்கிறார்கள். அவரது கடுமையான இராணுவ ஆட்சி போன்ற சில நடத்தைகளால்தான் மகிந்த கடந்த முறை தோற்றார் என அவர்கள் நம்புகிறார்கள். அரசியல் என்பது அடக்குமுறை அல்ல என்பது அவர்களது வாதம். அத்தோடு சிறுபான்மையினரது வாக்குகள் அவருக்கு கிடைக்காது என அனைவரும் உணர்கிறார்கள். அவரோடு இருப்போர் இனவாதிகளாகவும் , இராணுவத்தினராகவும் இருப்பது பலரை அச்சுறுத்தவே செய்கிறது. மகிந்தவின் மனைவி சிரந்தி ஜனாதிபதி வேட்பாளரானால் , பௌத்த வாக்குகள் விழுவது கணிசமாக குறைந்து போகும். மட்டையை மகிந்த நிறுத்தினாலும் , மக்கள் அதற்கு வாக்களிப்பார்கள் என்றவர்கள் இங்கே எந்தவொரு கருத்தையும் சொல்லத் தயங்குகிறார்கள். காரணம் அவர் ஒரு கத்தோலிக்கர். அதனால் அது சாத்தியமில்லை என , மகிந்தவே அவரிடம் அண்மையில் சொல்லியிருந்தார்.

இதனிடையே கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை விடுவிக்கப்பட்டுள்ளதான தகவல்கள் வெளிவருகின்றன. அது உண்மையா? வதந்தியா என உறுதியாகவில்லை. அப்படி ஒரு நிலை வந்தால் , கோட்டா ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்க முடியும். சில நாட்களுக்கு முன் சிரந்தி மொட்டுக் கட்சியிலும் , கோட்டா சுயேட்சையாகவும் களம் இறங்குவதாக உள் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை விடுவிக்கப்பட்ட செய்தி கேட்டதும், மகிந்த அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கும் ஒரு முயற்சியில் ஈடுபட உள்ளார் எனும் ஒரு செய்தி வந்து அதிருகிறது. 19வது திருத்தச் சட்டத்தின் படி மகிந்தவால் போட்டியிட முடியாதே? ஆம்! அதனால்தான் கோட்டாவை மொட்டில் ஜனாதிபதி வேட்பாளர் ஆக்கிவிட்டு , மகிந்த சுயேற்சையில் , ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடிவெடுத்துள்ளார் இப்போது கசிந்துள்ள இன்றைய தகவல்.

19ம் திருத்தச் சட்டம் வந்த பின்னர் பதவிக்கு வரும் ஜனாதிபதிகளுக்கு அந்தச் சட்டம் செல்லுபடியாகுமேயல்லாமல் , பழையவர்களுக்கு அல்ல எனும் வாதம் ஒன்றை மகிந்த தரப்பு வைக்கிறது. தேர்தல் ஆணையாளர் , மகிந்தவை ஏற்றுக் கொள்ளாது நிராகரித்தால் உயர் நீதிமன்றத்துக்கு செல்வதும் , அதில் வெற்றி பெற்றால் மகிந்த ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்குவதும் இப்போதைய முயற்சி. அதுவும் சாதகமற்றதானால் மகிந்த, தேர்தல் மேடையில் ஏறி கோட்டாவை ஆதரிக்கலாம். அப்போது மொட்டுக்குள் உள்ள கோட்டா எதிர்ப்பு தணிந்து விடும் என ஒரு நம்பிக்கை சிலரிடம் உள்ளது. வேறு வழியில்லாமல் எதிர்ப்போர் கூட , கோட்டாவை ஆதரிக்க வேண்டியே வரும் என ஒரு சாராரும் , இது ஒரு பெரும் பிளவை ஏற்படுத்தும் என இன்னோரு சாராரும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ மாகாண சபை தேர்தல் வேண்டும் என எல்லோரும் வாயளவில் பேசினாலும் , அதை யாரும் முதன்மைப்படுத்தவில்லை. பவர் ஒப் பிரசிடண்ட் எனப்படும் ஜனாதிபதி தேர்தல் மீதுதான் கடும் பிரயத்னமாக எல்லோரும் உள்ளார்கள்.

இந்த நிலவரம் இன்றைய கணிப்புதானே தவிர இதுவும் நாளை மாறலாம்.
நிலை மாறும் உலகில் எதுதான் மாறாது

கருத்துகள் இல்லை: