புதன், 3 அக்டோபர், 2018

தமிழுக்கு எதுவுமே செய்யாத உ வே.சாமிநாதைய்யர் ஒரு தமிழ் தாத்தாவா? பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அதிரடி!


Krishnavel T S : அய்யா சுபவீ அவர்களால் வெளியிடப்பட்ட எனது 3ஆவது
நூலான 'உ.வே.சா தமிழ் தாத்தாவா? " நூலின் முன்னுரையில் இருந்து.......
இன்டியானா ஜோன்ஸ், என்னும் வரலாறு சம்பந்தப்பட்ட சாகச திரில்லர் வகையை சார்ந்த, ஆங்கில திரைப்படத்தை பலர் பார்த்திருப்பீர்கள், அதன் முதல் பாகத்தில், முதல் காட்சிகளில், கதாநாயகனான புரபசர் ஜோன்ஸ், வகுப்பில் பாடம் எடுக்கும் போது “Archeology is about FACT, not TRUTH” என்று சொல்லுவார். அந்த வரிகளை கொண்டே இந்த நூலை நாம் தொடங்குவோம்
அதாவது “அகழ்வாய்வு வரலாறு என்பது தரவுகளுடன் கூடிய உண்மை பற்றியது, பொதுவாக உண்மை என்று கருதப்படுவது பற்றியது அல்ல” என்பது அதன் பொருள்.
அது என்ன FACT மற்றும் TRUTH என்று நீங்கள் கேட்கலாம், இந்த இரண்டு ஆங்கில வார்த்தைகளுக்கு நேர் தமிழ் சொல் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், அந்த இரு சொற்களையும் ஆங்கிலத்திலேயே தொடர்கிறேன்.
சுமார் 1500 வருடங்களுக்கு முன் பூமி தட்டையானது என்று தான் மனிதர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள், அன்றைய காலகட்டத்துக்கு அது TRUTH, உண்மையானது என்று தான் சொல்லவேண்டும் ஆனால் FACT என்னவென்றால் பூமி எப்போதுமே உருண்டையானது என்பது தான்.
அல்லது நமது அய்யன் வள்ளுவன் சொல்லுவது போல சொல்லவேண்டும் என்றால்,
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

ஆக உண்மை என்று நம்பப்படுவது, பரப்பப்படுவது வேறு மெய்ப்பொருள் என்பது வேறு.
பார்ப்பனர், நம்மிடையே பரப்பிவைத்திருக்கும், பல்வேறு உண்மைகளில் ஒன்று தான், உ.வே.சா தமிழ் தாத்தா என்ற ஒன்று,
இந்த பட்டத்தில் அல்லது கூற்றில் உள்ள மெய்ப்பொருள் காணவிளைவதே இந்த நூலின் நோக்கம்.
சிறுவயதில், நான் பல ஊர் பள்ளிகளில் பயின்ற காலத்தில், பெரும்பாலான பள்ளிகளில் பார்ப்பன தமிழ் ஆசிரியர்களே இருந்தனர், அங்கெல்லாம் தமிழ் ஆசிரியரை ஐயா என்று தான் அழைக்கவேண்டும் என்பது வழக்கம்
முதல் முறையாக நெல்லை ஷாப்டர் பள்ளியில் 11ஆம் வகுப்பில் தான் ஒரு கிருஸ்துவர் தமிழ் ஆசிரியராக எனக்கு வந்தார், அந்த பள்ளியில் சேர்ந்த மூன்றாம் நாள் இரண்டாவது முறையாக தமிழ் பாட நேரத்தில், ஆசிரியர் “போன வகுப்பில் எதைப்பற்றி படித்தோம்” என்று கேட்க, “அய்யா, பாலை திணை பற்றி படித்தோம்” என்று நான் கூற மொத்த வகுப்பும் கொல்லேன சிரித்தது.
ஆசிரியர், வகுப்பை அதட்டி அமைதிபடுத்திவிட்டு, என்னை நோக்கி, இதற்கு முன் எந்த பள்ளியில், படித்தேன் போன்ற விபரங்களை கேட்டுக் கொண்டு, வகுப்பை பார்த்து, “இந்த பையன் இதற்கு முன் படித்த பள்ளிகளில் தமிழ் ஆசிரியரை அய்யா என்று அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது, இங்கே நமக்கு அந்த வழக்கம் இல்லை, இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது” என்று கண்டித்துவிட்டு.
என்னை நோக்கி “தமிழ் என்பது ஒரு மொழி அதை நினைத்து நீ பெருமைபடுவது தவறல்ல, ஆனால் அதை இப்படிதான் பயன்படுத்த வேண்டும் என்று புனிதப் படுத்தவேண்டாம், அப்படி தன்னை புனிதப்படுத்த நினைக்காத ஆங்கிலம் தான் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கிறது” என்று கூறினார்
முதல்முதலில் அப்போது தான் என் மனதில் “தமிழ் உலகின் சிறப்பான மொழிகளில் ஒன்று தான், ஆனால் அதற்காக அதை கடவுள் போல கருத்தி உயர்த்தி புனிதப்படுத்துவது தேவையில்லாத வேலை” என்பது மண்டையில் உறைத்தது.
அந்த தமிழ் ஆசிரியர் மேலும் கூறுவார் “தமிழை யாரும் காப்பாற்ற வேண்டிய அவசியம் கிடையாது, ஏனென்றால் தமிழ் அத்தனை செழுமையான மொழி, தமிழர் தன் வாழக்கை தரத்தை உயர்த்திக் கொண்டால் தமிழ் தனக்குரிய அங்கீகாரத்தை தானாக பெரும்”
அவர் எனக்கு கற்றுக் கொடுத்ததை ஒரு வரியில் சொல்வதென்றால் “தாய்மொழி குறித்து, பெருமைபடு, புனிதப்படுத்தாதே”
அதை நான் இப்போது நன்றாக உணருகிறேன், விற்பனை அழைப்பு மையங்களில் இருந்து, இந்த காப்பீடு திட்டம் வேண்டுமா? அந்த காப்பீடு திட்டம் வேண்டுமா? என்று வரும் அழைப்புகள் பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் வரும், அவர்களிடம் “நீங்க சொல்வது புரியவில்லை” என்று இரண்டு முறை தமிழில் சொல்வேன், அந்த அழைப்பு அவர்களால் உடனே துண்டிக்கப்படும்,
ஆனால் அடுத்த 5 நிமிடத்திற்குள் அதே நிறுவனத்தில் இருந்து மீண்டும் அழைப்பு வரும். ஆனால் இந்த முறை அழைத்தவர் தமிழில் பேசுவார். தமிழன் காப்பீடு வாங்க பணம் வைத்துள்ளான் என்பதால் அந்த நிறுவனம் தமிழில் பேச வேலைக்கு ஆள் வைக்கிறது, இந்த விற்பனை அழைப்பு மையங்களில் ஒரியா பிஹாரி மராத்தி கன்னடம் போன்ற மொழி பேச வேலைக்கு ஆள் கிடையாது, அவர்களுக்கு ஹிந்தி மட்டும் தான்
ஆக என் தமிழ் ஆசிரியர் கூறியது போல, தமிழன் வாழ்கை தரம் உயர்ந்தால், தமிழ் தானாக தனது அங்கீகாரத்தை பெரும்.
ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், மேலே குறிப்பிட்ட தமிழ் ஆசிரியரை நான் சந்திக்கும் வரை, தமிழ் தாத்தா என்றால் உ.வே.சா தான், தமிழ்நாட்டில் அச்சு இயந்திரத்தை அவர் தான் முதல் முதலில் வேலை செய்யவைத்தார், அவர் இல்லையென்றால் நாமெல்லாம் தமிழில் எப்படி ஆனா, ஆவன்ன என்று எழுதுவது கூட தெரியாமல் போய் எல்லா ஓலைசுவடிகளும் கரையான் வாயிற்கு போயிருக்கும் என்று என் தந்தை உட்பட பலரிடம் வாதம் செய்திருக்கிறேன்.
அந்த தமிழ் ஆசிரியரை சந்தித்த பின் தான் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பெருமை பட்ட கனகசுப்புரத்தினத்தை ஏன் உ.வே.சா அளவுக்கு யாரும் பாராட்டுவது இல்லை
“நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”
என்று எழுதிய, அவரை பாரதிதாசன் (பாரதியாரின் சீடர்) என்று மட்டுமே அடையாளம் காட்டவதில் இந்த பார்ப்பனர் ஏன் இத்துனை ஆர்வம் காட்டுகிறார்கள். என்ற சிந்தனைகள் வந்தன.
உ.வே.சா தான் தமிழ் தாத்தா என பலராலும் நம்பப்படும் இந்த பார்ப்பனர்கள் உ.வே.சா பற்றி கூறும் உண்மைகளை,
அதாவது TRUTH என்று நம்பப்படும் கருத்துகளுக்கும், FACT எனப்படும் தரவுகளுக்குமான வித்தியாசத்தை புரிய வைக்கும் முயற்சியே இந்த நூல்.
நூலை வாங்க விரும்பும் நண்பர்கள் www.tamilnool.club வலைதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்
விலை ரூ.60 மட்டுமே
ஏற்கனவே முன்பதிவு செய்த நண்பர்களுக்கு நூல் அனுப்பிவைக்கப் பட்டுள்ளது வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை உங்களை வந்தடையும்.

கருத்துகள் இல்லை: