வெள்ளி, 5 அக்டோபர், 2018

ஸ்டாலின் :மழைவெள்ள முன்னேற்பாடுகளை திமுகவினர் மேற்கொள்ளவேண்டும் அதிமுக அரசை நம்பி பயனில்லை

தினகரன் : சென்னை; மழை வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில்
திமுகவினர் ஈடுபட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தூங்கி வழியும் அரசை நம்ப வேண்டாம் என கூறியுள்ளர்,
கனமழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் திமுக-வினர் களமிறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என கோரியுள்ளார். வரும் 7-ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2015-ல் அதிமுக ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற செயலால் மக்கள் பெருவெள்ளத்தில் தத்தளித்ததை நினைவுகூர்ந்துள்ளார். மக்களின் நலன்கள் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவலையில்லை. எனவே தான் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள போதும் தேர்தல் வேலைக்காக மதுரை சென்றார் என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கையை கையாளும் பொறுப்பினை தட்டிக் கழித்து விட்டு, கட்சி வேலையைப் பார்க்கப் போய் விட்டதை உணர்த்துகிறது.அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாகம் சீர்கேட்டில் சிக்கி தவிப்பதாக சாடியுள்ளார்.


இப்படி பொறுப்பற்ற வகையில் அ.தி.மு.க ஆட்சியில் இருந்த முதல்வர்கள் அனைவரும் செயல்பட்டதால் தான் “சுனாமி”, “2015 டிசம்பர் பெரு வெள்ளம்” “வர்தா புயல்” “ஓகி புயல்” என்று பல்வேறு இயற்கை பேரிடர்களில் தமிழ்நாட்டு மக்கள் சிக்கி, சொல்லொனாத் துயரத்திற்கும், உயிர் சேதங்களுக்கும், பொருள் சேதங்களுக்கும் உள்ளாக நேரிட்டது. இயற்கைப் பேரிடரை கையாள்வதில் அ.தி.மு.க அரசுக்கு இருந்த அலட்சியத்தை மத்திய தணிக்கை அறிக்கையே சுட்டிக்காட்டிய பிறகும், முதலமைச்சர் இந்த முறை ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் கூட முதலில் “தேர்தல் வேலையை” கவனிக்க மதுரைக்குச் சென்று விட்டார் என்பது நிர்வாகத்தைப் பற்றியோ, மக்களின் நலன் குறித்தோ அவருக்கு கவலையில்லை என்பதை வெளிப்படுத்துகிறது என ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மிதமான மழைக்கே, சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே, பள்ளமும், படுகுழிகளுமாக காணப்படும் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகும் நிலையே காணப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகளுக்கு “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்ட பிறகுதான் அரசு தயாராகிறது என்பது வெட்கக் கேடானது. கால்வாய்கள் முழுவதும் தூர்வாரும் பணிகள், மழைநீர் வடிகால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணிகள், திறந்த வெளியில் இன்னும் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும் குப்பைகள் போன்றவற்றை அகற்றும் பணி இதுவரை முடிவடையவில்லை. எனவே தூர்வாரும் பணிகள், குப்பை அள்ளும் பணிகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை “போர்க்கால அடிப்படையில்” சென்னை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதே வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

வடகிழக்குப் பருவ மழையால் பாதிப்புகள் ஏற்படுமேயானால், ஆங்காங்கே திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், கழக செயல்வீரர்களும் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு நிவாரண பணிகளிலும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, மக்களை காப்பாற்றும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

கருத்துகள் இல்லை: